Saturday, February 18, 2017


உங்கள் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் திறனை வெளிக் கொணர்வது எப்படி?




ஒவ்வொரு குழந்தையிடமும் நிச்சயம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கிடக்கும். அதனைக் கண்டறிந்து வளர்த்தெடுத்தால் மட்டுமே, அந்தத் திறமை மேம்பட்டு வளர்ச்சியடையும். குழந்தைகளின் திறன்களை எப்படி கண்டறிந்து, அதனை வளர்த்தெடுப்பது என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல வல்லுநர் சித்ரா அரவிந்திடம் பேசினோம்.

"இதில் பெற்றோர்களின் பங்கே அதிகம். குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்வது, முதல் மார்க் எடுப்பது, நடனம் ஆடுவது என வெளியில் தெரிவது மட்டும் குழந்தையின் திறமை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு வகுப்பறையில் 60 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் விளையாட்டில், படிப்பில், இசையில் திறன் மிகுந்தவர்கள் வெறும் 10 குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். 'அப்போ மத்த குழந்தைங்க திறன் இல்லாதவங்களா...?' என்று நீங்களாக அனுமானம் செய்து கொள்ள வேண்டாம்.

மீதம் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் செய்வதை 'அப்படி செய்யாத, சத்தம் போடத, அமைதியா வெளையாடு" என்று அடக்குவதை விட்டு ,அவர்கள் போக்கில் சென்று கவனியுங்கள். குழந்தைகளுடன் பேசும்போது அவர்களின் ஆர்வம் எதைப் பற்றியதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சில குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதை விட, அவர்களுடைய‌ நண்பர்களிடம்தான் அதிகம் பேசுவார்கள். அப்போது அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதையும் கவனியுங்கள். " என்றவர், அந்த திறன்களை எப்படி வளார்த்தெடுப்பது என்பதைப் பற்றியும் சொன்னார்.

"உங்கள் குழந்தையின் குரல் பேசும் போது நன்றாக இருந்தால் உங்கள் மொபைலில் ரெக்கார்ட் செய்யுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால் 'உன்னை பாட்டு கிளாஸ்ல சேர்த்து விடவா செல்லம்? உன் வாய்ஸ் நல்லா இருக்கு... பாட்டு கத்துக்கிடுறியா? என்று கேளுங்கள். அவர்கள் சம்மதத்துடன் குழந்தையை பாட்டு கிளாஸில் சேர்த்து விடுங்கள்.





சில குழந்தைகள், பிறவியிலேயே நன்கு வளையும் உடல் அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை ஜிம்னாஸ்டிக், நடனம் போன்றவற்றில் சேர்த்து விடலாம். சிறு வயதிலேயே கோர்வையாக பேசத் தெரிந்த குழந்தைகளை, பேச்சுப் போட்டியில் சேரச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். சிலர் டயம் சரியாக பார்ப்பது, வாய்ப்பாட்டை சரியாக நினைவில் கொள்வது என்று கணிதத்தில் சற்று கெட்டியாக இருப்பார்கள். அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி, சின்னச் சின்ன வாய்ப்பாட்டு கணக்கில் ஆரம்பித்து, தொடர்ந்து கணிதத்தில் ப‌யிற்சி கொடுங்கள்.

சில குழந்தைகள் லாஜிக்கலாக கோர்வையாக யோசிப்பது, வரையும் திறமை, ஒரு விஷயத்தை 3 கோணத்தில் யோசித்துப் பார்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆர்ட்டிஸ்ட் ஆக, ஆர்க்கிடெக்ட்டாக வருவார்கள். எளிதில் எல்லோருடனும் பழகும் குழந்தைகள், தலைமைப் பண்பு மிக்கவர்களாக வருவார்கள். ஒரு பேட்டரியை எடுத்து அதை பிரித்து அலசி ஆராய்ந்து ஓட வைக்கும் திறன் கொண்டவர்களுக்கு சயின்டிஸ்ட் அல்லது ஆராய்ச்சி பணிகளுக்கு சரியானவர்களாக இருப்பார்கள்.




மேலே சொன்ன அத்தனையும் நடக்க, பெற்றோர்களின் தொடர் ஊக்கம், அவை பிரஷர் தருபவையாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகளின் திறமைகள் பிரகாசமாக வெளிவரும். 'என் பையனுக்கு ஆர்கிடெக்சரில் திறமை இருக்கு...' என்று, அதில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு மட்டும் கொடுங்கள். அதைவிடுத்து அதையே நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். சிறு வயது ஆசைகள் வளர்ந்த பிறகும் தொடரலாம் அல்லது புதியதாக‌ ஓர் ஆசை தோன்றக்கூடும். அதிகமான நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை பெற்றோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

உங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் போக்கில் நீங்கள் செல்ல முடியும். அவர்களையே குறிக்கோளை உருவாக்கச் சொல்லி, அதில் பயணிக்க சொல்லுங்கள். எனவே உங்கள் ஊக்கங்களையும், உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனியுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தைகள் ஜொலிப்பார்கள்.

- கே.பாலசுப்ரமணி

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...