Saturday, March 28, 2020

டாக்டர்கள், நர்ஸ்களுக்கு 138 பஸ்கள் இயக்கம்

Added : மார் 27, 2020 20:37

சென்னை :அரசு மருத்துவமனை ஊழியர்களின் போக்குவரத்துக்காக, 138 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பலருக்கு, சொந்த வாகனங்கள் இல்லை. தற்போது, கொரோனா தடுப்புக்காக, ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் வகையில், தமிழகம் முழுதும், 138 அரசு மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்த, தமிழக போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து, போக்குவரத்து துறை கமிஷனர், தென்காசி எஸ். ஜவகர் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள, 21 சோதனை சாவடிகளையும் மூடி, பிற மாநில வாகனங்கள் நுழைவதை தடுத்து வருகிறோம். அதேநேரம், அருகில் உள்ள மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், உணவு பொருட்கள், கோழித் தீவனங்கள், மாட்டுத் தீவனங்கள்.மருந்துகள், மருந்து தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள், காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி வரும் வாகனங்களை, தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கிறோம். ஓட்டுனர்களையும் பரிசோதித்து, வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து, உள்ளே நுழைய அனுமதிக்கிறோம்.மேலும், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சொந்த வாகனங்கள் இல்லாத, அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான வாகனங்களை, மாவட்ட கலெக்டர்களின் வேண்டுகோள்படி, ஏற்பாடு செய்து அனுப்புகிறோம்.

சென்னை போக்குவரத்து மண்டலத்துக்கு, 23; விருதுநகர் போக்குவரத்து மண்டலம், 15; ஈரோடு, 25; தஞ்சைக்கு, 1 என, மொத்தம், 64 தனியார் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்து உள்ளோம். அதேபோல், ஈரோடுக்கு, 9; சேலம், 5; மதுரை, 18; கோவை, 14; தஞ்சை, 5; திருச்சி, 13; விழுப்புரம், 1; வேலுாருக்கு 9 என, மொத்தம், 74 அரசு போக்குவரத்து கழக பஸ்களையும் ஏற்பாடு செய்துள்ளோம்.தேவைக்கு ஏற்ப, மேலும் வாகனங்களை ஏற்பாடு செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.01.2025