Wednesday, January 2, 2019

தொழில் தொடங்கலாம் வாங்க! - 23: உங்களுடைய தொழிலின் நோக்கம் என்ன?
Published : 18 Jul 2017 10:56 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன் 
 
மறுபதிவு





ஒவ்வொரு தொழில் முனைவோரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியது ஒன்றுதான். தாம் ஏன் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை அறிய வேண்டும். தொழிலின் நோக்கம் புரிய வேண்டும். “இதென்ன பிரமாதம், இது தெரியாமலா, நான் இத்தனை நாட்கள் தொழில் செய்கிறேன்?” என்று என்னிடம் கோபிக்க வேண்டாம்!

தரமும் மனநிறைவும்

ஒரு பழைய கதை உண்டு. உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் மூவர் ஒரே வேலையைச் செய்துகொண்டிருந்தனர். கல் உடைக்கும் வேலை கடும் வெயிலில் நடந்துகொண்டிருந்தது. அங்கு வந்த பெரியவர் முதலாவது ஆளிடம் கேட்டார்: “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“வயித்துப் பொழப்பு சார். அதான் இந்தக் கல் உடைக்கிற வேலையில இருக்கேன், தினம் இதே வேலைதான்”

இரண்டாவது ஆளிடம் அதே கேள்வியைக் கேட்டாராம். “கோயில் கட்டற வேலை சார். நடைபாதை செய்யக் கல்லைச் செதுக்கிட்டு இருக்கேன்!” என்று பதில் வந்தது.

மூன்றாவது ஆளிடம் அதே கேள்வியைக் கேட்டாராம். “இறைவன் திருப்பணியில் இருக்கிறேன். பக்தர்களின் ஆன்மிகச் சேவைக்கு என்னால் ஆன சிறு பணி இது. நான் செதுக்கும் கல் கோயிலை உருவாக்குவதால் அதைப் பக்தி சிரத்தையுடன் செய்கிறேன்!” என்றாராம்.

ஒரே வேலையைச் செய்யும் மூவர் மூன்று விதக் கற்பிதங்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கட்டமைத்த நோக்கம்தான் அவர்கள் வேலையின் தரத்தையும் அவர்களின் மனநிலையையும் உருவாக்குகிறது. இது பணியில் இருப்பவர்களைவிடத் தொழில் செய்பவர்களுக்கு அதிகமாகப் பொருந்தும்.

காணாமல் போவதும் புதுபித்துக்கொள்வதும்

நீங்கள் உங்களுடைய தொழிலின் நோக்கம் என்ன என்பதை அடிக்கடி யோசியுங்கள். அதுதான் உங்கள் இலக்கை நிர்ணயிக்கும். வழிமுறைகளைத் தீர்மானிக்கும். உங்களையும் உங்கள் தொழிலையும் புதிய திசைகளுக்கு இட்டுச் செல்லும்.

சந்தை மாறுதல்களிலும் வீழ்ச்சியடையாமல் புதிய உயரங்களை நோக்கிப் போகும் நிறுவனங்கள் வித்தியாசமாக என்ன செய்கின்றன? முதலாவதாக, தங்களுடைய நோக்கத்தில் தெளிவாக இருக்கின்றன. பிறகுதான் புதிய சிந்தனைகள் எல்லாம்.

புரியவில்லையா? ஓர் உதாரணத்துடன் இதை விளக்குகிறேன்.

சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் பழைய தியேட்டர்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போவதைத் தொடர்ந்து கவனிக்கிறோம். ரியல் எஸ்டேட் தாறுமாறாய் ஏறுகிறது ஒருபுறம். இன்னொரு புறம் வீட்டில் சி.டி., ஆன்லைன் என மக்கள் திருட்டுத்தனமாகப் படம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். தியேட்டர் பராமரிப்பும் கடினமாகிறது. படங்களும் சில்வர் ஜுபிளியெல்லாம் போவதில்லை. இதனால் கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும், அடுக்குமாடி குடியிருப்பாகவும் ஆயின தியேட்டர்கள். நான் சிறுவயதில் வசித்த இடத்தின் அருகில் இருந்த பாரகன், சித்ரா, கெயிட்டி, வெலிங்டன், பிளாசா, அலங்கார், இப்போது ‘சாந்தி’வரை அனைத்துத் தியேட்டர்களும் வடிவமாற்றம் பெற்றுவிட்டன. ஆனால், சத்யம் காம்ப்ளக்ஸ் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு இன்றும் இளைஞர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. அபிராமி காம்ப்ளக்ஸையும் உதாரணமாகக் காட்டலாம்.

என்ன நோக்கம் அது?

“தியேட்டர் டிக்கெட்டைவிட ஆன்லைனுக்கு எக்ஸ்ட்ரா, கார் பார்க்கிங்க் காசு, பாப்கார்ன் விலை, படத்துக்கு முன்னோ பின்னோ அமர்ந்து உண்ண உணவகம், விளையாட்டுக் கூடங்கள், கிரஷ் எனச் சகல வழிகளும் காசு பண்ணினால் வெற்றிகரமாக இயங்க முடியாதா என்ன?” என்று நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு அதிக வசதியும் செல்வாக்கும் இருப்பதாகக்கூட நீங்கள் நிரூபிக்கலாம். ஆனால், எல்லா தியேட்டர்களும் மூடும் நிலையில் இவர்களை நிலைத்திருக்கச் செய்வது எது? அவர்கள் தங்கள் தொழிலின் நோக்கத்தைப் புரிந்துகொண்டதால்தான். என்ன நோக்கம் அது?

தரமான தியேட்டரில் நல்ல படம் காட்டுவதுதான் தங்களுடைய நோக்கம் என மற்றவர்கள் இருந்தார்கள். அதனால் அவர்கள் கவனம் தியேட்டர் பராமரிப்பிலும் நல்ல படத்தை எடுப்பதில் மட்டுமே இருந்தது. ஆனால், இவர்கள் தங்கள் நோக்கத்தைச் சற்று விசாலமாகப் பார்த்தார்கள்: படம் பார்ப்பவர்களை போஷிப்பது என்பதுதான் அது. அப்படி என்றால் படம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. கழிவிடங்களின் சுத்தம், வாகன நிறுத்தம், பணியாளர்களின் இதமான வாடிக்கையாளர் சேவை, பார்வையாளர்களின் இதர தேவைகளைப் பூர்த்திசெய்வது எனப் புதிய திசைகளில் சிந்தித்தார்கள். ஒரு பொழுதுபோக்குப் பூங்கா போலத் தங்களைக் கற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். படம் பார்க்க மட்டும் மக்கள் கிளம்பி வர மாட்டார்கள். ஒரு மாலை நேரத்தைக் குடும்பத்துடன் கழிக்க வந்தால் அதற்கு எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பல கேளிக்கைகளில் படம் பார்த்தலும் ஒன்று. இதைச் செய்தவர்கள் புதிய உயரத்தைத் தொட்டார்கள்.

புதிய காரணம் கண்டுபிடியுங்கள்!

சில மாதங்களுக்கு முன்னால், சென்னையில் ஒரு புதிய படம் பார்க்க ஒரு பழைய காம்ப்ளெக்ஸுக்குப் போயிருந்தேன். சற்று முன்னதாகச் சென்றதால் வெளியே வரிசையில் நிற்க வைத்தார்கள். குச்சி வைத்த காவல்காரர் உள்ளே சீட்டு கிழித்து அனுப்பினார். முப்பது வருடத்துக்கு முன்பு இது சகஜம். இன்னமும் அதே மனோபாவத்துடன் இருந்தால்? சுற்றிப் பார்த்தேன். குடும்பங்கள் அதிகமாக இல்லை. நல்ல படம். நியாயமான கட்டணம்தான். ஆனால், இடைவேளையில் நம்பி ஒன்றை வாங்கிச் சாப்பிட முடியவில்லை. கழிவறையின் துர்நாற்றத்தில் மயக்கமே வந்தது.

உங்கள் தொழிலின் நோக்கத்தைத் தொடர்ந்து ஆராயுங்கள். உங்கள் வாடிக்கையாளரைத் தக்கவைக்க, உங்களிடம் மட்டுமே அவர்கள் வருவதற்கான புதிய காரணங்களைக் கண்டுபிடியுங்கள்.

இந்தப் படம் எங்கு ஓடுகிறது என்று பார்த்து அந்த தியேட்டரை நோக்கி ஓடியது அந்தக் காலம். அந்த மாலில் அல்லது காம்ப்ளக்ஸில் எந்தப் படத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் உள்ளது என்று பார்த்துப் போவது இந்தக் காலம். உங்கள் தொழிலின் நோக்கம் உங்கள் இளைய வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவதாக இருக்கட்டும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024