Saturday, January 19, 2019


புத்தகத் திருவிழாவில் சினிமா தொடர்பாக எதை வாங்கலாம்? 3- எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்

Published : 17 Jan 2019 20:08 IST

உதிரன்





'விசாரணை' படத்தின் மூலக்கதை வடிவமான 'லாக்கப்' நாவல் மூலம் கவனத்தை ஈர்த்த மு.சந்திரகுமார் எழுதியுள்ள நூல் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சார்பில் வேடியப்பன் பதிப்பித்துள்ளார்.

புரூஸ்லி, ஜாக்கிசான், ஜெட்லி, டோனிஜா போன்ற கலைஞர்கள் குங்ஃபூ கலைக்கும் சீனத் திரைப்படக் கலைக்கும் செய்திருக்கும் பங்களிப்புக்குச் சமமாக தமிழ் சினிமாவில் பங்களிப்பு செய்த கலைஞர் யார்? தமிழர்களின் போர்க்கலைகளை தமிழ்த் திரைப்படம் எந்த அளவு பதிவு செய்துள்ளது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் எம்.ஜி.ஆர். என்பது மட்டுமே பதிலாக உள்ளது.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் சண்டைக்கலை குறித்து ஆய்வு செய்தால் மரபார்ந்த போர்க்கலையை ஆகச் சிறப்பாகப் பயன்படுத்திய ஒப்பற்ற கலைஞராக எம்.ஜி.ஆர்.திகழ்கிறார் என்பதை மு.சந்திரகுமார் சான்றுகளுடன் நிறுவும் விதம் மலைக்க வைக்கிறது. எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிகம் பார்த்து ரசித்த படங்களில் பயன்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளின் நுட்பம் வியக்க வைக்கிறது. அதனால்தான் 'மலைக்கள்ளன்' படத்தின் கலை கலாச்சாரத்துக்காக குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது.

உண்மையில் எம்.ஜி.ஆர் நடிப்புலகில் ஒரு மேடை நாடகத்தில் அழும் சிறுவனாகத்தான் அறிமுகம் ஆனார். அடித்ததால் அழுது நடிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். நடனமே வராது போய்விடு என்று விரட்டியடிக்கப்பட்ட பிறகு, நடிப்பு, வசனம், போர்க்கலையில் கவனம் செலுத்தி தனித்த ஆளுமையாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார். நடித்த நேரங்கள் போக மீதமுள்ள நேரங்களில் ஆயுதக் கலைகளைப் பயின்றதன் மூலம் போர்க் கலைஞராக எம்.ஜி.ஆர் ஜொலித்த ரகசியத்தையும் இந்நூல் விவரிக்கிறது.

சாகச நாயகனாக எம்.ஜி.ஆர் தன்னை முன்னிறுத்தும் தருணங்களில் கூட நம்பமுடியாத சண்டைக்காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டதே இல்லை என்பதையும், என்னால் செய்ய முடியாத காட்சிக்கு டூப் போடலாம். செய்ய முடிந்த காட்சிக்கு ஏன் டூப் போட வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர் எம்.ஜி.ஆர் என்பதையும் இந்த நூலைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.

120க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் கூட ஆயுதமற்ற எதிரியை ஆயுதத்துடன் எதிர்கொண்டதில்லை, எந்த எதிரியையும் பின்புறம் இருந்து அவர் தாக்கியதில்லை, பெண்களை வாடி போடி என்று விளித்தது இல்லை என்று படிக்கிற போது அவர் பிம்பத்தின் மீதான மரியாதை கூடுகிறது. எதிரி ஆயுதத்தை இழந்துவிட்டால் தன் ஆயுதத்தை விட்டெறிந்துவிட்டும் அல்லது எதிரிக்கு ஒரு ஆயுதத்தைக் கொடுத்தும் சண்டை செய்யும் தமிழ் மரபுப் போர் புரிந்த வீரன் எம்.ஜி.ஆர் என்பதை திரைப்படங்களின் காட்சி ரீதியாக விளக்கும் விதம் நெகிழ வைக்கிறது.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இருக்கும் சண்டைக்காட்சிகள் தனித்துவமானவை. சிலம்பு, மாடி, இரட்டைக் கம்பு, அலுமினியப் பைப்பில் சண்டை என தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை சினிமாவில் பயன்படுத்திய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.

பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் இரட்டைக் கம்பு (ஆஃப் ஸ்டிக்) சண்டைக் காட்சி, தாய்க்குப் பின் தாரம் படத்தில் உழவுக்காட்டில் எம்.ஜி.ஆர் போடும் நீள் அடிக்கம்பு சண்டைக் காட்சி, மாட்டுக்கார வேலன் படத்தில் மாட்டுக்குக் கட்டும் பித்தளை சலங்கைகள் கோர்த்திருக்கும் எடை மிக்க பெல்ட்டை லாவகமாகச் சுழற்றும் சண்டைக் காட்சி, அதே படத்தின் இறுதிக் காட்சியில் இரும்புக் குழாய்களைப் பயன்படுத்திப் போடும் சண்டைக் காட்சி, விவசாயி திரைப்படத்தில் மூங்கில் கழிகொண்டு எம்.ஜி.ஆரும்- நம்பியாரும் போடும் சண்டைக் காட்சி, உரிமைக்குரல் படத்தில் ஏர் கலப்பையைக் கொண்டு எதிரிகளைப் பந்தாடும் சண்டைக் காட்சி, உழைக்கும் கரங்கள் படத்தில் கம்பு சுழற்றும் காட்சி, சக்கரவர்த்தி திருமகள் மல்யுத்தக் காட்சி, ஆயிரத்தில் ஒருவன், மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நாடோடி மன்னன் என்று ஏராளமான படங்களில் நீள் கத்தி சண்டைக் காட்சி என 20க்கும் மேற்பட்ட படங்களில் எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகளை ஆய்வுப்பூர்வமாகவும் நுட்பமாகவும் அணுகி அலசி இருக்கிறார் மு.சந்திரகுமார்.

தமிழ் திரைப்படங்களில் சண்டைக் கலையின் மகத்துவம் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள், சண்டைக் கலைஞர்களின் உன்னதத்தை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், வாசகர்கள் என யாவரும் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள் நூலை விரும்பி வாசிக்கலாம்.

நூல்: எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்

ஆசிரியர்: மு.சந்திரகுமார்

விலை: ரூ.100

தொடர்புக்கு:

டிஸ்கவரி புக் பேலஸ்

பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,

கே.கே.நகர் மேற்கு,

சென்னை - 78.

போன்: 044- 4855 7525

செல்பேசி: 8754507070

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024