Monday, January 7, 2019

மாநில செய்திகள்

நாடு தழுவிய வேலை நிறுத்தம் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை




வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

பதிவு: ஜனவரி 07, 2019 05:30 AM
சென்னை,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் நாளை (8-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (9-ந் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறைகளில் பணியாற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பெரும்பாலான தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் ஆகியவை 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இதேபோல், போக்கு வரத்து, மின்வாரிய சங்கங்களும் பங்கேற்க இருப்பதாக உறுதியளித்து உள்ளன.

போராட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், பா.ஜ.க. தொழிற்சங்கமான பி.எம்.எஸ். தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர்.

இதேபோல், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். போக்குவரத்து ஊழியர்களும் பங்கேற்பதால், பஸ் போக்கு வரத்து பாதிக்கப்படும். ஆட்டோக்களும் ஓடாது. இவ்வாறு அவர் கூறினார்.

வேலை நிறுத்த போராட்டத்தால், அரசு மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுவதுடன், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசின் அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், தலைமைச் செயலக செயலாளர்கள், அனைத்து துறை தலைமை நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 8-ந் தேதி(நாளை), 9-ந் தேதி(நாளை மறுநாள்) ஆகிய இருதினங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளன. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத சில சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.

எனவே, அனைத்து துறை தலைமை நிர்வாகிகளும், மாவட்ட கலெக்டர்களும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களுக்கு இதுகுறித்து தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்த வேண்டும்.

8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அலுவலகத்துக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது. மருத்துவ விடுப்பை தவிர்த்து சாதாரண விடுப்பு போன்ற எந்த விடுப்பும் இந்த இருதினங்களிலும் அனுமதிக்கக்கூடாது.

உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக அனைத்து துறை தலைமை நிர்வாகிகளும், மாவட்ட கலெக்டர்களும் இருதினங்களும் பணிக்கு வராதவர்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

MMC students removed midway from CME programme on LGBTQIA+

MMC students removed midway  from CME programme on LGBTQIA+ C. Palanivel Rajan MADURAI 29.09.2024  At a time when inclusiveness of the LGBTQ...