Friday, January 4, 2019

மின் வாரியத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை புத்தாண்டு பரிசாக தந்த தங்க நாணயங்கள் சிக்கின

Added : ஜன 04, 2019 04:03


சென்னை:மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையால், லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

துணை மின் நிலையம், மின் நிலையம், பிரிவு அலுவலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள், சென்னை, அண்ணா சாலையில் உள்ள, மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு வந்து, தங்களுக்கு வேண்டிய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களை சந்தித்து, 'டெண்டர்' உட்பட, நிர்வாகத்தின் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்கின்றனர்.

ஊழியர்களுக்கு, இடமாறுதல் வாங்கி தருவதற்காக, இடைத்தரகர்களும் வருவர். நிறுவன பிரதிநிதிகள், தங்களுக்கு வர வேண்டிய பணத்திற்கான ரசீதையும், அதிகாரிகள் அறையில் அமர்ந்து, தாங்களே தயாரித்து, கையெழுத்தை மட்டும், அதிகாரிகளிடம் வாங்கி கொள்கின்றனர்.இதற்காக, அவர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம்; தீபாவளி, ஆங்கில புத்தாண்டிற்கு, தங்க நாணயங்கள், பரிசு பொருட்களை தருகின்றனர். 

இந்நிலையில், மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள, சென்னை தெற்கு மண்டல தலைமை பொறியாளர் அறையில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, லஞ்ச ஒழிப்பு துறையினர் நுழைந்து, திடீர் சோதனை செய்தனர். அப்போது, கணக்கில் வராத, பணம், தங்க நாணயங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால், லஞ்சம் வாங்கும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மின் வாரிய வட்டாரம் கூறியதாவது:ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தனியார் நிறுவனங்கள், மின் வாரிய அதிகாரிகளுக்கு, விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்குவதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால், அவர்கள், 2ம் தேதி காலை முதலே, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் வந்து, அதிகாரிகளை நோட்டமிட்டு இருந்தனர்.
அதன்படி, சென்னை தெற்கு தலைமை பொறியாளராக இருக்கும் முத்துவை சந்தித்து, வாழ்த்து தெரிவிக்க, பிரிவு அலுவலக பொறியாளர்கள் மற்றும், ஊழியர்கள் வந்திருந்தனர். முத்து வீடு, செங்கல்பட்டில் உள்ளது. இதனால், செங்கல்பட்டில் இருந்த வந்த ஊழியர்களுடன், காரில் வீட்டிற்கு செல்ல, முத்து முடிவு செய்தார்.

இதனால், அவர்களுடன் பேசியபடி, மாலை, 6:30 மணிக்கு, அறையில் இருந்து, முத்து வெளியே வந்தார். படிக்கட்டில் இறங்கியபோது, சிலர், 'சி.இ., தெற்கு யாரு' என்று கேட்டனர். அதற்கு, 'நான் தான்' என்ற முத்துவிடம், 'எங்களுடன் உங்கள் அறைக்கு வரவும்' என்று அவரையும், உடன் இருந்த நபர்களையும் அழைத்து சென்றனர்.

அப்போது தான், அவர்கள், லஞ்ச ஒழிப்பு துறையினர் என, தெரிந்தது. பின், முத்து அறையை திறந்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர். அவர்கள், முத்து மற்றும் உடன் இருந்த பொறியாளர்கள் வைத்திருந்த, 1.15 லட்சம் ரூபாய்; 18 கிராம் எடையுள்ள, மூன்று தங்க நாணயங்கள்; சால்வைக்கு பதில் ஊழியர்கள் வழங்கிய, 12 சட்டை துணிகள், ஏழு பேன்ட் துணிகள் ஆகியவற்றை எடுத்து சென்றனர். இந்த சோதனை, நேற்று அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.
இவ்வாறு, அந்த வட்டாரம் கூறியது.

மீண்டும் தடை வருமா

மின் வாரிய தலைவராக இருந்த சாய்குமார், அவசியம் இன்றி, ஒப்பந்த நிறுவன பிரநிதிகளை சந்திப்பதை தவிர்த்தார். தீபாவளி, புத்தாண்டிற்கு, வாழ்த்து கூற தடை விதித்தார். இதனால், இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள், அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவு டி.ஜி.பி.,யாக இருந்த மகேந்திரனும், லஞ்சம் வாங்குவதை தடுக்க, தீவிர ஆய்வுகளை முடுக்கி விட்டார்.
இதனால், மின் வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இது, பிரிவு அலுவலகங்களிலும் எதிரொலித்தது. தற்போது, மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவு, தீவிரமாக செயல்படவில்லை.எனவே, மீண்டும் இடைத்தரகர்கள், ஒப்பந்த நிறுவன ஊழியர்களின் நடமாட்டம், மின் வாரியத்தில் அதிகரித்துள்ளது. தற்போது, அதை தடுக்க வேண்டிய கட்டாயம், மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024