Wednesday, January 2, 2019

சுங்கச்சாவடிகள் வசூலில் தன்னிறைவு : பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுமா?

Added : ஜன 02, 2019 00:44 |



'நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள், வசூலில் தன்னிறைவை எட்டி விட்டதால், 40 சதவீதம் பராமரிப்பு கட்டணத்தை மட்டும் வசூலிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அகில இந்திய மோட்டார் காங்., வேண்டுகோள் விடுத்துள்ளது.அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக் குழு உறுப்பினர், சென்னகேசவன், கூறியதாவது:கோல்கட்டாவைச் சேர்ந்த, ஐ.ஐ.எம்., நிறுவனம் நடத்திய ஆய்வில், சுங்கச்சாவடிகள், செக்போஸ்ட்களில் வாகனங்கள் நின்று செல்வதால், எரிபொருள் செலவு, மனித உழைப்பு விரயம் என்ற வகையில், அரசுக்கு, ஆண்டுக்கு, 87 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தது.சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டது முதல், தற்போது வரை, கட்டண வசூல், பெட்ரோல், டீசல் மீதான, 'செஸ்' வரி காரணமாக, சுங்கச்சாவடிகள் மூலம் கிடைத்துள்ள வருவாய், தன்னிறைவை எட்டி விட்டது.எனவே, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும், சுங்கச்சாவடிகள் மூலம், மத்திய அரசுக்கு ஓராண்டில் கிடைக்கும், 19 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் வருவாயை, அகில இந்திய மோட்டார் காங்கிரசே வழங்க தயார் எனவும் அறிவித்தது; அதையும் அரசு ஏற்க மறுத்து விட்டது.தற்போது, நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வர உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், தேவை இல்லாத குழப்பமும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய அரசு, சுங்கச்சாவடிகளில், தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைத்து, 40 சதவீதம் பராமரிப்பு செலவை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி செய்தால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள, 5 கோடிக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், அரசுக்கான வருவாயும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024