Friday, February 17, 2017


வெற்றியை பாதிக்கும் பதற்றத்தை தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி.




‘உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையை செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே... ‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு வேலையைச் செய்வார்கள் சிலர். அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய ‘அவுட்புட்’ கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக, கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்கொள்ளும்.

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும் பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன ஒரு குட்டிக்கதை...

கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும்... மாணவர்களிம் பயம் தொற்றிக்கொள்ளும். `இன்று என்ன கேள்வி கேட்பாரோ... யாரைக் கேட்கப் போகிறாறோ...’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள். இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார். இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.

அன்றையக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’ என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார்.

“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார். அதோடு, "இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச் சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம் விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.

அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான். "இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்...’’ என்றான்.

“தவறு.’’

“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 - 9 = 45” என்றான் மற்றொரு மாணவன்.

“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’

மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.

“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி, என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில் வைத்திருக்கிற்களா. என்று சோதிப்பதற்காகவே நான் அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான் சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது. எதற்காகக் கேட்கிறேன். என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் பதற்றம். ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால் தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.







ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு நழுவிப் போகலாம்.

மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி, முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள். அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களை புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல... அவர்களின் நல்உறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும் நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.

இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள் ‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு, இறைவனின் அருள் கிடைக்கும் வரும் வரை நாம் பொறுமையோடு இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள்.

இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல... எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில் ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்; பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப் பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே அடைய முடியும். பதற்றத்தை தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்போம்..!

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...