Friday, January 3, 2020

பதிவான வாக்கு 13.. அதிலும் ஒன்று செல்லாத வாக்கு: வேட்பாளர் கண்ட சுவாரஸ்ய வெற்றி!

By DIN | Published on : 02nd January 2020 10:17 PM

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் ஊர் மக்கள் தேர்தலை புறக்கணித்ததையடுத்து மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றார்.

திருச்செந்தூர் ஊராட்சிக்குட்பட்ட 11 ஊராட்சிகளில் 6 வார்டுகளைக் கொண்டது பிச்சிவிளை ஊராட்சி ஆகும். இங்கு மொத்தமுள்ள 785 வாக்காளர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தவராவர். இச்சூழலில் சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியைப் பட்டியல் இனத்தவர்க்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து தேர்தலைப் புறக்கணிக்கும் நோக்கில் ஊரட்சியிலுள்ள 6 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர் கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

ஆனால், தலைவர் பதவிக்கு பிச்சிவிளை சாமுவேல் நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (32) மற்றும் மறவன்விளையைச் சேர்ந்த சுந்தராச்சி (50) என்ற இருவர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், தேர்தலைப் புறக்கணிப்பதோடு, தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்திடும் வகையில் அப்பகுதி மக்கள் பிச்சிவிளை கிராமத்தில் கருப்புக்கொடியும் கட்டியிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் உடன்பாடு எடப்படவில்லை.

பிச்சிவிளையில் 13 பேர் வாக்குப்பதிவு :

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் பிச்சிவிளை தலைவர் பதவிக்கு ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த சுந்தராச்சி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரும், அவரைச் சார்ந்தவர்கள் என மொத்தம் 6 பேர் மற்றும் ஊர் மக்கள் 7 பேர் என மொத்தம் 13 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கையில் பதிவான 13 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாத வாக்கு ஆகும். மீதமுள்ள 12 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ராஜேஸ்வரியிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தோஷ் வழங்கினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024