முகேஷ் குமார் மனு மீண்டும் தள்ளுபடி
Added : மார் 17, 2020 22:29
புதுடில்லி, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளியான முகேஷ் குமார் தாக்கல் செய்த மனு, மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, வரும், 20ல், துாக்கு தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்டனை நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்தும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சார்பில், டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த அன்று, நான் டில்லியில் இல்லை. ராஜஸ்தானில் இருந்த என்னை, போலீசார் பிடித்து வந்து, இந்த வழக்கில் சேர்த்து விட்டனர். எனவே, எனக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'தண்டனை நிறைவேற்றுவதை மேலும் தாமதிக்கும் நோக்கத்தில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, முகேஷ் குமார் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். குற்றவாளி முகேஷ் குமாரின் தாயார் சார்பில், துாக்கு தண்டனையை எதிர்த்து, தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுவும் தள்ளுபடியானது.
இந்நிலையில், வரும், 20ம் தேதி அதிகாலை, 5:30க்கு நான்கு பேருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள், டில்லி திஹார் சிறையில் தயாராகி வருகின்றன. துாக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர், பவன் ஜலாட் உத்தர பிரதேச மாநிலம், மீரட் சிறையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றவாளி அக் ஷய் குமார் இரண்டாவது கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று அனுப்பினார்.
No comments:
Post a Comment