Monday, January 6, 2020

அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்: 8 மாதங்களில் 35 சதவீதம் வளர்ச்சி

By DIN | Published on : 06th January 2020 01:21 AM |

 

சென்னை: அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், தபால்கள், பார்சல்கள் எண்ணிக்கை கடந்தாண்டில் (2019) ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி பொருள்களை அஞ்சல்துறை மூலம் அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, இந்தச் சேவைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
சமூக மேம்பாட்டில் முக்கிய பங்கு: நாட்டில் சமூக, பொருளாதார மேம்பாட்டில் இந்திய அஞ்சல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நாட்டின் தகவல் தொடர்பில் முதுகெலும்பாகத் திகழ்கிறது. அஞ்சல் துறை சார்பில், பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுதவிர, தபால்கள், விரைவு தபால்கள், கடிதங்கள், பார்சல்கள் அனுப்புவது உள்பட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழக அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு கடிதங்கள், தபால்கள், பார்சல்கள் அனுப்புவது தற்போது அதிகரித்து வருகிறது. 2019 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அஞ்சல்துறையில் தனிப்பட்ட, வணிக நோக்கம் இல்லாத தபால்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. வர்த்தக ரீதியாக பார்சல்கள், தபால்களை அனுப்ப அனுமதி அளிக்கப்படவில்லை.
42 பிரத்யேக மையங்கள்: இதற்கிடையில், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூனில் மாற்றம் செய்தது. அதன்படி, வெளிநாடுகளுக்கு வர்த்தக நோக்கத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை அஞ்சல்துறை மூலமாக அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்சல் சேவையை இந்திய அஞ்சல் துறை தொடங்கியது. தமிழக அஞ்சல்துறை சார்பில், வெளிநாட்டுக்கு பார்சல்களை அனுப்புவதற்காக சென்னையில் தியாகராயநகர், அண்ணாசாலை, மீனம்பாக்கம், அசோக் நகர் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 42 பிரத்யேக பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலமாக பார்சல்கள், கடிதங்கள், தபால்கள் ஆகியவற்றை பதிவு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

104 நாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள்: தமிழக அஞ்சல்துறை சார்பில், தினசரி 104 நாடுகளுக்கு சராசரியாக 400 முதல் 550 விரைவு தபால்கள், 300 முதல் 500 பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மொத்த விரைவு தபால்களில் 50 சதவீதம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன. அதேபோல, வெளிநாடுகளுக்குச் செல்லும் மொத்த பார்சல்களில் சுமார் 75 சதவீதம் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
35 சதவீத வளர்ச்சி: அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், தபால்கள், பார்சல்கள் எண்ணிக்கை நிகழாண்டில் (2019-20-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை) 8 மாதங்களில் 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரை 1,32,234 சர்வதேச விரைவு அஞ்சல்கள், பார்சல்கள், கடிதங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 98,621 சர்வதேச விரைவு அஞ்சல்கள், பார்சல்கள், கடிதங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
ரூ.32 கோடி வருவாய்: வெளிநாடுகளுக்கு பார்சல், கடிதங்கள், தபால்கள் அனுப்பியது மூலமாக, கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை தமிழக அஞ்சல்துறைக்கு ரூ.32 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், 2018-19 -ஆம் நிதியாண்டில் ரூ.25 கோடி வருவாய் கிடைத்தது.

இதுகுறித்து, சென்னையில் உள்ளஅஞ்சல்துறையின் வெளிநாட்டு அஞ்சல் பிரிவு இயக்குநர் வி.சந்தானராமன் கூறியது: இந்திய அஞ்சல்துறை மிகவும் குறைவான கட்டணம் வசூலிப்பதால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்கள், பார்சல்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், நமது அஞ்சல் துறை நெட்வொர்க் மிகப்பெரியது என்பதால், வெளிநாடுகளுக்கு பார்சல்கள் எளிதாக சென்று சேருகின்றன.

இதுதவிர, அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும்போது, சுங்கத்துறை அனுமதியையும் எளிதாகப் பெற முடிகிறது. அதிக அளவு பார்சல்களை அனுப்பும் நிறுவனங்களின் இருப்பிடத்துக்கே சென்று அவற்றை சேகரிக்கும் சேவையும் அஞ்சல் துறை வழங்குகிறது.
வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்பும்போது, வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அதை நிவர்த்தி செய்து தேவையான ஆவணங்களைப் பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்பும்போது, சுங்கத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் முழுமையாக பின்பற்றப்படுகிறது.

அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப, சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளரிடம் இறக்குமதி -ஏற்றுமதி எண் (ஐஇசி கோடு) இருக்க வேண்டும். அத்துடன், ஏற்றுமதிக்கான அஞ்சலக பில்லையும் அவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான பார்சல்களை சர்வதேச அஞ்சல் நிலையங்கள் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும்.
விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: அஞ்சல்துறை மூலம், வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும் சேவை குறித்து குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) நல்ல வாய்ப்பு
தமிழக வட்ட அஞ்சல் துறை முதன்மைத் தலைவர் எம்.சம்பத் கூறியது: அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்புவதில் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கிறது. அவர்கள் தனியாக வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்புவதில் அதிக சிரமத்தைச் சந்திப்பார்கள். அதேநேரத்தில், அஞ்சல்துறை மூலமாக தங்கள் பார்சல்களை எளிதாக அனுப்ப முடியும். மேலும், அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்ப குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதைப் பயன்படுத்தி பலன் அடையலாம் என்றார் அவர்.

-மு. வேல்சங்கர்

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024