திருமண வரன்கள் படுத்தும் பாடு!
By நா. கிருஷ்ணமூர்த்தி | Published on : 05th January 2019 02:39 AM |
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி திருமணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். கல்வியும், வேலையும் பெண்களுக்கு தன்னம்பிக்கையை பெருமளவு தந்துள்ளது.
திருமணமாகும் வரை குடும்பத்தில் பெண்களின் ஊதியம் பெற்றோருக்குப் பேருதவியாக இருந்தது. ஊதிய சேமிப்பு மூலம் பெண்ணுக்கு நல்ல இடமாகத் தேடிப் பார்த்து திருமணம் முடிப்பதில் மகிழ்ச்சி கண்டனர். வயது முதிர்ந்த நிலையிலும், நிரந்தரமான வேலையில்லாத நிலையிலும் பெற்றோருக்கு பையன் அல்லது பெண்ணின் பொருளாதார பங்களிப்பு குடும்பச் செலவுக்கு அத்தியாவசியமாகி விடுகிறது.
இன்று பெரும்பான்மையான குடும்பங்கள் ஒற்றை வாரிசோடுதான் உள்ளது. மகன் அல்லது மகள் அவ்வளவுதான்.ஒரு காலகட்டத்தில் பொருளாதார ஏற்றம் கண்ட குடும்பங்களில் ஒற்றைப் பெண்ணின் திருமணம் நடைபெறுவதில் தாமதமும், சிக்கலும் இல்லாமலேயே இருந்தது. குறிப்பிட்ட வயதில் வரன் தேடி பெண்ணுக்கு திருமணம் நடந்துவிடும்.
ஆனால், பெற்றோரின் வருமானத்தில் தொய்வு இருக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பெண்ணின் திருமணம் தள்ளிப்போவது தவிர்க்க இயலாததாகி விட்டது. சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண் திருமணமாகி வெளியே போய் விட்டால் அவர்களுடைய நிலைமை என்னவாகும் என்பது கேள்விக்குறியானது.
பெற்றோரை நிர்கதியாய் விட்டு விட்டுப் போவதில் விருப்பமில்லாமல் உளவியல் ரீதியாக பெண் பாதிப்புக்கு உள்ளாகிறாள். மாத ஊதியத்தில் ஒரு தொகையை பெற்றோருக்கு பெண் அளித்து உதவுவதை எல்லா மாப்பிள்ளை வீட்டாரும் ஒப்புக்கொள்வதில்லை. இந்த மாதிரியான அசாதாரண சூழ்நிலையில் பெண்ணின் திருமணம் கேள்விக்குறியாகி விடுகிறது.
ஐ.டி. நிறுவனங்களின் வருகையால் இந்தியப் பொருளாதாரம் முன்னேறி, வாழ்க்கை முறை மாறியது. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து, நடுத்தர வர்க்கத்தின் கடைசிப் படிக்கட்டுகளில் இருந்தோரும், கீழ்த்தட்டு மக்களும் பாதிக்கப்பட்டனர்
வீட்டு வாடகை உயர்வு, மனை நிலங்களின் விலை ஏற்றம் மக்களை ஆட்டிப் படைத்தது. ஆனால், தற்போது ஐ.டி. துறையில் நிலவும் போட்டி காரணமாக ஊதியம் கணிசமாகக் குறைந்து, அதிக சம்பளம் வாங்கும் ஒருவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு குறைந்த ஊதியத்தில் ஒன்றிரண்டு நபர்களை நியமிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஐ.டி. பொருளாதாரம் குடும்ப உறவிலும் விளையாடியது. கை நிறைய பெண் சம்பாதிப்பதால் பெற்றோர் அவளிடம் பணிந்துபோக வேண்டியதாயிற்று. பெண் தாமதமாக வீடு திரும்புவதையும், விடுமுறை நாள்களில் வெளியே போவது எங்கே என்பது அறியாமலும் மருகித் தவித்தனர். அவள் தரும் பணம் அவர்களின் வாயைக் கட்டிப் போட்டது.
பெண்ணின் திருமணத்தை அவர்களால் நினைத்தபடி தீர்மானிக்க இயலாமல் போனது. குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்வது மாறிப் போனது. ஆண் வாரிசைப் பெற்றவர்களின் நிலைமையும் இதேதான். அவனைப் பற்றி எவரும் ஒரு சொல்கூட குரல் உயர்த்திப் பேசி விட முடியாது. பணம் எல்லா உறவுகளையும் கட்டிப் போட்டது.
இன்று திருமண வரன் தேடுதல் என்பது ஒரு விசித்திரமான சூழ்நிலையில் உள்ளது. ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அநேகமாக 30 வயதை எட்டும்போதுதான் திருமணத்தைப் பற்றி யோசிக்கிறார்கள். கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் பிரச்னை உள்ளது.
சமீபத்தில் உறவினர்களின் மூலமும், நண்பர் மூலமும் திருமண வரன் தேடியபோது ஒரு பெண் வீட்டில் நடந்த உரையாடல் அதிர்ச்சி அளிக்கக் கூடியது. பையனோடு பிறந்தவர்கள் எத்தனை பேர் உள்ளிட்டவழக்கமான கேள்விகளுக்குப் பதிலாக, பையனுக்கு லக்கேஜ் உண்டா? என்றார்களாம். மணமகன் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் என்ன கேட்கிறார்கள் எனத் தெரியவில்லை.
திருமணத்துக்குப் பிறகு பையனுடைய பெற்றோர் அவனுடன்தான் இருப்பார்களா? என்பதைக் குறிக்கும் வகையில் லக்கேஜ் உண்டா என்றார்களாம்.
வரன் தேடும் சில பெண்ணின் அம்மாக்களும் பிரயோகிக்கும் நவீன குறியீட்டில் ஒன்று லக்கேஜ்.
சில பெண்கள் 30 வயதுக்கு மேல் ஆனாலும்கூட, வெளிநாட்டில் வேலை, பதவி, அதிக சம்பளம் கிடைக்க இருப்பதைக் குறிப்பிட்டு திருமணம் செய்துகொள்ள மறுக்கும் நிலையும் உள்ளது. இதில் மட்டுமே வாழ்க்கையின் ஸ்திரத்தன்மை இருப்பதாக நம்புவதுதான் இன்றைய காலகட்டத்தின் அவலம்.
அடுத்து, அதிகமாகப் பேசப்படுவது பையனுக்கும் பெண்ணுக்கும் உள்ள வயது வித்தியாசம்; சம்பளம். என் பெண்ணுக்கு அமையும் வரன் இரண்டு அல்லது மூன்று வயது வித்தியாசத்துக்கு மேல் இருப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. அதே போன்று மாப்பிள்ளையின் சம்பளம் பெண்ணின் சம்பளத்தைவிட அதிகமாயிருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் படிப்பு, பட்டம், சம்பளம், சொந்த வீடு உள்ளிட்ட வசதிகள் பற்றிய எதிர்பார்ப்புகள் ஏராளம். எனினும், ஒரே அலுவலகத்திலோ, வெவ்வேறு இடத்திலோ பணிபுரியும் ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது வயது வித்தியாசமோ, சம்பளமோ படிப்பு, பட்டம் பற்றியோ, நிறம் குறித்தோ பேசப்படுவதில்லை. பெற்றோர் லக்கேஜ் பற்றி வாய் திறப்பதில்லை.
ஜாதகப் பொருத்தம், ஒரே பெண் என்பதெல்லாம் நொடியில் அடிபட்டுப் போய் விடுகிறது.
ஒரு விஷயம் நன்கு புலப்படுகிறது. பெண்ணைப் பெற்றவர்களும் தங்களது குழந்தைகளின் திருமணத்துக்காக அலுத்துப் போகுமளவிற்கு வரன் தேடுகிறார்கள். சிலர் விரக்தியின் உச்சத்துக்கே போய் விடுகின்றனர். இதுதான் இன்றைய திருமண வரன் தேடும் உலகம்.