Friday, January 3, 2020

'நீட்' தேர்வு மதிப்பெண்ணில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை

Added : ஜன 02, 2020 21:00

சென்னை: 'நீட்' தேர்வில் மதிப்பெண் சலுகை உள்ளதால், அதிகமானோர் பங்கேற்கும்படி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, தேசிய அளவிலான நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவர்களுக்கான நீட் தேர்வு, மே, 3ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிசம்பர், 2ல் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், டிசம்பர், 31ல் முடிய இருந்த நிலையில், ஜனவரி, 6 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் தொடர்பான சட்டத்தின்படி, அவர்களுக்கு உயர்கல்வியில், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதன்படி, மருத்துவ படிப்பில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் சேரும் வகையில், அவர்களுக்கு, நீட் தேர்வு மதிப்பெண்ணிலும் சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகையை மாணவர்கள் பலர் பயன்படுத்தாததால், 5 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே, மருத்துவ படிப்பில் சேர்வதாக, மருத்துவ கல்வி இயக்குனரக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, அவர்களுக்கான சலுகைகளை தெரிவித்து, நீட் தேர்வில் அதிகம் பங்கேற்க, தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024