Friday, January 4, 2019

கதறி அழுதார் துரைமுருகன்

கண்ணீர் சிந்தினர் எம்.எல்.ஏ.,க்கள்!  dinamalar 04.01.2019


சென்னை : ''தன் வாழ்நாளில் பெரும் பகுதியை, சட்டசபை பணிக்கு தந்தவர், கருணாநிதி,'' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.



சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: கருணாநிதி, தனி மனிதரல்ல. அவர் பன்முக தோற்றம் உடையவர்; சமூக போராளி; அரசியல் வித்தகர்; சாதனை செம்மல்; சரித்திர நாயகன். ஒரு முகத்தோடு அவரை அடக்கி விட முடியாது. சட்டசபையை பொறுத்தவரை, அவர் எல்லாமும் ஆகி இருந்தார். அவர் வாழ்ந்தது, 34 ஆயிரத்து, 258 நாட்கள். அதாவது, 94 ஆண்டுகள். அதில், சட்டசபையில் பணியாற்றியது, 20 ஆயிரத்து, 411 நாட்கள். அதாவது, 56 ஆண்டுகள்.

தன் வாழ்நாளில், பெரும் பகுதி நாட்கள், சட்டசபையில் பணியாற்றியுள்ளார். 13 தேர்தலில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி உறுப்பினராக, கொறடாவாக, தலைவராக, அமைச்சராக, முதல்வராக பணியாற்றி உள்ளார். முதல்வராக, 6,863 நாட்கள், அதாவது, ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். தி.மு.க., தலைவராக,17 ஆயிரத்து, 908 நாட்கள், அதாவது, 49 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது, முக்கியம் அல்ல. வாழ்ந்த காலத்தில், என்ன சாதித்தார் என்பது தான் முக்கியம்.


பிள்ளைகளை வைத்து, பெற்றோரை எடை போட முடியாது. அவர்கள் விட்டு சென்ற பணிகளை வைத்து தான், எடை போட முடியும். அந்த வகையில், கருணாநிதி, வரலாற்று சிறப்பு மிக்க அரிய காரியங்களை செய்துள்ளார். இன்னும், 100 ஆண்டுகளானாலும், நினைத்து பார்க்க முடியாத, திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

மாநில கட்சி தலைவராக இருந்தாலும், அகில இந்திய அரசியல் வித்தகராக திகழ்ந்தார். பிரதமரை, ஜனாதிபதியை தேர்வு செய்பவராக இருந்ததால், தேசிய தலைவராக கருதப்பட்டார். எனக்கு ஒரு வருத்தம். சாதாரண குடிமகனாக, சென்னை வந்தேன். பச்சையப்பன் கல்லுாரியில் சேர, வழி தெரியாமல், தகர பெட்டியை தலையில் வைத்துக் கொண்டு, வழி கேட்டு சென்றேன். அப்படி இருந்த என்னை, தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, எம்.எல்.ஏ.,வாக உட்கார வைத்து, அமைச்சராக்கினார். துரை, துரை என்று, அழைத்தவர். எனக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை, 2007ல், நிறைவேறியிருக்க வேண்டும்.

ஒருவருக்கு, அப்பா, அம்மா, ஒரு முறை தான் உயிர் கொடுப்பர். ஆனால், கருணாநிதி, எனக்கு இரண்டாவது முறை உயிர் கொடுத்தார். அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அறையில் படுத்திருந்தேன். இரவு, கருணாநிதி, 'போன்' செய்தார். 'துரை துாங்கிட்டீயா' என கேட்க, 'இல்லை' என்றேன். 'பயப்படுகிறாயா' என்றார். 'இல்லை' என்றேன். 'எனக்கு தெரியுமடா... நீ கோழை... நீ அப்படியே இரு; நான் வந்து, ஒரு நாள் உன் அறையில் தங்கிவிட்டு, காலையில், ஆப்பரேஷன் அறைக்கு அனுப்பிவிட்டு வருகிறேன்' என, கூறினார். அதன்படி வந்து, அனுப்பி வைத்தார்.

அப்போது இறந்திருந்தால், என் பிணம் மீது, அவர் ஒரு சொட்டு, கண்ணீர் விட்டிருந்திருப்பார். ஆனால், துரதிருஷ்டம், என் தலைவர் உடல் மீது, நான் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

கண்கலங்கிய பெண் எம்.எல்.ஏ.,க்கள்!

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். ஆரம்பத்திலேயே, 'கண்ணீரை அடக்கியபடி, பேச முயற்சிக்கிறேன்' எனக் கூறி பேச்சை துவக்கினார். கருணாநிதியின் சிறப்புகளை, சாதனைகளை பட்டியலிட்டார். இறுதியாக தனக்கும், அவருக்கும் இடையிலான உறவு குறித்து பேசத் துவங்கியதும் அவர் கண்களில் கண்ணீர் முட்டியது; நா தழுதழுத்தது. ''கருணாநிதி உடல் மீது நான் கண்ணீர் விட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே,'' எனக் கூறியபோது கதறி அழத் துவங்கினார். அருகிலிருந்த ஸ்டாலின் அவரை ஆறுதல்படுத்தி கீழே அமர வைத்தார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பலரின் கண்களிலும் கண்ணீர். அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,க்களும் கண்கலங்கினர். சபையில், நிசப்தம் நிலவியது. தொடர்ந்து பேச முடியாமல் துரைமுருகன் தன் பேச்சை முடித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024