Friday, January 3, 2020

வறுமையிலும் விடாமுயற்சியால் சாதனை; குரூப்-1 தேர்வில் பட்டாசு தொழிலாளி மகள் வெற்றி: துணை ஆட்சியர் பதவிக்கு தேர்வாகிறார் 



03.01.2020

பட்டாசுத் தொழிலாளி மகள் மகாலட்சுமி வறுமையிலும் விடாமுயற்சியுடன் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர் துணை ஆட்சியர் பதவிக்கு தேர்வாகிறார்.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இருவரும் பட்டாசுத் தொழிலாளிகள். இவர்களது மகள் மகாலட்சுமி. இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 362 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலில் இவர் மாநில அளவில் 4-ம் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் மகாலட்சுமி துணை ஆட்சியராகத் தேர்வாக உள்ளார்.

சிறு வயது முதல் மகாலட்சுமி படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமூக சேவையிலும் ஈடுபாடு உள்ளவர். வறுமை காரணமாகப் பட்டாசு மூலப் பொருளான பைப் தயாரிக்கும் தொழிலில் தானும் ஈடுபட்டு குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இவரது அண்ணன் மகேந்திரன் டாஸ்மாக்கில் பணிபுரிகிறார். குடும்ப வறுமையைப் போக்கத் தானும் தினமும் சுமார் ரூ.150 வரை சம்பாதித்துக் கொடுத்துள்ளார். படிப்பைத் தொடரக் கல்விக் கடன் பெற்று சிவகாசி அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக். முடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தபோது தான் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெற வேண்டும் எனக் கூறி தொடர்ந்து 4 ஆண்டுகள் பயிற்சி பெற்றார் மகாலட்சுமி. முதல் முயற்சியில் தோல்வி அடைந்தாலும், தனது விடா முயற்சியால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் துணை ஆட்சியர் பணியை மகாலட்சுமி தேர்வு செய்ய உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, "கல்வி கற்பதற்கும், வெற்றி பெறுவதற்கும் விடாமுயற்சி இருந்தால்போதும். வறுமையிலும் துணிச்சலோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியம், சமூகத்தில் பெரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்ற உந்துதல் என்னை வெற்றி பெறச் செய்தது. அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் மக்களுக்கு நன்மைகளைச் செய்வேன். வரும் 6-ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடக் கிறது. இதில் பங்கேற்று துணை ஆட்சியர் பணியை தேர்வு செய்ய உள்ளேன்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024