Friday, January 4, 2019

அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்யக்கோரி வழக்கு அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஜன 04, 2019 03:27

மதுரை:அரசு மருத்துவமனைகளில் அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனைகளை தமிழ்நாடு மருத்துவ விதிகள்படி மேற்கொள்வதில்லை. பரிசோதனை மையங்களில் தகுந்த உபகரணங்களை பயன்படுத்துவதில்லை. டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்வதில்லை. உதவியாளர்கள் மூலம் மேற்கொள்கின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த அன்றே அதற்குரிய சான்றை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் (மாஜிஸ்திரேட்) சமர்ப்பிப்பதில்லை.
குற்றவழக்கில் பிரேத பரிசோதனைச் சான்று முக்கியம். எத்தகைய சம்பவத்தால் ஒருவர் இறந்திருக்கலாம் என யூகித்து தீர்மானிப்பது மற்றும் பிரேத பரிசோதனையின்போது டாக்டர்கள் கூறுவதை பதிவு செய்வது கிரிமினாலஜி பட்டப்படிப்பு முடித்த விஞ்ஞான அலுவலர்களின் பணி. ஆனால் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் விஞ்ஞான அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதனால் சர்ச்சைகள், மறு பிரேத பரிசோதனை தவிர்க்கப்படும்.
அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். அன்றே அதற்குரிய 'சிடி' பதிவு மற்றும் சான்றை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அருண்சுவாமிநாதன் மனு செய்தார்.

நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, மாநில சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,22 க்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024