ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி
காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ 3 லட்சம் மதிப்பிலான எல்ஐசி பணத்தை மாண்டியா எல்ஐசி நிறுவனம் அளித்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் தான் கர்நாடகா மாநிலம் மத்தூர் அருகில் உள்ள குடிகிரி கிராமத்தை சேர்ந்த குரு.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த குரு, கடந்த 2011-ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் பணியில் சேர்ந்துள்ளார். குருவின் பெற்றோர்களான கொன்னையா- சிக்கோலம்மா தம்பதி, துணிகளை சலவை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர்தான் கலாவதி என்ற பெண்ணுடன் குருவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதவிர குருவிற்கு இரண்டு தம்பிகளும் உள்ளனர். இந்த மாதம் தன்னுடைய ஊருக்கு வந்திருந்த அவர், பிப்ரவரி 10ம் தேதிதான் பணிக்கு திரும்பி இருந்தார். பணிக்கு திரும்பிய சில நாட்களிலேயே அவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார். தாக்குதல் நடந்த அன்று மதியம் கூட தன்னுடைய தாயிடம் குரு பேசியுள்ளார்.
குருவின் உடல் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளையில், உடலை அடக்கம் செய்யக் கூட அவரது குடும்பத்தினருக்கு இடம் இல்லை. இதனையடுத்து அரசு அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தின் சிறு பகுதியை குருவின் உடலை அடக்கம் செய்ய ஒதுக்கியுள்ளனர். இதனிடையே உயிரிழந்த குருவின் மனைவிக்கு அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குருவின் குடும்பத்திற்கு மாண்டியா நகரிலுள்ள எல்ஐசி நிறுவனம் உடனடியாக இன்ஸுரன்ஸ் பணத்தை அளித்துள்ளது. குருவின் குடும்பத்திற்கு ரூ 3,82,199 பணத்தையும் அவரது குடும்பத்திடம் கொடுத்துள்ளது.
வழக்கமாக எல்.ஐ.சி நிறுவனம் ஒருவரது இறப்புக்கு பின்னர் அவரது இறப்பு சான்றிதழ், மருத்துவர் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்ட பின்னரே பணத்தை வழங்குவார்கள். வழக்கத்திற்கு மாறான விபத்து போன்ற மரணம் என்றால் காவல்துறையின் எஃப்.ஐ.ஆர் சான்றிதழ் கேட்பார்கள். ஆனால், சிஆர்பிஎப் வீரர் குருவின் இறப்பு செய்தி கேள்விப்பட்டது, எவ்வித ஆவணங்களையும் பெறாமல் உடனடியாக அவரது குடும்பத்திற்கு சேர வேண்டிய தொகையை எல்.ஐ.சி விடுவித்துள்ளது. எல்.ஐ.சியின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment