Saturday, January 19, 2019

தலையங்கம்

3–வது அணி உருவாகிறதா?



அடுத்த 3 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடந்த மாதமே கூட்டணி தொடர்பான முயற்சிகள் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் வேகம் எடுத்துவிட்டது.

ஜனவரி 19 2019, 04:00

அடுத்த 3 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடந்த மாதமே கூட்டணி தொடர்பான முயற்சிகள் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் வேகம் எடுத்துவிட்டது. பா.ஜ.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் அல்லாத பா.ஜ.க. அல்லாத 3–வது அணி உருவாகும் நிலையும் உத்தரபிரதேசத்தில் அமைந்துவிட்டது. அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். அதுபோல நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பார்கள். அந்த வழக்கு மொழிகளெல்லாம் உத்தரபிரதேசத்தில் புதிதாக மலர்ந்துள்ள சமாஜ்வாடி கட்சி–பகுஜன் சமாஜ் கட்சி உறவில் நிரூபணமாகிவிட்டது. கடந்த 25 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம்சிங் யாதவின் மகன் முன்னாள் உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவின் தலைமையில் தற்போது இயங்கிவரும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி வைத்திருக்கிறது. எங்களுக்குள் இருந்த 25 ஆண்டு விரோதம் நாங்கள் இருவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிய 25 நிமிடத்தில் போய்விட்டது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 80 நாடாளுமன்ற தொகுதிகளைக்கொண்ட உத்தரபிரதேசத்தில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள 4 இடங்களில் 2 இடங்களை அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கு ஒதுக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பது சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியும், ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியும்தான். இந்த இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என்று இரு தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர்.

இதை அரசியல் நாகரிகம் என்று கருதி பாராட்டுவதா அல்லது சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் எதிரான ஓட்டுக்கள் சிதறிவிடக்கூடாது, காங்கிரசுக்கும்–பா.ஜ.க.வுக்கும் நேரடியாக போட்டி நடக்கட்டும் என்று நினைக்கும் அரசியல் சாதுரியமா? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஆக, உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி என்பது உறுதியாகிவிட்டது. இதேநிலை பீகாரிலும் தொடருமா? என்றநிலை இந்த கூட்டணி உருவான அடுத்தநாளே ஏற்பட்டுவிட்டது. இந்தக்கூட்டணிக்கு ஆதரவாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியும் களம் இறங்கியிருக்கிறது. இந்தக்கட்சியின் தலைவரான தேஜஷ்வி யாதவ் உத்தரபிரதேசத்துக்கு சென்று மாயாவதியையும், அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேசியிருக்கிறார். அவர்களுக்கு வாழ்த்தும் கூறியிருக்கிறார். இந்தக் கூட்டணி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும்.

இதுமட்டுமல்லாமல், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் ஒருவழியை காட்டிவிட்டது. இந்தக்கூட்டணி உத்தரபிரதேசத்தில் வெல்லும், நாங்கள் பீகாரில் வெல்வோம், எங்கள் கட்சி தொண்டர்கள் உத்தரபிரதேசத்தில் இந்தக்கூட்டணிக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளும், பீகாரில் 40 தொகுதிகளும், ஜார்கண்ட்டில் 14 தொகுதிகளும், ஆக மொத்தம் 134 தொகுதிகளில் பா.ஜ.க. 100 தொகுதிகளுக்குமேல் இழக்கும் என்று தேஜஷ்வி யாதவ் கூறியிருக்கிறார். இதே 134 தொகுதிகளில் 2014 தேர்தலில் 105 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க.வுக்கு இந்தக் கூட்டணி நிச்சயமாக ஒரு சவாலாகத்தான் இருக்கும். இதேபோல பா.ஜ.க. அல்லாத, காங்கிரஸ் அல்லாத கட்சிகளைக்கொண்ட 3–வது அணி தேசிய அளவிலோ, மாநிலங்கள் அளவிலோ உருவாகுமா? என்பது இந்த மாதத்துக்குள் தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024