பழனிசாமிக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்களே..! பன்னீர்செல்வம் ஆவேசம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், “சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை ஜனநாயக மரபுக்கு விரோதமாக வெளியேற்றியுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக வாக்களிக்கும்போது மிகப்பெரிய மாற்றம் வரும். தர்மம் வெல்ல இன்னும் காலம் இருக்கிறது. நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம்.
ஒன்று, 15 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களை தொகுதிக்கு அனுப்பிவையுங்கள். ஒரு வாரம் கழித்து சட்டப்பேரவை கூட்டுங்கள் என்றோம். வாக்காளர்களைச் சந்தித்துவிட்டு மீண்டும் வந்த பிறகு சட்டப்பேரவையைக் கூட்டுங்கள். அதன் பிறகு அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும் என்றோம்.
இரண்டாவது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றோம். எவ்வளவோ வலியுறுத்தினோம். சபாநாயகர் ஒத்துக்கொள்ளவில்லை.
ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு எதிராக வாக்களித்துள்ள எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களைச் சந்திக்கும்போது கேள்வி கேட்கப்படும். எந்தக் குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தாரோ, இந்தக் குடும்பத்தின் ஆட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும்” என்றார்.
No comments:
Post a Comment