பலே பாண்டியா படத்தில், ராதாவுக்கு இரண்டு வேடம்; கதாநாயகனான சிவாஜிக்கு மூன்று வேடம். சிவாஜி அமெரிக்கா செல்லவிருந்ததால், 20 நாட்களில், படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று மொத்தமாக கால்ஷீட் கேட்டார் இயக்குனர் பி.ஆர்.பந்தலு. ஒப்புக் கொண்டார் ராதா.
முதல்நாள் படப்பிடிப்பு; 'மேக் - அப்' போட்டு செட்டுக்குள் வந்துவிட்டார் சிவாஜி. ராதாவை, 'மேக் - அப்' ரூமிலிருந்து அழைத்து வர வேண்டும். உதவி இயக்குனர் சண்முகத்தை அழைத்து, 'அவரு ரொம்ப கோவக்காரரு; அடி வாங்காம அவரை அழைச்சுக்கிட்டு வந்துரு...' என்றனர்.
சண்முகம், ஏற்கனவே ராதாவைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகளும், அதே போலவே இருந்ததால் பயந்தபடி ராதாவின், 'மேக் - அப்' ரூமுக்குச் சென்றவர், வெளியிலிருந்தபடியே குரல் கொடுத்தார். அவரை உள்ளே அழைத்தார் கஜபதி.
உள்ளே நுழைந்த சண்முகத்தைப் பார்த்து,'வாங்க...என்ன வேணும்?' என்றார் ராதா.
'நான், அசிஸ்டென்ட் சண்முகம்; உங்கள அழைச்சுட்டு வரச் சொன்னாங்க...'என்றார் பயத்துடன் சண்முகம்.
'சரி... அத ஏன் பயந்து பயந்து சொல்றீங்க... பயப்படாதீங்க, நானும் மனுஷந்தான்...'
'எல்லாரும் உங்ககிட்ட அடிபடாம, உங்கள அழைச்சுட்டு வரச் சொன்னாங்க...' என்று சண்முகம் கூறியதும், ராதா விழுந்து விழுந்து சிரித்து, 'அது சும்மா, ஒரு தோற்றம்; நான் ஒண்ணும் ரவுடி இல்லையே... கெட்டவங்களுக்கு தான் கெட்டவன். ஆனா, இங்க வந்து முரட்டுத்தனம் செய்தா சம்பளம் வராதே...' என்றார்.
'சரிதாண்ணே...'
'என்னோட நாடகம் பாத்திருக்கீங்களா?'
'சின்ன வயசுல பாத்துருக்கேன்; இப்ப, முன்னை விட கொஞ்சம் இளைச்சுட்டீங்க...'
'அப்படியா! வயசாவுதுல்ல... வாங்க செட்டுக்குப் போகலாம்...'
சண்முகம், ராதாவுடன் சகஜமாகப் பேசியபடி வருவதைப் பார்த்து, எல்லாருக்கும் ஆச்சரியம்.
பேப்பரில் உள்ள டயலாக்கை மனதில் வாங்கி, அதில் உள்ள பொருள் மாறாமல், தன் பாணியில் பேசுவது ராதாவின் ஸ்டைல்! ஷாட்டில் அப்படிப் பேசும் போது, கூடுதலாக ஒன்றிரண்டு டயலாக்குகளைக் கலந்து விடுவார். எல்லாம் நாடக மேடை தந்த அனுபவம். ஆனால், உடன் நடிப்பவர் தான், அந்தச் சமயத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் திணறிப் போவார்.
'இப்படி டயலாக்கையெல்லாம் சொந்தமாக பேசுனா, நான் எங்கப் போவேன்...' என்று, சிவாஜியே சில சமயங்களில் கமென்ட் அடித்ததுண்டு.
உடன் நடிப்பவர்கள் பேசும் போது, ராதா சும்மா இருக்க மாட்டார். தன் உடலசைவால் நடித்துக் கொண்டிருப்பார் அல்லது முகத்தில் விதவிதமான சேட்டைகளைக் காட்டுவார். இதனால், காட்சியில் ராதாவுக்கு டயலாக் இல்லாத போதும், தியேட்டரில் அவரையே கவனித்துக் கொண்டிருப்பர் மக்கள். ஆடியன்சை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய திறன் ராதாவுக்கு அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
இதனால், உடன் நடிப்பவர்களுடைய நடிப்பு எடுபடாமல் போனது. எனவே, ராதாவுடன் நடிப்பதென்பது, ஒவ்வொருவருக்கும் சவாலாகவே இருந்தது. இரண்டு அல்லது மூன்று டோன்களில் குரலை உயர்த்தி, தாழ்த்தி அவர் பேசும் ஸ்டைலில், எந்தக் காட்சியுமே கலகலப்பாக மாறி விடும்.
பல சமயங்களில் ராதா பேசும் எதிர்பாராத, 'பஞ்ச்' வசனங்களில், உடன் நடிப்பவர் சிரித்து விடுவர். காட்சியை மீண்டும் எடுக்க வேண்டியதாகி விடும்.
பலே பாண்டியா படத்தில் நல்லவனாக நடித்த எம்.ஆர்.ராதாவிற்கு, மொட்டை, 'கெட் - அப்!' முடியை மறைக்கும்படியாக, தலையில் ஒட்டவேண்டியதெல்லாம் ஒட்டி விட்டார் ஒப்பனையாளர் கஜபதி. இருந்தாலும், 'மேக் - அப்'பில் திருப்தி இல்லை. கிருதாவின் மேல் ஒட்டியிருப்பது எல்லாம் நன்றாகவே தெரிந்தது. கேமரா முன் ராதா சும்மா இருக்க மாட்டாரே... குதிப்பார், துள்ளுவார் அதற்கெல்லாம் தாங்காமல், அந்த ஒப்பனை உறிந்துவிடும் போல இருந்தது. 'அண்ணே எனக்குத் திருப்தியில்லண்ணே...' என்றார் கஜபதி.
புரொடக் ஷன் மேனேஜரை அழைத்து, 20 முழம் பூ வாங்கி வரச் சொன்னார் ராதா. பூ வந்தது; அதை, தன் மொட்டைத் தலையில் சுற்றினார். காதருகில் இரண்டு துண்டுகளை தொங்க விட்டுக் கொண்டார். ராதாவின் இந்த யோசனையால், அந்த கதாபாத்திரத்துக்கே தனி, 'லுக்' கிடைத்தது. ராதாவை பார்த்ததும், செட்டில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். தியேட்டரிலும் அதையே செய்தனர் ரசிகர்கள்.
நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
மாமா... மாப்ளே...
- என, இப்பாடலை செட்டில் கேட்டதும், ஆச்சரியமானார் ராதா. அது, அவரது குரல் போலவே இருந்தது.
'அட... யாருப்பா இது! நான் பாடின மாதிரியே இருக்குது...' என ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் கூறியதும், அவரை அழைத்து வரச் சொன்னார் ராதா. ஒல்லியாக, சிவப்பாக இருக்கும் எம்.ராஜூ, எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவில் இருந்தார். அவரை அழைத்துச் சென்று ராதாவின் முன் நிறுத்தினர்.
'பாடினது நீங்களா?' என, ஆச்சரியமாக கேட்டார் ராதா.
'ஆமாண்ணே...' என்றார் ராஜூ மென்மையான குரலில்!
'அதிசயமா இருக்கு; பேசறப்போ இவ்வளவு மெதுவா பேசறீங்க... ஆனா, என் குரல்லயே பாடியிருக்கீங்களே... உங்கள எப்படிப் பாராட்டறதுன்னே தெரியல. நான், உங்களை மறக்கவே மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க... தம்பிக்கு காபி கொடுங்க...' என, உபசரித்து அனுப்பினார் ராதா.
அப்பாடலில், இரண்டு, மூன்று ஆலாபனை வரும். அதற்காக, பலமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த சிவாஜி, 'அண்ணே... நீங்க மாட்டிக்கிட்டீங்க....' என்று ராதாவை கலாட்டா செய்தார். உண்மையில் அவ்வளவு பெரிய ஆலாபனைக்கு உதடு அசைப்பதெல்லாம், ராதாவுக்கு கடினமான காரியமாகத் தான் தோன்றியது.
நேராக இயக்குனரிடம் வந்து, 'இங்க பாரு பந்துலு... கணேசன் (சிவாஜி) மாதிரி எல்லாம் நம்மளால முடியாது; கேமராவை வச்சுக்கோ... நான் பாட்டுக்கு, 'ஆக்ட்' செய்றேன்; எங்க என் உதட்டசைவு சரியா வருதோ அந்த இடத்துல கேமராவுக்கு முகத்தைக் காட்டுவேன். மத்த இடத்துல குனிஞ்சுக்கிட்டு தான் இருப்பேன். வேற வழியில்லப்பா... நீ பாட்டுக்கு, 'டைட் குளோஸ் அப்'பெல்லாம் வைச்சிடாதே. அப்பப்ப, 'கட்' சொல்லிடாதே சரியா...' என்று சொல்லி, ஷாட்டுக்குச் சென்றார் ராதா.
பாடல் படப்பிடிப்பு ஆரம்பமானது. பாதி பாடல் வரைக்கும் எல்லாம் ஒழுங்காகப் போனது. ஆலாபனைக் காட்சிகள் வரும் போது, தன் உதட்டசைவுகளை அட்ஜஸ்ட் செய்ய, உட்கார்ந்திருக்கும் சோபாவிலிருந்து குதியோ குதியென்று குதிக்க ஆரம்பித்தார் ராதா. ஏகப்பட்ட சேட்டைகள் செய்தார். செட்டில் இயக்குனர், கேமராமேன் மற்றும் லைட்பாய் என, அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சில ரீடேக்குகள் ஆகத்தான் செய்தது.
ஒரு கட்டத்தில் ராதா திடீரென பெரிய பாடகர் போல காதருகே தன் இடது கையை வைத்து, வலது கையை நீட்டி, 'ஆக் ஷன்' கொடுப்பதை பாடலில் காணலாம். ஆனால், அது ஆக் ஷன் அல்ல; நடந்த விஷயமே வேறு.
ஏகத்துக்கும் குதித்ததில், ராதாவின், 'விக்' லூசாகியிருந்தது. அந்த ஷாட் முடியப் போகும் நேரம் அது. 'விக்' கழண்டு விட்டால், இன்னொரு முறை நடிக்க வேண்டி வருமே... அதனால், அச்சமயத்தில் பெரிய பாடகர் போல ஆக் ஷன் செய்து, விக்கை காப்பாற்றிக் கொண்டார் ராதா.
அந்த, 20 நாட்களும், பலே பாண்டியா பட ஷூட்டிங் ஒரு திருவிழா போல நடைபெற்றது. சில நாட்களில் காலை, 7:00 மணிக்கு ஆரம்பித்து, இரவு, 1:00 மணி வரை கூட நீண்டது.
கடைசி நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும் போது, 'ரொம்ப சந்தோஷமாக போறேன்; அடிக்கடி கூப்பிடுங்க என்னை...' என்று சொல்லிக் கிளம்பினார் ராதா.
படித்தால் மட்டும் போதுமா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்... வெளியூருக்குச் சென்றிருந்த ராதா, காலையில் வர வேண்டிய நேரத்திற்கு வீட்டுக்கு வரவில்லை. ராதாவுக்காக ஒப்பனையாளர் கஜபதி வீட்டில் காத்திருந்தார். நேரம் கடந்து கொண்டே போனது.
பட கம்பெனிக்கு போன் செய்த கஜபதி, 'ஊருக்குப் போன அண்ணன் இன்னும் வரல; ஷூட்டிங் கேன்சல்...' என்றார்.
ஆனால், ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சதர்ன் ஸ்டுடியோவில் ராதா தூங்கிக் கொண்டிருப்பதாக கூறினர். விவரமறிந்த கஜபதி அங்கு விரைந்தார்.
'வீட்டுக்குப் போயிட்டு வந்தா, லேட் ஆகும்ன்னு நேர இங்கயே வந்துட்டேன்...' என்றார் ராதா.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- முகில்