Friday, January 11, 2019

மாறிப்போன வாழ்த்து முறை..!

By தி. நந்தகுமார் | Published on : 11th January 2019 02:50 AM

ஆங்கிலப் புத்தாண்டு அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்தப் புத்தாண்டு நாளன்றும், முந்தைய நாளன்றும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), முகநூல் (பேஸ்புக்) போன்ற சமூக ஊடகங்களில் தனித் தகவல்களாகவும், குழுவிலும் குவிந்த வாழ்த்துகளோ ஏராளம். சமூக வலைதளக் கணக்கே திணறும் அளவுக்கு அனைவரும் வாழ்த்து மழையில் நனைந்துவிட்டிருந்தனர்.
முன்பெல்லாம், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, புத்தாடைகள் அணிதல், இனிப்புகள் வழங்குதல், பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளுதல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இருக்கும்.

ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது என்பதும் அதில் அடக்கம். பல ஆண்டுகளுக்கு முன் வரை, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்காக நூற்றுக்கணக்கான அச்சகங்களில் இருந்து அச்சிடப்பட்ட லட்சக்கணக்கான வாழ்த்து அட்டைகள் உள்ளூர் கடைகளில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே விற்பனைக்கு வந்திருக்கும்.
கடவுள்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரின் உருவப் படங்கள் அச்சிட்ட வாழ்த்து அட்டைகளும், இயற்கைக் காட்சிகள், முக்கிய சுற்றுலாத் தலங்கள், வெளிநாட்டிலுள்ள முக்கிய இடங்கள் போன்றவற்றின் புகைப்படங்களும், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் என விதவிதமான வாழ்த்து அட்டைகள் ஒவ்வொரு கடைகளிலும் ஆயிரக்கணக்கில் குவித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த அட்டைகளில் அழகிய தமிழில் எழுதப்பட்ட வாசகங்களும், கவிதைகளும் இடம்பெற்றிருக்கும். 

ஒவ்வொருவரும் வாழ்த்து அட்டைகள் விற்பனைக் கடைகளுக்குச் சென்று மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிட்டு, தங்களது பிடித்தமானவரின் மனதைக் கவர்ந்தவற்றை ஞாபகமிட்டு, வாழ்த்து அட்டைகளைத் தேர்வு செய்வர். 

இது மட்டுமன்றி, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் தங்களது வாடிக்கையாளர்களுக்கும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தங்களது ஆதரவாளர்கள் அல்லது தலைவர்களுக்கும் என ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் சுற்றத்துக்கும், நட்புக்கும் என வாழ்த்து அட்டைகளை அனுப்புவதில் ஆர்வம் கொண்டிருப்பர். பலரும் தங்களது விருப்பமான படங்களையும், வாசகங்களையும் அச்சகங்களில் அச்சிட்டு, வாழ்த்துகளைப் பரிமாறியவர்களும் உண்டு. 

இவ்வாறான வாழ்த்து அட்டைகள் அனுப்பும்போது, அருகேயுள்ள நண்பர்களுக்கு அனுப்ப தேர்வு செய்ததைக்கூடச் சொல்லாமல் ரகசியம் காப்போரும் உண்டு. பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன், தேர்வு செய்த வாழ்த்து அட்டைகளை அஞ்சல் தலைகள் ஓட்டி, தபால் நிலையங்களுக்குச் சென்று சேர்ப்பர். பண்டிகை நாளன்று அந்த வாழ்த்து அட்டைகள் சரியாகச் சென்று சேருமா என்பதை அஞ்சல் நிலைய ஊழியர்களிடம் உறுதி செய்வர்.
பண்டிகைக்கு சில நாள்கள் முன்பும், பின்பும் தபால்காரர் சைக்கிளில் ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளை எடுத்துக் கொண்டு, வீடு, வீடாக விநியோகம் செய்வார். அப்போது சிலர் தனக்கு இத்தனை வாழ்த்துக் கடிதம் வந்தது; அவருக்கு இத்தனை வந்தது என மகிழ்ச்சியுடன் பேசி மகிழ்வர்.
இப்போதைய இளைஞர்களுக்கு இதெல்லாம் புதியதாய் இருக்கும். இப்போது அலைபேசியில் குறுந்தகவல்கள் மூலமும், மின்னஞ்சல்கள் மூலமும் வாழ்த்துப் பரிமாற்றம் நடக்கிறது.

இந்த வாழ்த்துகளில் தமிழில் வாழ்த்து என்பது காணாமல் போனது. தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் கூட ஆங்கிலத்தில் எழுதி அல்லவா சொல்கிறார்கள். இந்த வாழ்த்து மொழி தமிங்கலீஷ் என்றே அழைக்கப்படுகிறது.

இணையதளத்தில் மின்னஞ்சல் மூலம் தகவல்கள், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோரும், குறுஞ்செய்தி முறையில் தகவல் பரிமாற்றம் செய்வோரும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நண்பர்களையும், உறவினர்களையும் முகம் பார்த்து முகம் பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தும்தான் வருகின்றனர்.

இப்போது இணையதளத்தில் உள்ள பல்வேறு வலைதளங்களில், ஆங்கில மொழியில் அடங்கிய வாசகங்களைத்தான் வாழ்த்துகளாகப் பரிமாறி வருகின்றனர். காலங்கள் மாறலாம்; வாழ்த்துகள் மாறலாம்; ஆனால், பண்டிகைகள், பழக்கவழக்கங்கள் என்றும் மாறுவதில்லை.இருந்தாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் வாழ்த்துகள் பரிமாற்றம் எப்படியிருக்குமோ?
அண்மைக்காலமாக நவீன நடைமுறைகளுக்கு விடை சொல்லிவிட்டு, பழமையான விஷயங்களை இப்போது நினைவுகூர்ந்து வருகிறோம். வாழ்த்து அட்டைகளிலும், கடித முறையிலான வாழ்த்துகள் காலப் பொக்கிஷங்கள். இப்போதும் பலரும் பல ஆண்டுகளாகப் பத்திரப்படுத்தி வருகின்றனர். இணையதளத்திலும், சமூக வலைதளங்கள் வாயிலான வாழ்த்துகள் அழியக் கூடியன.

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு போன்ற தேசத் தலைவர்கள் சுதந்திரப் போராட்டக் காலத்தின்போது, அவர்கள் குடும்பத்தினருக்கும், போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கும் அனுப்பிய கடிதங்கள் இன்றும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

பாரம்பரியமான அஞ்சல் துறையும் கடிதப் பரிமாற்றங்கள் மறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் கடிதம் எழுதுவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரங்கள் நடத்துகின்றன.
பிளாஸ்டிக் பைகளுக்கு விடை சொல்லிவிட்டு, மஞ்சள் பைகளையும், பாத்திரங்களையும் இப்போது ஆங்கிலப் புத்தாண்டு முதல் கைகளில் எடுத்துள்ளோம். இதுபோன்று இனிவரும் காலங்களில், வாழ்த்து அட்டைகளில் வாழ்த்துச் சொல்லும் நடைமுறையையும் தொடர்வோமே...

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024