Wednesday, January 16, 2019

மூன்று தலைமுறையின் கூட்டு பொங்கல்: 27 குடும்பத்தினர் ஒன்று கூடி கொண்டாட்டம்

Added : ஜன 16, 2019 02:07

   மூன்று தலைமுறையின் கூட்டு பொங்கல்: 27 குடும்பத்தினர் ஒன்று கூடி கொண்டாட்டம்

திருப்புத்துார்: நாகரீக வாழ்க்கையில் கூட்டு குடும்ப விழாக்கள் கனவாகி வருகிறது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே நெற்குப்பையில் மூன்று தலைமுறையை சேர்ந்த 27 குடும்பத்தினர் பாரம்பரிய கூட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

ராம.சா.ராமநாதன் செட்டியாரின் நான்கு மகன் வாரிசுகள் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக அவரவர் வசித்த பகுதிகளிலேயே பொங்கல் கொண்டாடி வந்தனர். 'அனைவரும் ஒன்றாக சேர்ந்து பூர்வீக வீட்டில் கொண்டாட வேண்டும்,' என்பது ராமநாதனின் பேரன் மனைவி வசந்தா ஆச்சி 70,யின் நீண்டநாள் கனவாக இருந்தது. அதை நிறைவேற்று விதமாக அவரது மகன் சாத்தப்பன், மருமகள் நித்யா, 150 ஆண்டுகால பூர்வீக வீட்டில் 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவை நடத்தி வருகின்றனர்.

இதற்காக 3 மாதங்களுக்கு முன்பே, அளவு எடுத்து ஒரே வண்ணத்தில் பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு வேட்டி, சட்டை வாங்குகின்றனர். மூன்று நாட்களுக்கு முன், அனைவரும் ஊருக்கு வருகின்றனர். கோயில் தரிசனம், விளையாட்டு போட்டி என, விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். தலைமுறை, உறவுகளை புரிய வைக்கும் பேமிலி ட்ரீ' போன்ற விளையாட்டுகளை நடத்தி இளைய தலைமுறையினருக்கு பாரம்பரியத்தை நினைவுப்படுத்துகின்றனர்.

நேற்று காலை வேட்டி, சேலை அணிந்து வீட்டின் முற்றத்தில் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் என, இருபானைகளில் வைத்தனர். பொங்கல் வைத்ததும் தலைவாழை இலையில் படையலிட்டு, விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து மங்கலப்பொருட்களுடன் விளக்கை எடுத்து அவரவர் வைத்து கொண்டனர்.

சுப,பழனியப்பன் கூறுகையில், ''பல ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் ஊர்களில் 'காஸ்' அடுப்பில் பொங்கல் வைப்போம். 2 ஆண்டுகளாக சொந்தங்களோட கொண்டாடுவது மனதுக்கு உற்சாகத்தை தருகிறது,'' என்றார்.

செந்தில்நாதன் சேதுராமன் கூறுகையில்,''கடந்த ஆண்டு என்னால் வரமுடியவில்லை. விழாவை 'வாட்ஸ் ஆப்' ல் பார்த்ததும் இந்த ஆண்டு கண்டிப்பாக பங்கேற்பது என முடிவு செய்தேன். சித்தப்பா மக்கள், சின்ன அய்யா, பெரிய அய்யா மக்களை ஒன்று சேர பார்ப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது,'' என்கிறார்.

கைலாஷ் சுந்தரம் கூறுகையில், '' நான்கு தாத்தா குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாடுவது ஆச்சரியமாக உள்ளது. மனசு விட்டு அனைவருடன் பேச முடிந்தது. பெரியவர்கள் ஜெயிச்ச அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டாங்க. சொந்தங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024