Wednesday, January 22, 2020

'நீட்' பயிற்சியை கைவிட அரசு தீவிர ஆலோசனை

Updated : ஜன 22, 2020 00:34 | Added : ஜன 21, 2020 23:44 |

சென்னை, 'நீட்' தேர்வை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் இந்த தேர்வுக்கான பயிற்சியை கைவிடுவது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை படிப்பு முடித்தவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அதனால் அவர்களால் தரவரிசை பட்டியலில் முன்னிலைக்கு
வந்து மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.

இந்நிலையை போக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. தனியார் மையங்கள் வாயிலாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டில் பயிற்சி அளிக்கும் தேர்வு மையத்தை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நீட் தேர்வுக்கான கற்பித்தல் பயிற்சி அளிக்கப் பட்டது. அவர்கள் வழியாக நீட் சிறப்பு பயிற்சியை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சிலின் சார்பில் நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

இதையும் நீட் தேர்வையும் எதிர்த்து இரண்டு வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளது.தற்போது நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருப்பதால் அரசின் சார்பில் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டால் அது கொள்கை முரண்பாடாக இருக்கும் என பள்ளி கல்வித்துறைக்கு சட்ட வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நீட் பயிற்சியை நடத்தாமல் கைவிடுவது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024