Tuesday, October 2, 2018



காந்திஜி கொண்டாடிய பிறந்தநாள்

By முனைவர் அ. பிச்சை | Published on : 02nd October 2018 02:02 AM

 |அக்டோபர் 2, 1947. அன்றுதான் அண்ணல் காந்தி, தனது 78 வயதை நிறைவு செய்து, 79-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். தனது பிறந்த நாள் ஆரவாரமின்றிக் கொண்டாடப்பட வேண்டும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனாலும் அண்மையில் விடுதலை பெற்ற இந்திய மக்களும், வெளிநாட்டின் பல அமைப்புகளும், அந்நாளை விமரிசையாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

அதற்கு முந்தைய நாளான அக்டோபர் 1 அன்றே பலரும் ஆசி வேண்டி அண்ணலைச் சந்தித்தனர். அவர் அனைவரையும் சந்தித்தார். ஆனால், தனக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த மருத்துவர்களை திருப்பி அனுப்பி விட்டார். பென்சிலின் மருந்து செலுத்தினால் காய்ச்சல் விரைவில் குணமாகும் என்று மருத்துவர்கள் கூற, ராம நாமத்தை ஜெபிப்பதுதான் எனது பென்சிலின், பிரார்த்தனையால் சாதிக்க முடியாததை பென்சிலின் மருந்து சாதிக்கும் என்று என்னால் ஏற்க முடியவில்லை எனப் பதில் உரைத்தார்.
அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது, வகுப்புவாத வன்முறையால் நம்மை நாமே அழித்துக் கொள்ளுகிறோம். இந்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து நாம் விழித்தெழ வேண்டும். மிகுந்த வருத்தத்தைத் தருகிற இத்தகைய நிகழ்வுகளைக் காணும் ஒரு பார்வையாளனாக நான் இவ்வுலகில் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்.

மக்கள் வன்முறையைக் கைவிடுவதற்கும் நீண்ட உண்ணா நோன்பு மேற்கொள்ளலாமா என எண்ணினார். அதற்கு அது ஏற்ற தருணம் அல்ல என்பதால் 24 மணி நேர உண்ணா நோன்பை, 1-ஆம் தேதி மாலையிலிருந்து தொடங்கினார்.

மறுநாள், அதாவது அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்று வழக்கம் போல அதிகாலையில் துயிலெழுந்தார். காலைக் கடன்களை முடித்தார். கைராட்டையில் நூல் நூற்றார். கீதை சுலோகங்களைக் கேட்டார். பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இறைவா! இதனைக் காண்பதற்கா என்னை இன்னும் விட்டு வைத்திருக்கிறாய்? ஆனாலும் நான் கலங்கவில்லை. நம்பிக்கையைக் கைவிடவில்லை. உன் கருணை இருக்கும் வரை நான் போராடுவேன். என் மக்களின் மனதை மாற்றுவேன். என் முயற்சியில் வெற்றி பெறுவேன், அல்லது மரணத்தைத் தழுவி உன் காலடியில் சரணடைவேன் இதுவே என் சபதம் என அண்ணல் உறுதி ஏற்றார்.




காலை மலர்ந்தது. பார்வையாளர்களைச் சந்திக்க பாபுஜி தன் இருக்கையில் அமர்ந்தார். இருமல் விடாது தொடர்ந்தது. அவரது உடலும் அதிர்ந்தது. அதனால் அவர் சிரமப்பட்டார். அருகிலிருந்த தேவதாஸ் காந்தி சிரமப்படாதீர்கள்... சிரமப்படாதீர்கள் என்றார். ஆனால், அண்ணலோ எதுவும் பதில் பேசவில்லை.

வந்தவர்கள் அனைவரும் சுதந்திர இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்துரைத்தனர். கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன் தனது மனைவி எட்வினா மவுன்ட் பேட்டனோடு வந்து காந்திஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அன்று காலையிலேயே மகாத்மாவை தரிசித்தவர்களில் முக்கியமானவர் அன்றைய துணைப்பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல். பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, ஜி.டி.பிர்லா இருவரும் அண்ணலைச் சந்தித்து ஆசி பெற்றனர். ராஜகுமாரி அமிர்த கவுர், அமைச்சர்கள், சீக்கிய மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் என அனைத்துப் பிரிவினரும் சந்தித்தனர்.

அங்கு குழுமியிருந்தோர் காந்திஜிக்கு நீண்ட ஆயுளை அருளுமாறு பிரார்த்தனை செய்தனர். அதனைக் கண்ணுற்ற காந்திஜி பலவீனமான முறையில் புன்னகை செய்து, தலையை ஆட்டினார். அவர்களுடைய வாழ்த்துகளை முழுமனதின்றி ஏற்றுக் கொண்டார்.
அன்று காலையில், அண்ணல் விரும்பியபடி, ஒரு சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பண்டித நேரு, கே.எம்.முன்ஷி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். பல மதங்களின் புனித நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகங்கள் அங்கே படிக்கப்பட்டன.
சுதந்திர நாடான இந்தியா, அதன் சகோதர நாடான பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளின் அனைத்து மக்களுக்கும் நிறைந்த அமைதியையும் நீண்ட வாழ்வையும் இறைவன் அருள வேண்டும் என்பதே அண்ணலின் பிறந்தநாள் பிரார்த்தனை என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

அன்று பேசிய பிரதமர் நேரு, வல்லமை மிகுந்த பிரிட்டிஷாரிடமிருந்து அஹிம்சை வழியில் நமக்கு விடுதலை பெற வழிகாட்டியவர் அண்ணல் காந்தி. ஆனால் இன்று மக்கள் அராஜக வழியில் அடியெடுத்து வைக்கின்றனர். இத்தகைய செயல் தேசத்துக்கும் தேசப் பிதாவுக்கும் செய்யும் துரோகம் என முழங்கினார். சர்தார் படேல், காந்திஜியின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்கவில்லையென்றால் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் பொருளே இல்லை. கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் நமது நாட்டின் கௌரவத்தின் மீது விழுந்த பலத்த அடி ஆகும். தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்ற மடத்தனத்தை மகாத்மா என்றும் ஏற்கமாட்டார் என்றார்.
மூதறிஞர் ராஜாஜி, பயங்கரமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இந்நாட்களில் ஒளிவீசும் ஒரே விளக்காக காந்திஜி திகழ்கிறார். இந்தியாவின் அமைதியைச் சுமந்து நிற்கும் ஒரு தூணைப் போல அவர் விளங்குகிறார் எனப் புகழ்ந்தார்.
காந்திஜியின் ஆக்கபூர்வமான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம்தான் பொருளாதார விடுதலையைக் கொண்டுவர முடியும். அதுதான் கஷ்டப்பட்டு பெற்ற விடுதலையை பாதுகாக்கும் என்றார் சென்னை பொதுக்கூட்டத்தில் அன்று பேசிய காமராஜர்.

ஒரு எளிய மனிதன், மெலிந்த தேகமுடைய மனிதன், இந்த பூமியில் சொத்து எதுவுமில்லாத மனிதன், எந்த பதவியையும் வகிக்காத மனிதன், சாதுவாக துறவியாக வாழும் ஒரு மனிதன் சாம்ராஜ்யங்களைத் தோற்கடிக்கிறான். மனித மனங்களில் வாழ்கிறான். கடவுளைப் போல் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறான். இத்தகைய மாமனிதருக்கு, எனது தலைவருக்கு, எனது நண்பருக்கு, எனது தந்தைக்கு, மகாத்மாவுக்கு என் வணக்கங்களை செலுத்துகிறேன் என்று புகழ்ந்தார் கவிக்குயில் சரோஜினி நாயுடு.
தத்துவ ஞானி டாக்டர் ராதாகிருஷ்ணன், சாமானியர்களான ஆண்களையும், பெண்களையும் அவர் அணி திரட்டினார். அசுர பலம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தாப் புரட்சிக்கு தலைமை தாங்கினார். அவர் விரும்பிய விடுதலை வந்தது. விரும்பாத பிரிவினையும் வந்தது. வேண்டாத வெறுப்பும், பகைமையும் பரவியது. சகோதரர்கள் விரோதிகளாக மாறுகிறார்கள். விளைவு?அராஜகம், உயிரிழப்பு, அழிவு! இதுவே அண்ணலின் நெஞ்சத்தை வருத்துகிறது. இந்துக்களும், முஸ்லிம்களும் அமைதியாக வாழ அவர் முயற்சிக்கிறார். அதில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் என்றும் தோற்றதில்லை. தோல்வி வருமென்றால் அதனைக் காண அவர் இருக்கமாட்டார் என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.

பிரெஞ்சு தேசத்து தத்துவ ஞானி ரோமன் ரோலந்து, காந்திஜியின் வாழ்வு அனைவருக்கும் அபயமளிக்கும் மாளிகை. வருந்துவோருக்கெல்லாம் வழிகாட்டி வரமளிக்கும் ஒரு கிறித்துவக் கோயில் எனப் போற்றிப் புகழ்ந்தார்.
இத்துணை வாழ்த்துச் செய்திகளும் அண்ணலின் நெஞ்சத்தில் ஒட்டவே இல்லை என்பதே உண்மை.

ஆனால் அவருக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரும் செய்தி ஒன்று அப்போது வந்தது. அது, அக்டோபர் 2-ஆம் தேதி முதல் மதராஸ் மாகாணத்தில் முழுமையான மதுவிலக்கு அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு.
அதனைக் கேட்டவுடன், மதுபானம் மூலம் கிடைக்கும் வரி மட்டமான வரி. அது மனிதன் தன் ஒழுக்கக்கேடான செயலுக்கு செலுத்தும் வரி. மதுவிலக்கால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது ஓர் பொய்த்தோற்றம். மதுவிலக்கால், குடிப்பவனை மீட்டெடுக்கிறோம். குடிப்பதை நிறுத்துகிறோம். அதன்பின் அவன் உழைக்கிறான், அதிக வருவாய் ஈட்டுகிறான், வரியும் செலுத்துகிறான். அதன் மூலம் அரசு வருவாய் உயருமல்லவா? மதராஸ் மாகாணம் தேசத்துக்கு வழிகாட்டுகிறது. மதராஸ் மாகாண அரசுக்கும் மக்களுக்கும் என் வாழ்த்துகள் என்று கூறினார்.

அண்ணல் தனது உறுதியை புதுப்பித்துக் கொண்டார். எழுந்து நின்றார். கையில் தடியை ஏந்தினார். கடிகாரத்தை தன் இடுப்பில் தொங்கவிட்டார். தனது லட்சியம் மட்டுமே தேசப்பிதாவின் கண்ணுக்குத் தெரிந்தது. அசைக்கமுடியாத உறுதியோடும், இறை நம்பிக்கையோடும் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அதுவே சுதந்திர இந்தியாவில் காந்திஜி கொண்டாடிய முதல் பிறந்த நாள். துரதிருஷ்டவசமாக அதுவே அண்ணல் கொண்டாடிய கடைசி பிறந்தநாளாகவும் அமைந்து விட்டது!

இன்று மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள்.

கட்டுரையாளர்:
காந்திய அறிஞர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024