Saturday, January 5, 2019

மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பைகளுக்கு பிரியாவிடை: மளிகை கடைகளில் பொட்டலங்கள் மடிக்கும் பழக்கம் திரும்புகிறது



பிளாஸ்டிக் பைகளுக்கு வியாபாரிகள் பிரியாவிடை அளித்து, மீண்டும் பொட்டலங்கள் கட்டி தரும் பழக்கத்தை புகுத்தி வருகின்றனர். இதுவும் ஒரு வகை லாபம் தான் என்று கருத்தும் தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 05, 2019 04:45 AM

சென்னை,

புத்தாண்டு தினமான கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு அரசு தடை விதித்திருக்கிறது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலைகள், பாக்கு மர மட்டைகள், மந்தார இலைகளை பயன்படுத்த உணவகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. காய்கறி-மளிகை கடைகளுக்கும் பிளாஸ்டிக் பை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் சாலையோர காய்கறி கடைகளில் மாநகராட்சி மண்டல அதிகாரி எம்.பரந்தாமன் தலைமையில் சுவாமிநாதன் உள்பட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வியாபாரிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தனர். இதுதவிர அனைத்து மண்டலங்களிலும் சோதனை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை எதிரொலி ஒருபுறம் இருந்தாலும், அரசின் நல்ல நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான வியாபாரிகளின் மனநிலையாக ஆகிவிட்டது. அதனைதொடர்ந்து வியாபாரத்துடன் ஒன்றிப்போன பிளாஸ்டிக் பைகளுக்கு வியாபாரிகள் பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மளிகை கடைகளில் பொருட்களை காகிதங்களில் பொட்டலமாக மடித்து, அதை சணல் கயிற்றால் கட்டி தருவதே நடைமுறையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகளின் அதீத வளர்ச்சியால் அந்த நடைமுறை மெல்ல மெல்ல அழிந்தது. இப்போது பிளாஸ்டிக் மீதான தடையால் மீண்டும் அந்த பொட்டலம் கட்டும் நடைமுறை துளிர்விட தொடங்கி இருக்கிறது

நகரில் பெரும்பாலான கடைகளில் காகிதங்களிலேயே மளிகை பொருட்களை பொட்டலம் கட்டி, சணல் கயிற்றால் கட்டி தந்து வருகின்றனர். இதை பார்க்கும் இன்றைய தலைமுறையினர், ‘என்ன இது, இப்படி பொட்டலம் கட்டி தருகிறார்கள், எப்படி கொண்டு போவது?’, என்று யோசிக்கின்றனர். அதேவேளையில் ‘எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பார்க்கிறோம்’, என்று பெரியவர்கள் கொஞ்சம் மகிழ்ச்சி அடைகின்றனர்.

சில கடைகளில் இருக்கும் விற்பனையாளர்களுக்கு பொட்டலம் கட்ட தெரியவில்லை. இதனால் அனுபவமிக்க வியாபாரிகள், அவர் களை அழைத்து ‘இப்படி மடிக்கணும், இப்படி கட்டணும்’, என்று சொல்லி தருவதையும் பார்க்க முடிகிறது. இந்த பொட்டல நடைமுறை ஒருவகையில் லாபமும் கூட என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து தேனாம்பேட்டையை சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஜி.வேலவன் கூறுகையில், “பிளாஸ்டிக் பைகள் கிலோவுக்கு ரூ.200 வரை வாங்கி பயன்படுத்தினோம். ஆனால் காகிதம், சணல் கயிறு போன்றவற்றின் விலை அதில் நான்கில் ஒரு பங்கு தான் உள்ளது. எனவே இந்த நடைமுறை வியாபாரிகளுக்கு ஒரு வகை லாபம் தான். கைதேர்ந்தவர்கள் இந்த பொட்டலங்களை அருமையாக மடித்து கட்டுவார்கள். ஆனால் இப்போதுள்ளவர்களுக்கு கொஞ்சம் சொல்லி தான் கொடுக்க வேண்டியது இருக்கிறது”, என்றார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை விட வியாபாரிகள் கொஞ்சம் பின்தங்கி தான் இ ருந்தார்கள். தற்போது மளிகை கடைகள் முதல் உணவகங்கள் வரை அந்தநிலை மாற தொடங்கி இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் பைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுக்கப்பட்டும் வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024