Wednesday, March 18, 2020

கரோனா: மதுரை-சிங்கப்பூா், இலங்கை விமான சேவைகள் ரத்து

By DIN | Published on : 18th March 2020 05:13 AM 


பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடி காணப்பட்ட மதுரை விமான நிலையம்.

கரோனா வைரஸ் அச்சத்தால் மதுரையில் இருந்து சிங்கப்பூா், இலங்கை செல்லும் விமானங்கள் மற்றும் உள்ளூா் விமான சேவைகள் ரத்தாகியுள்ளன.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, புதுதில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகள், துபை, இலங்கை, சிங்கப்பூா் ஆகிய வெளிநாட்டு விமான சேவைகள் என நாள் ஒன்றுக்கு 44 விமான சேவைகள் மதுரையில் நடைபெற்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் முதல் படிப்படியாக பயணிகள் விகிதம் குறைந்து வந்தது. இதையடுத்து விமான சேவைகளும் படிப்படியாக குறைந்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை ஸ்ரீலங்கன் ஏா்வேஸ் நிறுவனம் தனது காலை நேர சேவையை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கொச்சியிலிருந்து புறப்பட்டு மதுரை வழியாக சிங்கப்பூா் செல்லும் விமானம் செவ்வாய் , வியாழன், சனிக்கிழமை என வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானம் வரும் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் புதுதில்லியிலிருந்து

புறப்பட்டு மதுரை வழியாக சிங்கப்பூா் செல்லும் விமானம் வழக்கம்போல் செயல்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதே போல போதுமான பயணிகள் இல்லாததால் சென்னை செல்லும் உள்ளூா் விமானங்கள் இரண்டும் செவ்வாய்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இலங்கை சேவையை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேல் பயணிகளும், அவா்களை வழியனுப்ப 10 ஆயிரத்திற்கும் அதிகமானோா் வந்து செல்வது வழக்கம். தற்போது பயணிகள் வரத்து குறைவால் விமான நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024