எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவிற்கு வந்த, அவரது விசுவாசிகளால், சென்னைமாநகரம் நேற்று குலுங்கியது. ஏராளமானோர் குவிந்ததால், அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்தனர். அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் இருந்து அணிவகுத்து வந்த வாகனங்களால், முக்கிய சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. விழாவில்,
ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவும், தமிழ்நாடு, 50ம் ஆண்டு பொன்விழாவும், சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது.
இதற்காக, பிரமாண்டமான பந்தலும், 35 ஆயிரம் பேர் அமரும் வகையில், இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அமரும் வகையில், மேடையும் பெரிதாக அமைக்கப்பட்டு இருந்தது.
விழாவிற்கு, சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். விழா துவங்கியதும், மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த,எம்.ஜி.ஆர்., - ஜெ., படங்களுக்கு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
திட்டப்பணிகள்
அதன்பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, எம்.ஜி.ஆர்., படத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் நிறைவேற்றப்பட்ட, 18.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நினைவு தபால் தலையை, முதல்வர் பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா சிறப்பு மலர், எம்.ஜி.ஆர்., சட்டசபை உரை தொகுப்பு, எம்.ஜி.ஆர்., எழுச்சி மிகு உரைகள், எம்.ஜி.ஆர்., பொன்மொழிகள் தொகுப்பு, எம்.ஜி.ஆர்., மாண்பை எடுத்துரைக்கும், புகைப்படத் தொகுப்பு ஆகியவற்றையும், முதல்வர் வெளியிட்டார்.விழாவில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர்.
இந்தவிழாவில் பங்கேற்பதற்காக, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அ.தி.மு.க., தொண்டர்கள்
மற்றும் பொதுமக்கள், பேருந்து உட்பட, பல்வேறு வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். வெளியூர்களில் இருந்து, நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட வாகனங்கள், நேற்று காலை, சென்னையை நெருங்க துவங்கின.
இதனால், அதிகாலை முதல், சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன நெரிசல் அதிகரித்தது. ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு - பரனுார், தொழுப்பேடு, வானகரம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள், பல கி.மீ., துாரத்திற்கு அணிவகுத்து நின்றன.
அ.தி.மு.க., கொடி கட்டிய வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை.சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, கோயம்பேட்டில் உள்ள அரசு மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களுக்கு, வெளியூர் பேருந்துகள் தாமதமாக வந்து சேர்ந்தன.
கார்கள் உள்ளிட்ட வாகனங்களில், சென்னைக்கு வந்தவர்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறினர். சென்னைக்கு வரும் வாகனங்களை நிறுத்த, போலீசார்வெவ்வேறு இடங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.எனினும், ஏராளமான வாகனங்கள் குவிந்ததால், மெரினா கடற்கரை சாலை, அண்ணா சாலை என, அனைத்து இடங்களிலும், வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன.விழாவில், பங்கேற்க வந்தவர்கள், மெரினா கடற்கரையில் குவிந்தனர்.மெரினா சர்வீஸ் சாலை, வெலிங்டன் கல்லுாரி என,
அனைத்து இடங்களிலும், வாகனங்கள் நிறுத்தப் பட்டன. மேற்கொண்டு இடமில்லாததால், குறுகிய தெருக்களில் எல்லாம், வாகனங்களை நிறுத்தினர். ஏராளமானோர் சென்னை வருவர் என தெரிந்திருந் தும், மாநகராட்சி நிர்வாகம், போதிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை.
பேனர்கள்
விழாவையொட்டி, அண்ணா சாலை முழுவதும், நடைபாதைகளை ஆக்கிரமித்து, ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.விழாவிற்கு வருவோர் செல்வதற்காக, பேனர்கள் அருகே, சாலையோரம் தடுப்புகளை அமைத்து, போலீசார் தனி வழிஏற்படுத்தியிருந்தனர்.
விழாவில், தமிழகம் முழுவதுமிருந்து, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் ஏராளமானோர் குவிந்தனர். இது, கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா என்பதால், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்பது உட்பட, ஏராளமான மக்கள் நலத்திட்டங்களையும், முதல்வர்பழனிசாமி அறிவித்தார்.
'டாஸ்மாக்' கடைகளில்கரை வேட்டிகளால் நெரிசல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, நேற்று சென்னை வந்த, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் மற்றும், அ.தி.மு.க., தொண்டர்கள், மெரினா கடற்கரையில் உள்ள, தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட்டனர். மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். ஏராளமானோர், 'டாஸ்மாக்' கடைகளையும் முற்றுகையிட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமைகளில், 'குடி'மகன்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று விழாவிற்கு வந்தவர்களும், கடைகளை முற்றுகை யிட்டதால், பெரும்பாலான கடைகளில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர்,அ.தி.மு.க., கொடிகளை கைகளில் ஏந்தியபடியே, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கினர்.
அனைத்து கடைகளிலும், சரக்கு விற்பனை அமோகமாக நடந்தது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, ஓட்டல்கள், சாலையோர கடைகளிலும், நேற்று விற்பனை அமோகமாக இருந்தது.
* விழாவில், திரையுலகில், எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்த, நடிகையர், லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, குமாரி சச்சு உட்பட, பலர்கவுரவிக்கப்பட்டனர். நடிகர் பாக்யராஜ்,பின்னணி பாடகியர், சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வசனகர்த்தா ஆரூர் தாஸ், பாடலாசிரியர் கள்கவிஞர் முத்துலிங்கம், செங்குட்டுவன், சண்டை பயிற்சியாளர் ராமகிருஷ்ணன், ஒப்பனை கலைஞர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பொன் விழாவை யொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
* தென் மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள், விமான நிலையம் அருகே, சாலையோரம் வாகனங்களை நிறுத்தினர். வாகனங்கள் மீதேறி, விமான நிலைய ஓடுதளத்தில், விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை, ஆவலோடு பார்த்தனர்.
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களை சேர்ந்தவர்கள், ஏராளமானோர், 'மெட்ரோ' ரயிலில் பயணித்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்தோரும், மெட்ரோ ரயிலில், 'ஜாலி'யாக பயணம் செய்து ரசித்தனர். இதனால், வழக்கத்தை விட, மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- நமது நிருபர் -