சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்? - சிறைத்துறை நிர்வாகம் விளக்கம்
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என சிறைத் துறை நிர்வாகத்திடம் விசாரித்த போது, “கடந்த முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த வி.வி.ஐ.பி. என்பதால் வெளியில் இருந்து உணவு, மருந்துகள், உடை,ஏ.சி.வசதி, உதவியாளர்கள் உள்ளிட்ட பல வசதிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் மட்டுமே. முதல்வர் இல்லை என்பதால் அவருக்கு அத்தகைய வசதிகள் வழங்கப்படாது.
சசிகலா தரப்பில் தங்களுக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் சிறையில் தனியாக ஏசி வசதியுடன் அறை, டிவி, செய்தித்தாள்கள், மேற்கத்திய ஸ்டைல் டாய்லெட், வெந்நீர், மினரல் வாட்டர், மருத்துவ வசதி, வெளியில் இருந்து உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்டவை கொண்டுவர அனுமதி கேட்டனர். இதில் பல வசதிகளுக்கு நீதிபதி அனுமதி மறுத்துவிட்டார்.
வருமான வரி செலுத்துபவர் என்பதால் ஏ- கிளாஸ் எனப்படும் முதல் வகை சிறை வசதி வழங்கப்படுகிறது. அதன்படி மின்விசிறியுடன் கூடிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் டிவி, மேற்கத்திய ஸ்டைல் டாய்லெட், வெந்நீர், மினரல் வாட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.
மருந்து, உணவு மற்றும் உடைகளும் சிறைத்துறையே வழங்கும். சசிகலா அறையிலே இளவரசியும் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 நீல நிற சேலை, 1 தட்டு, 1 சொம்பு, 1 நாற்காலி, 1 கட்டில் மெத்தை, தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை, பூஜை செய்ய சாமி படம் உள்ளிட்டவை வழங்கப்படும்.
சிறைத் துறையின் நேர விதிமுறைப்படி, காலை 6.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும். காலை 11.30 மணிக்கு மதிய உணவும், மாலை 4 மணிக்கு டீ அல்லது காபியும், மாலை 6.30 மணிக்கு இரவு சாப்பாடும் வழங்கப்படும். தாமதமாக வருவோருக்கு உணவு வழங்கப்படாது. தேவையெனில் உணவை வாங்கி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் உண்ணலாம்.
பெங்களூரு சிறையை பொருத்தவரை பெண்களுக்கு மூன்று வகையான வேலைகள் வழங்கப்படுகின்றன. எனவே சசிகலா,இளவரசிக்கு ஊதுவத்தி உருட்டுவது, மெழுகுவர்த்தி செய்வது, தோட்ட மற்றும் சமையல் பணி செய்வது போன்ற பணிகள் வழங்கப்படும். இருவரும் வயதானவர்கள் என்பதால் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்படலாம். இதற்காக நாளொன்றுக்கு கூலியாக ரூ. 50 வழங்கப்படும். இது பணமாக அல்லாமல் கூப்பனாக வழங்கப்படும். அதனை வைத்து சசிகலா தனக்கு தேவையான பிரஷ், பேஸ்ட், சோப், பேக்கரி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். சிறை தண்டனை காலம் முடிவடைந்த பிறகு செய்த வேலைக்கு தக்க கூலி பணமாக கொடுக்கப்படும்''என்றனர்.
4 ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சுமார் 6 மாதம் வரையே இதுவரை தண்டனை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு மற்றும் சீராய்வு மனுதாக்கல் செய்தாலும் சிறையில் இருந்து வெளியில் வருவது கடினமான ஒன்று என தெரிகிறது. எனவே ஏதாவது ஒரு முக்கிய பணிக்காக மட்டும் சில நாட்கள் பரோலில் வெளியில் வர முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment