Tuesday, February 21, 2017

நிறைகளைப் போற்றுவோம்!

By இரா. இராஜாராம்  |   Published on : 21st February 2017 01:42 AM  |   
புத்தரிடம் அவரது சீடர் ஒருவர் உலகிலேயே எளிதானது எது கடினமானது எது என்று இரு கேள்விகளைக் கேட்க அதற்குப் புத்தர் பிறரது குற்றம் குறைகளைக் காண்பதும், பேசுவதும் எளிதானது என்றும், தனது குற்றம், குறைகளை அறிவதும் அதனை நீக்க முயல்வதும் கடினமானது என்றும் கூறுகிறார்.
வீட்டில் குழந்தைகளின் இயல்பான தன்மையையும், சிறு சிறு சேட்டைகளையும் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர்களில் சிலர் குழந்தைகளை வசைபாடிக்கொண்டே இருப்பார்கள்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஆசிரியர்களாகட்டும், பெற்றோர்களாகட்டும் அவர்களிடமுள்ள தனித்தன்மையையும், திறமைகளையும் பாராட்டுவதை விடுத்து அவர்களின் குறைகளையே அடிக்கடி சொல்லிக்கடிந்து கொள்வதை வழக்கமாக்கி விடுகின்றனர்.
மேலும் பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு அவர்களைக் கண்டிப்பதும், குறை கூறுவதும் குழந்தைகளின் மனத்தில் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொரு பாராட்டும் குழந்தைகளைத் தன்னம்பிக்கை உடையவர்களாகச் செய்வதோடு, உற்சாகமடையவும் செய்கின்றது.
குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒருவருக்கொருவர் மற்றவர் குறைகளையே சொல்லிக்கொண்டிராமல், ஒருவர் மற்றவரிடமுள்ள நற்பண்புகளை, திறமைகளை அவை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அவ்வப்போது அதனை மனமாரப் பாராட்டி வந்தால் குடும்ப உறவுகள் மேம்படுவதோடு அதனைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் அந்த நற்பழக்கம் கைவரப்பெற்று ஒட்டுமொத்தக் குடும்பமே குதூகலமடையும்.
பாராட்டுக்கள் மனித மனங்களைக் குளிர்வித்து நற்செயல்களை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஒருவரது தனித்திறமைகளை வளர்த்தெடுக்கும் அற்புத உந்து சக்தியாகவும் பாராட்டுக்கள் அமைந்திடும்.
நல்ல நட்பானது தன் நண்பன் தவறு செய்யும் போது அதனைச் சுட்டிக்காட்டி நெறிப்படுத்துவதும், அவனிடமுள்ள தனித்திறமைகளைப் பாராட்டுவதுமாகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டுக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.
வெறும் முகஸ்துதிக்காகப் பாராட்டுதல் என்பது போலித்தனமானதாகும். பாராட்டுக்குரிய சிறு தகுதியாவது இருந்து பாராட்டி மகிழலாம். நமக்கு எதிரியாக இருந்தாலும் அவர் செய்யக்கூடிய நற்செயல்களைப் பாராட்டும் மனம் வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை மறக்கலாகாது.
சமீப காலத்தில் மக்கள் மனத்தில் பதிவுகளை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அவை எண்ணற்ற எதிர்மறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தராமல், நேர்மறையான செய்திகளான தனிநபர் சாதனைகள், நேர்மையாகத் தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்திடும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசியல் வாதிகள் பற்றிய செய்திகள் பராட்டுக்களுடனும், பல தொண்டு நிறுவனங்கள் செய்திடும் சேவைகள், நூறு சதவிகிதம் வருமான வரியை சரியாகச் செலுத்திடும் தொழிலதிபர் கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் பற்றியும், அவர்கள் ஆண்டுதோறும் அரசுக்கு முறையாக செலுத்தும் வருமானவரி விவரங்கள் போன்றவற்றையும், தற்கால இளைஞர்கள் புறக்கணித்து வரும் ஒப்பற்ற, உயர்வான, மிக அவசியமான தொழிலான வேளாண்மையை விரும்பிச் செய்திடும் இளைஞர்கள் பற்றியும், அதில் அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளையும் நேர்காணல் மூலம் விரிவாக எடுத்துரைப்பது, இன்னும் எத்தனையோ நேர்மறை நிகழ்வுகளை, நற்செயல்களைச், சாதனைகளைக் கண்டறிந்து அவற்றிற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் மக்கள் மனத்தில் நல் விளைவுகள் ஏற்பட்டு நேர்மறைச் சிந்தனைகளும், செயல்களும் பெருகும்.
பெருமையுடையவர்கள் பிறரது குற்றம் குறைகளை விடுத்து அவர்களிடமுள்ள நல்லவற்றைப் பேசுவார்கள். சிறுமையுடையவர்கள்தான் எப்போதும் பிறரது குற்றங்குறைகளையே பேசிக்கொண்டிருப்பர் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
தேர்வில் மதிப்பெண் குறைந்தால் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் கடிந்து கொள்வதோடு, வீட்டில் பெற்றோர்களும் அதனைச் சுட்டிக்காட்டிக் கடுமையாகக் கண்டிப்பதும், பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு அவர்கள் மனம் நோகப் பேசுவதும் அவர்களுக்குப் படிப்பில் வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்.
அதனால் தோல்வி என்பதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றிச் சில சமயம் கோழைத்தனமான முடிவுகளைத் தேடிக்கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகின்றனர். மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்கள் அல்ல.
ஒவ்வொரு மாணவனும் ஒரு தனித்தன்மை பெற்றவராய், ஒவ்வொரு விதத்தில் திறமையுடையவராய் இருப்பர். அவர்களுக்கு எதில் ஆர்வமும், திறமையும் இருக்கிறதோ அதில் அவர்களை ஈடுபடுத்தினால் அவர்களின் திறமை பளிச்சிடும்.
ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களும், தங்களோடு தொடர்புடையவர்களின் குறைகளையே கண்டறிந்து கொண்டிராமல் அவர்களிடமுள்ள சிறு சிறு திறமைகளையும், நற்செயல்களையும் கண்டறிந்து மனமாரப் பாராட்டி வந்தால் அவர்களிடமுள்ள நற்செயல்களும், திறமைகளும் அதிகரிப்பதோடு உற்சாகம் பெற்று உறவுகள் மேம்படும். ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலை உருவாகும். நல்லவை சிறிதளவே ஆயினும் பாராட்டி மகிழ்வோம், வாழ்த்தி வளம் பெறுவோம்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...