அமளிதுமளி சட்டமன்றம்... 1988-லும் 2017-லும் என்ன நடந்தது?
தமிழகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று கூடியிருந்த சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். சட்டசபையில் இன்று நடந்த களேபரம்போல் அன்று நடந்தது என்ன? அங்கு, அன்றும் இன்றும் நடந்த சம்பவங்கள் இதோ...
சட்டசபை அன்று...
*அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதா மற்றும் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் இருந்த கோஷ்டிப்பூசல், 24-12-1987-க்குப் பிறகு... எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் உச்சகட்டமடைந்தது.
*தற்காலிக முதல்வராக பதவியேற்ற நெடுஞ்செழியன், 28-12-1987 அன்று முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
*31-12-1987 அன்று, அ.தி.மு.க-வில் உள்ள பெரும்பான்மை நிர்வாகிகள் வற்புறுத்தலினால்.... முதலமைச்சர் பொறுப்புக்கு, தான் போட்டியிடப்போவதாக எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையார் அறிவித்தார்.
*ஜானகி அம்மையார் சார்பில் கவர்னர் குரானாவிடம் தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார் ஆர்.எம்.வீரப்பன்.
*அதிருப்தியில் இருந்த நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை தேர்வு செய்ததாக அறிவித்தனர். இதை, ஜானகி அணி ஏற்கவில்லை.
*ஜெயலலிதா அணியில் 29 எம்.எல்.ஏ-க்கள் இடம்பெற்றிருந்தனர்.
*அ.தி.மு.க-வின் 97 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக்கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது.
*தொடர்ந்து ஆட்சியமைக்க ஜானகிக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர் குரானா.
*இடைக்கால முதல்வர் பதவியை இழந்தார் நெடுஞ்செழியன்.
*6-1-1988 அன்று ஜானகி மந்திரிசபை பதவியேற்பு. 25-ம் தேதி கவர்னர் உரையும் அதைத் தொடர்ந்து 28-ம் தேதி ஜானகி அணி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என கவர்னர் அறிவிப்பு செய்தார்.
*முன்னதாக தனது அணியின் 29 எம்.எல்.ஏ-க்கள் ஜானகி அணிக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை ரகசிய இடத்தில் தங்கவைத்தனர் ஜெயலலிதா அணியினர். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தனக்குச் சொந்தமான மில்லில் எம்.எல்.ஏ-க்களை அடைத்துவைத்திருப்பதாக புகார் எழுந்தது.
*இதற்கிடையே டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது அணியை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுக்கே மட்டும் தாங்கள் ஆதரவு அளிக்கமுடியும் என ராஜீவ் மறுப்பு தெரிவித்தார்.
*அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் போர்வையில் வந்த சில அடியாட்கள் பெரும் வன்முறையை அங்கு நிகழ்த்தினர். இருதரப்பிலும் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் மண்டை உடைந்தது. இருக்கைகளில் ஆங்காங்கே ரத்தம் வழிந்துகிடந்தது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கட்சித்தாவிய 33 எம்.எல்.ஏ-க்களை பதவிநீக்கம் செய்வதாகவும் ஜானகி அம்மையார் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறுவதாகவும் தலையில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடி அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்.
*ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சட்டமன்றத்தில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக ஜானகி அம்மையார் மந்திரிசபையை 30-1-1988 அன்று மத்திய அரசு கலைத்தது. தமிழகத்தில் கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
*தொடர்ந்து ஏறத்தாழ ஒரு வருடம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி தொடர்ந்தது.
சட்டசபை இன்று....
*அ.தி.மு.க-வில் தற்போது ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றோர் அணியும் மோதி வருகின்றன. இந்த நிலையில், சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி வாங்கிய பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தால் ஆளுநரிடம் ஆட்சியமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
*சசிகலாவும், பன்னீர்செல்வமும் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதன் பிறகு சசிகலா அணியில் இருந்த சில எம்.எல்.ஏ-க்களும், எம்.பி-க்களும் பன்னீர்செல்வம் அணிக்குத் தாவினர். இதனால், தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை... கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்துவைத்தார்.
*அந்தக் கட்சி நிர்வாகிகளால் தற்காலிகப் பொதுச் செயலாளாராக நியமிக்கப்பட்டிருந்த சசிகலா, ''நான் முதல்வராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது'' என்று சபதமிட்டார். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
*இதனையடுத்து, சசிகலா, சிறைக்குச் செல்வதற்கு முன் கூவத்தூரிலிருந்த எம்.எல்.ஏ-க்களிடம் கலந்தாலோசித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டதுடன், அவரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
*தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து... ஆட்சியமைக்க உரிமை கோரினார், எடப்பாடி பழனிசாமி. அதனால், அவருக்கு ஆளுநர் ஆதரவளித்ததுடன் கடந்த 16-ம் தேதி பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன், அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதனையடுத்து, ''15 நாட்களுக்குள் தங்களுடைய பெரும்பான்மையைக் காட்ட வேண்டும்'' என்று எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் உத்தரவிட்டார்.
*இந்த நிலையில், பெரும்பான்மையைக் காட்டுவதற்காக சட்டசபைக்கு இன்று (18-2-17) எம்.எல்.ஏ-க்கள் (அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்) சென்றனர். இறந்துபோனதால் ஜெயலலிதா, உடல்நலமில்லாததால் கருணாநிதி, யாருக்கும் வாக்களிக்க விரும்பாததால் அருண்குமார் போன்றவர்களைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ-க்கள் இதில் கலந்துகொண்டனர்.
*காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தி.மு.க., காங்கிரஸ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார்.
*இதனால், சபாநாயகர் தனபாலை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சூழ்ந்துகொண்டு அமளியில் ஈடுபட்டனர். மைக், இருக்கை முதலியன உடைக்கப்பட்டன. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மிகவும் அமைதியாகவே இருந்தனர்.
*சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால், சபாநாயகர் வாக்கெடுப்பை 1 மணிக்கு ஒத்திவைத்தார். அந்த நேரத்தில் சபை ஊழியர் ஒருவர் மயக்கமடைந்தால், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
*பின்னர் 1 மணிக்குக் கூடிய வாக்கெடுப்பில், சபாநாயகர் தனபால்... அமளியில் ஈடுபட்ட தி.மு.க-வினரை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் கலைந்துசெல்லாமல் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர்... வாக்கெடுப்பை 3 மணிக்கு ஒத்திவைத்தார்.
*பின்னர் 3 மணிக்குக் கூடிய வாக்கெடுப்பில், தி.மு.க-வினர் சட்டசபையிலிருந்து வெளியேறாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவைக் காவலர்களுக்கும், தி.மு.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது. தி.மு.க-வினரை வெளியேற்றியபோது... எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், ''தன் சட்டையைக் காவலர்கள் கிழித்துவிட்டதாக''த் தெரிவித்தார்.
*தி.மு.க வெளியேறிய பின் நடந்த வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக தன் பெரும்பான்மையை நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வத்துக்கு 11 வாக்குகள் கிடைத்தது.
No comments:
Post a Comment