தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!
தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியிடம், தன் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (18-2-17) காலை 11 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பித்த முதலே திமுக உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராக முழக்கமிட்டதால் கூச்சலும் குழப்பமுமாக சென்ற அவையைக் கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் தனபால் திணறினார்.
இதனைத்தொடர்ந்து தி.மு.க.-வினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையை 1 மணிவரை ஒத்திவைத்தார். பின்னர் கூடிய வாக்கெடுப்பிலும் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால்... மீண்டும் 3 மணிவரை ஒத்திவைத்தார் சபாநாயகர். மிகப் பதற்றமான நிலை இருந்ததால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க.-வினர் சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதைத் தொடர்ந்து, அவைக் காவலர்களால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், மீண்டும் கூடிய அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததால்... அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிலையில், ''தி.மு.க உறுப்பினர்கள் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அவை செல்லுபடியாகுமா'' என்று மூத்த வழக்கறிஞர் சிராஜிதீனிடம் கேட்டோம். "தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு 110 உறுப்பினர்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தால்... அது, கேள்விக்குறிதான். சட்டசபை பொதுவாக அமைதியாக நடத்தப்பட வேண்டும். ஆனால், அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பதால் அவையை நடக்கவிடாமல் செய்வது தவறு. அப்போது அவர்களை வெளியேற்றிவிட்டு அவை நடத்துவதற்கான உரிமை தனபாலுக்கு உள்ளது. அதேநேரத்தில் தனபால் ஒரு சார்பாக மட்டுமே நடக்கிறார் என்ற புகாரை தி.மு.க உறுப்பினர்கள் கொண்டுவந்து சபாநாயகரை மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அவையை நடத்தவிடாமல் முடக்கும் வேலையைச் செய்யும்போது நடத்தப்படும் வாக்கெடுப்பு செல்லும். இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் அவை ஏற்றுக்கொள்ளலாம்" என்றார்.
No comments:
Post a Comment