Saturday, January 5, 2019

தலையங்கம்

உயர்ந்து வரும் வருவாய் பற்றாக்குறை




கடந்த 2–ந்தேதி தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த உரையில், தமிழ்நாட்டின் நிதிநிலைமை பட்ட வர்த்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 05 2019, 03:30

இடைத் தேர்தல் நடைபெறும் திருவாரூர் தொகுதியைத்தவிர, மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.1,000 அரசால் வழங்கப்படும் என்று அறிவித்து, எல்லோருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத் துள்ளார். ஆனால், ஏற்கனவே வருவாய் பற்றாக் குறையால் உழலும் தமிழக நிதிநிலைமையில், இது மேலும் ஒரு சுமையை ஏற்படுத்தும். கவர்னர் உரையிலேயே மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிபகிர்வில் 14–வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பினால் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற அபாய சங்கை ஊதிவிட்டார். இதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கத்தில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய பல்வேறு நிதி, சரக்கு சேவைவரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டுத்தொகை போன்ற நிலுவைத்தொகைகளையும் பட்டியலிட்டு காண்பித்தார். வருவாய் பற்றாக்குறை என்பது பட்ஜெட்டில் அந்த ஆண்டு மாநிலத்திற்கு எவ்வளவு வருவாய் வரும் என்பதை எதிர்பார்த்து திட்டமிட்ட தொகையைவிட, வந்த வருவாய் குறைவாக இருந்தால், அதுதான் வருவாய் பற்றாக்குறையாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் மொத்த வருவாய் வரவு ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடியே

48 லட்சமாகவும், மொத்த வருவாய் செலவினங்கள்

ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 742 கோடியே 6 லட்சமாக இருக்கும் என்றும், இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 490 கோடியே 58 லட்சமாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், வருவாய் பற்றாக்குறை இப்போதே அந்த அளவை தாண்டிவிட்டது. இதற்கு திடீரென ஏற்பட்ட திட்டமிடாத செலவுகளும் ஒரு முக்கிய காரணமாகும். எடுத்துக்காட்டாக, ‘கஜா’ புயல் வரும் என்று எதிர் பார்த்து நிவாரணத்தொகைக்காக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கமுடியாது. இப்போது பொங்கல் பரிசாக ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 என்று அறிவித்ததும்,

ரூ.2 ஆயிரம் கோடிக்குமேல் கூடுதலாக செலவாக வழிவகுக்கும்.

2011–ம் ஆண்டு வருவாய் உபரியாக ரூ.1,364 கோடியாக இருந்தது. இப்போது தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக ஏன் வேகமாக குறைந்தது? என்று ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசின் வரி வருவாயும், சரக்கு சேவைவரியால் பெருமளவு குறைந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக் கையால் ரியல் எஸ்டேட் தொழில் அதல பாதாளத்துக்கு சரிந்து, முத்திரைத்தாள் கட்டண வருவாயும் கீழே போய்விட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாக மூடப்பட்டுவிட்டன. ஜவுளி தொழில், பின்னலாடை தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் குறைந்துவிட்டன. ரூ.30 ஆயிரம் கோடி டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் அரசின் நிதிநிலை இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வருவாய் பற்றாக்குறை உயர்ந்துகொண்டே போவது நிச்சயமாக நல்லதல்ல, அரசின் வருவாய் பெருகவேண்டும். அதுவும் பொதுமக்களுக்கு வலி இல்லாமல் பெருகவேண்டும். எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டை தயாரிக்கும்போது, ‘மக்கள் நலன் என்பதை ஒரு கண்ணாகவும், அரசின் வருவாயை பெருக்குவதை மற்றொரு கண்ணாகவும்’ கொண்டுதான் பொருளாதார பார்வையை உருவாக்கவேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024