Friday, January 18, 2019

வகுப்பறையில் அவலம் :'வாட்ஸ் ஆப்'பில் அம்பலம்

Added : ஜன 18, 2019 00:46

திருப்பத்துார், திருப்பத்துாரில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில், சீருடை அணிந்த மாணவர்கள் சிலர், வகுப்பறையில், ஆசிரியர் முன்னிலையில் ஆட்டம் போடும் காட்சிகள், 'வாட்ஸ் ஆப்'பில் பரவுகிறது.மாணவர்களின் ஒழுங்கீனத்தின் உச்சகட்டமாக, 2018 பிப்ரவரியில், வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் உள்ள, அரசு உதவி பெறும், ராமகிருஷ்ணா பள்ளியில், ஒரு சம்பவம் நடந்தது.பிளஸ் 1 வகுப்பில், ஆபாச படம் பார்த்த மாணவர்களை, தலைமை ஆசிரியர் பாபு கண்டித்தார். ஆவேசம் அடைந்த மாணவர்கள், அவரை கத்தியால் குத்தி, கொலை செய்ய முயன்றனர்.இது நடந்து, ஓராண்டு முடிவதற்குள், திருப்பத்துாரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் பெயரில், மற்றொரு வீடியோ, வாட்ஸ் ஆப்பில் வெளியாகி உள்ளது. அதில், வகுப்பறை ஒன்றில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், 10க்கும் மேற்பட்டோர், பள்ளி சீருடையில், வகுப்பறையில் தாளம் தட்டி, பாட்டு பாடி ஆடுகின்றனர்.ஒரு மாணவன் சட்டையை கழற்றியபடி, நோட்டு புத்தகத்தை, விரலில் வைத்து சுழற்றியவாறு, வகுப்பறையில் ஆட்டம் போடுகிறான்.

மேலும், வகுப்பில் உள்ள ஆசிரியரையும் பணி செய்ய விடாமல் தடுத்து, அவரை கிண்டல் செய்கின்றனர். இந்த வீடியோ, 'டிக் டாக் ஆப்' வழியாக, கானா பாடலுடன் சேர்ந்து, மாணவர்களின் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரும், மாணவர்களின் தரம், ஏன் இப்படி கெட்டு விட்டது என, கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இந்த வீடியோ, அன்றாட சம்பவங்களில் ஒரு சிறு பகுதி தான். இன்னும் மோசமான நிலை தான், அரசு பள்ளிகளில் உள்ளது.குறிப்பாக, வட மாவட்ட பள்ளிகளில், இந்த பிரச்னை மிக அதிகமாக உள்ளது. 

ஆசிரியரோ, தலைமைஆசிரியரோ, அதிகாரியோ, இதை தட்டி கேட்க முடிவதில்லை.இந்த மாணவர்களை கண்டித்தால், நடவடிக்கை எடுத்தால், சில அரசியல் கட்சி நிர்வாகிகள், ஜாதிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கொடி பிடிக்கின்றனர். இதுபோன்ற மிரட்டல்களுக்கு மத்தியில் பணியாற்றி, தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டிய இடத்தில் உள்ளோம்.இந்த பிரச்னைகளை, முறையாக தீர்த்தால் மட்டுமே, பெற்றோரும், அரசும் எதிர்பார்க்கும் தரமும், தேர்ச்சியும், அரசு பள்ளிகளில் கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024