Saturday, January 5, 2019

மாவட்ட செய்திகள்

ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்: நகருக்குள் லாரிகளை நிறுத்தி பொருட்களை இறக்க கட்டுப்பாடு



ராஜபாளையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நகருக்குள் லாரிகளை நிறுத்தி பொருட்களை இறக்குவதற்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 04, 2019 03:45 AM
ராஜபாளையம்,

ராஜபாளையம் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கடந்த 5 வருடங்களாக பகல் நேரத்தில் நகருக்குள் ஒரு வழிப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரையில் இருந்து வரும் கன ரக வாகனங்கள், நேரு சிலையில் இருந்து, டி.பி. மில்ஸ் சாலை, சத்திரப்பட்டி சாலை வழியாக தென்காசி சாலைக்கு செல்லும்.

தற்போது சத்திரப்பட்டி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தென்காசி சாலையில் ஒரு வழிப்பாதை திட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் தற்போது நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் பகல் நேரத்தில் வியாபாரிகள் சாலை ஓரம் லாரிகளை நிறுத்தி பொருட்களை இறக்குவதால், அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில் பகலில் கன ரக வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்க போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜபாளையம் வியாபார சங்க கட்டிடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுமைப் பணியாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகருக்குள் லாரி களை நிறுத்தி பொருட்களை இறக்க போலீசார் கட்டுப்பாடு விதித்தனர்.

அதன்படி காலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நகருக்கு உட்பட்ட பகுதிகளில் கன ரக வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரம் கன ரக வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதி அளித்தனர். இதற்கு ஒப்புதல் அளித்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024