தங்க நகை சேமிப்பு திட்டங்களில், தவணை செலுத்துவதில் சிக்கல்
Added : மார் 26, 2020 21:19
'தங்க நகை சேமிப்பு திட்டங்களில், வாடிக்கையாளர்கள், இம்மாதம் தவணை தொகையை செலுத்த தவறினாலும், முழு சலுகையும் வழங்கப்படும்' என, நகை கடைகள் தெரிவித்துள்ளன.தமிழகத்தில், 35 ஆயிரம்தங்க நகை
கடைகள் உள்ளன. அவை, மொத்தமாக பணம் கொடுத்து, தங்கம் வாங்க முடியாதவர்களின் வசதிக்காக, மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன.
வாடிக்கையாளர்கள், மாதம், 500 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, 11 மாதங்களுக்கு பணம் செலுத்தி, தீபாவளி, அக் ஷய திருதியை போன்ற விசேஷ நாட்களில், தங்கம் வாங்குகின்றனர்.அவ்வாறு, சேமிப்பு திட்டங்களில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு, நகை கடை நிறுவனங்கள், ஒரு மாத தவணை தொகை இலவசம்; தங்க நகைகளுக்கு செய்கூலி தள்ளுபடி, பரிசு பொருட்கள் என, பல சலுகைகளை வழங்குகின்றன.தவணை தொகையை ஒழுங்காக செலுத்தவில்லை எனில், முழு சலுகைகளும் கிடைக்காது. நகை கடைகளுக்கு, தவணை தொகையை இணையதளம் வாயிலாக செலுத்தும் வசதி இருந்தும், நேரில் தான் பலர் செலுத்துகின்றனர்.தற்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அதனால், இம்மாதம் தவணை செலுத்த தவறினாலும், வாடிக்கையாளர்களுக்கு, முழு சலுகைகள் வழங்கப்படும் என, நகை கடைகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில், அனைத்து நகை கடைகளும், ஏப்., 14 வரை செயல்படாது; நகை சேமிப்பு திட்டங்களில் சேர்ந்தவர்கள்,இம்மாதம் தவணை தொகையை செலுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை.அவர்கள், இம்மாத தவணையை, அடுத்த மாதம் சேர்த்து செலுத்தலாம். அவர்கள், நகை கடைகளின், எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் உள்ளனரோ, அதற்கு ஏற்ப, முழு சலுகைகளும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் - -
No comments:
Post a Comment