யாருக்கும் வெட்கம் இல்லை!
ப.திருமாவேலன் - படம்: ஆ.முத்துக்குமார்
சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வத்தை உத்தமராக உருவகப்படுத்துவதும், சசிகலாவை ஜனநாயகப் போராளியாக மாற்ற முயற்சிப்பதும் வெட்கம்... மகா வெட்கம்; கேவலம்... மகா கேவலம்!
ஜெயலலிதா இதுவரை நடுநாயகமாக இருந்து பங்கு பிரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பயந்துகிடந்தன இந்த இரண்டு தரப்புகளும். இப்போது ‘தலையாரி’ செத்துப்போனதும் பங்காளிகளுக்குள் சண்டை வருவதைப்போல சசிகலாவும் பன்னீர்செல்வமும் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இதுதான் அ.தி.மு.க-வில் நடக்கிறது. ‘ஜனநாயகம் மீட்போம்’ என்று சசிகலா சொல்வதைப் பார்க்கச் சகிக்கவில்லை. ‘அறப்போராட்டம்’ என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்வதைப் பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது.'
பிப்ரவரி 5-ம் தேதிக்கு முன்பு வரை இவர்களுக்குள் அதிகாரம் செலுத்துவதில் மோதல் இல்லை; சம்பாதிப்பதில் மோதல் இல்லை; பங்கு பிரிப்பதில் மோதல் இல்லை; அராஜகத்தில் மோதல் இல்லை; சாதி அரசியலில் மோதல் இல்லை; அநீதி நடவடிக்கைகளில் மோதல் இல்லை. இப்போது மோதல் வர என்ன காரணம்? இதுவரை கட்சியைக் குத்தகைக்கு விட்டு கல்லா கட்டிவந்த சசிகலா குடும்பம் (மன்னார்குடி குடும்பம் என்று இனி சொல்லக் கூடாது. பாவம்... அந்த ஊர் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?!) இப்போது நேரடியாகவே களத்தில் குதிக்கிறது. இதுவரை இவர்களைத் தடுக்க ஜெயலலிதா இருந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மர்மமான முறையில் மறைந்துபோனார். அவரால் விரட்டப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து சசிகலாவை வளைத்துவிட்டார்கள். இனிமேல் பன்னீர் முகமூடி எதற்கு என்று தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒன்றல்ல மூன்று முறை சிம்மாசனத்தில் தூங்கிய பன்னீர், இப்போதுதான் விழித்துக்கொண்டதாக நடிக்கிறார்.
சசிகலாவைக் கெட்டவராக நினைக்கும் பாவப்பட்ட தமிழ்நாட்டு மக்கள், பன்னீரை நல்லவராக நினைக்கிறார்கள். கெட்டவரை எதிர்த்து மோதுபவர்கள் எல்லோரும் நல்லவராகத்தான் இருக்க முடியும் என்று நம்பும் அப்பாவிகள். அப்படி ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டுக்கு இன்னமும் வரவில்லை. கெட்டவரை எதிர்த்துக் கெட்டவரே மோதும் நிலைமைதான் தொடர்கிறது.
சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதிராக அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே இருந்து ஒரு குரல் கிளம்பியிருக்கிறது. அது பன்னீர்செல்வம் என்பதுதான் அவர் பக்கம் இருக்கும் ஒரே ஒரு தார்மிக நியாயம்.
129-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் (அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது என்றாலும்!) சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஆளுநர் இழுத்தடிப்பது மட்டுமே சசிகலாவின் ஒரே ஒரு தார்மிகக் கோபம்.
ஆனால், தமிழ்நாடு இவர்கள் இருவருக்கும் இல்லாத பெருமைகளை எல்லாம் சூட்டிச் சிங்காரித்துக்கொண்டிருக்கிறது.
வானத்தில் இருந்து தேவதூதர் வந்துவிட்டார் என்பதைப்போல பன்னீருக்குப் பன்னீர் தெளிக்கப்படுகிறது. முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, அலைகடலில் அமைதியாகப் போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது மறக்கப்பட்டுவிட்டது. ‘பன்னீர் சப்போர்ட்’ முழக்கம் முளைக்கிறது. கருணாநிதி எந்தக் கேள்வியைக் கேட்டாலும், பதில் சொல்லாமல், ‘இதைக் கேட்பதற்குக் கருணாநிதிக்கு அருகதை இல்லை’ என்ற நாகரிகப் பதிலைத்(?) தந்தவர் பன்னீர்செல்வம். இன்று கருணாநிதியின் மகனைப் பார்த்துச் சிரிக்கிறார். காருக்கு வழிவிடுகிறார். கொடியேற்றுவதைப் பார்க்க வரச் சொல்கிறார் என்றதும் நயத்தக்க மாண்பாளர் ஆகிப்போகிறார் பன்னீர். அவரை ‘அண்ணா’ என்கிறார் பொன்னையன். சமாதியில் படுத்திருக்கும் அண்ணா புரண்டு படுத்திருக்கலாம். டிசம்பர் 4-ம் தேதிகூட `அம்மா ஓய்வெடுக்கிறார்’ என்று சொன்ன பொய்யய்யன் அவர். ‘சசிகலாவைச் சுற்றி ரௌடிகளாக இருக்கிறார்கள்’ என்று மதுசூதனன் சொல்வதைக் கேட்டு, வட சென்னையில் பலருக்கும் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.
இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான், ‘அ.தி.மு.க-வின் சொத்தை, ஜெயலலிதாவின் சொத்தை மீட்போம்’ என்கிறார்கள். முதலில் இவர்களிடம் இருந்து தமிழ்நாட்டின் சொத்துகள் மீட்கப்பட வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய் பணம் எடுக்கப்பட்டு, புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சேகர் ரெட்டியுடன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் மொட்டை போட்டுக் காட்சியளித்தவர் பன்னீர்செல்வம். மதுரை பி.ஆர்.பி-க்கும் அவருக்குமான தொடர்பு உயரமானது; ஆழமானது. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் வேண்டாதவர் ஆனதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பன்னீருக்கு வைகுண்டராஜன் செய்யும் உதவிகள் இன்னும் வெளிச்சத்துக்கு வராதவை. தனது நாற்காலி ஆடிக்கொண்டிருக்கும்போதே, முறைகேடு காரணமாக ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஞானதேசிகனுக்கும் அதுல் ஆனந்துக்கும் பன்னீர் பதவி வழங்கிய பதற்றத்தின் பின்னணி என்ன? ‘கருணாநிதியுடன் கைகோத்து தி.மு.க ஆட்சியிலும் மிடாஸ் சரக்கை விற்றவர் சசிகலா’ என்று இன்று குற்றம்சாட்டும் நத்தம் விசுவநாதன்தானே அன்று இவர்களுக்குள் மீடியேட்டர்?
இப்படி பன்னீருக்கு நேர்மை முகமூடி போடப்படுகிறது என்றால், சசிகலாவுக்குத் தத்துவார்த்த முகமூடி அணிவிக்கப்படுகிறது.
சூத்திர ஆட்சியைக் காப்பாற்றப் புறப்பட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி. பக்கத்து நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி ஏன் உட்கார்ந்துள்ளார் என்றுகூட அவர் அறியவில்லை. சசிகலா பதவி ஏற்கவில்லை என்றால் சுவாமி தீக்குளித்து விடுவார்போல. சந்திரலேகாவின் முகம் மறந்து போயிற்றா... உயர் நீதிமன்றக் காட்சி மறந்து போயிற்றா? எல்லாவற்றையும் ஒரு ‘புராஜெக்ட்’டாக அவர் எடுத்துச்செய்தால் ஆட்சேபனை இல்லை. மோடியின் பாக்கெட்டில் உட்கார்ந்துகொண்டு இந்தியாவையே மிரட்டுவதுதான் எரிச்சலைத் தருகிறது. ‘தி.மு.க வந்தால் புலி வந்துவிடும்’ என்றாராம் சுவாமி. ம.நடராசன் தஞ்சாவூரில் கட்டியது முள்ளிவாய்க்கால் முற்றமா... முத்தமிழ் மன்றமா? கதர்புலி நெடுமாறனும் கரும்புலி வைகோவும் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் சுவாமி? கறுப்புச் சட்டைக்காரர்களும் தமிழ்த்தேசிய வாதிகளும் சசிகலாவுக்கும் நடராசனுக்கும் பெரும் ஆதரவு காட்டுகிறார்கள். ஆளுநர் மாளிகை என்ற கள்ளவாசல் வழியாக பா.ஜ.க உள்ளே நுழையப் பார்க்கிறது என்பது உண்மைதான். அதற்காக சசிகலா நடத்துவது திராவிட ஆட்சி ஆகிவிடுமா?
சசிகலா இன்னும் கோட்டைக்குள் போக வில்லை. அதற்குள், ‘சசிகலா சொன்னால் கொலையும் செய்வேன்’ என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர். ‘பன்னீர் செல்வத்தின் உடம்பில் கையே இருக்காது’ என்கிறார் இன்னொரு சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டில் டி.ஜி.பி இருக்கிறாரா, சென்னைக்கு போலீஸ் கமிஷனர் இருக்கிறாரா, தமிழ்நாட்டுக்கு நிரந்தர முதலமைச்சரும் இல்லை; நிரந்தர ஆளுநரும் இல்லை என்றால், போலீஸ்கூடவா இல்லை?
எட்டு கோடி மக்களின் பிரதிநிதியான தமிழ்நாட்டின் முதலமைச்சர் பன்னீர் செல்வம், ஒரு வீட்டின் அறையில் அவரின் சட்டையைப் பிடித்து இழுத்து மிரட்டப்பட்டுள்ளார். (இதற்கு மேலும் நடந்ததை அவர்தான் சொல்ல வேண்டும்!) ஒரு முதலமைச் சருக்குப் பாதுகாப்பு அதிகாரிகள் ஏழு பேர் உண்டே. அவர்கள் எங்கே போனார்கள்? முதலமைச்சரைப் பாதுகாத்தார்களா... இல்லையா? அவர்கள் மீது வழக்குப் போட வேண்டாமா? சசிகலாவுக்காக வரிந்துகட்டிக்கொண்டு ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்புகள் பற்றி பக்கம்பக்கமாகப் பேசும் எந்தத் தலைவராவது இதைப் பற்றி கேள்வி எழுப்பினார்களா?
அறுதிப் பெரும்பான்மை தனக்கு இருக்கிறது என்று சசிகலா பட்டியல் கொடுத்திருக்கிறார். தனக்கு ஆதரவான உறுப்பினர் பட்டியலைப் பன்னீரால் தர முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் சசிகலாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்து அவரைப் பெரும்பான்மை நிரூபிக்கச் சொல்லியிருக்க வேண்டும் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அதை விட்டு விட்டு சென்னைக்கே வராமல் மும்பையில் போய்ப் பதுங்கியதும், சென்னைக்கு வந்த பிறகும் முடிவே சொல்லாமல் (பிப்ரவரி 13-ம் தேதி இரவு வரை) மூச்சுப் பயிற்சியில் உட்கார்ந்திருப்பதும் மத்திய அரசின் உத்தரவால் என்றால், தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றிபெற முடியாது. திருட்டுத்தனமாகவாவது வெற்றி பெறலாம் என்று பா.ஜ.க நினைப்பதாகப் பொருள். ‘ஆளுநர் நியாயமாகத்தான் செயல்படுகிறார்’ என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் சொல்கிறார்கள். செயல்படாத ஒருவர் செயல்பட்டதாக அவர்கள் கண்ணுக்கு மட்டும் எப்படித் தெரிகிறது? அவர்களுக்கு இருப்பது ஞானக்கண்ணா? பன்னீரைக் கையில் வைத்திருப்பது, இதன் மூலமாக சசிகலாவை மிரட்டுவது, சசிகலா பணிந்ததும் பன்னீரைக் கழற்றிவிடுவதுதான் பா.ஜ.க-வின் தந்திரம். ஜெயலலிதா இருக்கும்போது அவரது தலைமுடியைக்கூடத் தொட தைரியம் இல்லாதவர்கள், அவர் இறந்ததும் அ.தி.மு.க-வின் மணிமுடியைப் பறிக்கத் திட்டமிடுகிறார்கள்.
இவர்களாவது ஆட்சியில் இருந்துகொண்டு கேவல அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி அதிகாரம் இல்லாமலேயே ஆடுகிறது. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரா, நடராசன் கட்சித் தலைவரா என்ற சந்தேகம் வருகிற அளவுக்குப் பேசுகிறார். அவரும், மூத்த கம்யூனிஸ்ட்டோ ‘முக்குலத்து’ கம்யூனிஸ்ட்டோ தா.பாண்டியனும் இருக்கும் கட்சியை இன்னும் தரைமட்டத்துக்குக் கொண்டுபோகாமல் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிடுவதே சாலச்சிறந்தது.
இதில் தி.மு.க எதிலும் ஆர்வம் காட்டாத ‘நல்ல பிள்ளையாக’ ஒதுங்கிவிட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 89 உறுப்பினர்களைக்கொண்ட பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., தமிழ்நாட்டில் கடந்த ஒருவார கால ஜனநாயக நெறிமுறை மீறல்களை வெளிப்படையாகக் கண்டித்து தடுத்திருக்க வேண்டும். இன்று அ.தி.மு.க-வுக்கு நடப்பது நாளை தி.மு.க-வுக்கு நடக்கலாம். யாருக்கும் நடக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்படவிடாமல் முடக்கி வைத்து தலைமைச் செயலாளரையும் டி.ஜி.பி-யையும் போலீஸ் கமிஷனரையும் கிண்டி ராஜ்பவனுக்கு வரவழைத்து ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் ‘மகாராஷ்டிரா’ ஆளுநர். அவருக்குத் தமிழ்நாடு ‘சப்ஸ்ட்யூட்’.
‘ஆட்டுக்கு தாடி எதற்கு... மாநிலத்துக்கு ஆளுநர் எதற்கு?’ என்றார் பேரறிஞர் அண்ணா. சின்னத்தம்பிகள் ஆளுநரிடமே போய் மனு கொடுக்கிறார்கள். ‘ஆளுநர் என்றால் தீயணைப்பு வண்டி மாதிரி. சும்மாதான் நிற்கும். தீ பிடித்தால் உடனே அணைக்க வேண்டும்’ என்றார் மூதறிஞர் ராஜாஜி. இங்கே வண்டியே தீ மூட்டுகிறது; பரவட்டும் எனக் காத்திருக்கிறது. எல்லா பிரச்னைகளிலும் தங்களுக்கான ஷேர் என்ன என்று திட்டமிடும் மனிதர்களே தலைவர்களாகிப் போனார்கள். வெட்கம், மகா வெட்கம்! கேவலம்... மகா கேவலம்!
No comments:
Post a Comment