Saturday, January 5, 2019

மாவட்ட செய்திகள்

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பேராசிரியர்கள்-மாணவர்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டன.

பதிவு: ஜனவரி 04, 2019 04:00 AM

சென்னை,

தமிழக அரசு பிளாஸ்டிக் தடையை கடந்த 1-ந் தேதி முதல் அமல்படுத்தி இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பிளாஸ்டிக் தடை குறித்து விளக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு வலியுறுத்தும் விதமாகவும் சென்னை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் நீர்வள மேலாண்மை மையம், சுற்றுச்சூழல் அறிவியல் மையம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துரைசாமி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து, சுற்றுச்சூழல் அறிவியல் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பதிவாளர் சீனிவாசன், வளாக இயக்குனர் சுந்தரம், நீர்வள மேலாண்மை மையத்தின் துறை தலைவரும், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளருமான பாஸ்கரன், சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் துறை தலைவர் என்.கோதண்டராமன், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், இயற்கை வளம் காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி பல்கலைக்கழக வளாகத்தினுள் சுற்றி வந்தனர். அப்போது பேராசிரியர்கள்-மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக துணி பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின்போது, ‘சென்னை பல்கலைக்கழக வளாகம் மட்டுமல்லாது, அடுத்தக்கட்டமாக பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும்’ என்று பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார். மேலும், உறுப்பு கல்லூரிகளில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சுமார் 10 பேரை தேர்வு செய்து அவர்களிடம் பிளாஸ்டிக் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் மூலம் அந்தந்த கல்லூரிகளுக்கும், கல்லூரிகளை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இந்த ஆண்டு முழுவதும் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தடை குறித்து விவரிக்க இருப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறினார்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...