Friday, March 27, 2020

கொரோனா கண்காணிப்பில் இருப்பவர்கள் வீதியில் திரிவதால் பீதி எங்கே போனது சமூகப் பொறுப்பு

Added : மார் 26, 2020 23:05

மதுரை, தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளவர்கள் வீதியில் திரிவதால் மக்களுக்கும் அச்சம் தொற்றியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவத்துவங்கியதும் வெளிநாடுகளில் வேலை செய்த, சுற்றுலா சென்ற தமிழர்கள் சொந்த ஊர் திரும்பினர். அப்படி ஊர் திரும்பிய 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் பரிசோதித்தனர். பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிப்பிற்குள்ளான மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களையும் சுகாதாரத்துறை தனிமைப்படுத்தியுள்ளது.தவிர மாநிலத்தில் நேற்று பகல் வரை 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். மாநிலத்தில் இதுவரை 16 ஆயிரம் பேர் தனிமைவாசம் அனுபவிக்கின்றனர். 28 நாட்கள் வரை இதை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு, அவர்கள் வீடுகளிலும் அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அறிகுறி தென்பட்டால் உடனடியாக தங்களை தொடர்புகொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.ஆனால் சமூகப்பொறுப்பை உணராத பலரும் கட்டுப்பாடுகளை மீறுகின்றனர். குடும்ப விழாக்களில் பங்கெடுப்பது, நண்பர்களுடன் கூடுவது என கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தெருக்களிலும் சர்வசாதாரணமாக உலா வருகின்றனர். கொரோனா அறிகுறி சில நாட்கள் கழித்தும் வரலாம். ஒருவேளை பாதிப்பு தென்பட்டால், இவர்கள் மூலம் குடும்பத்தினர், உறவினர், பக்கத்து வீட்டுக்காரர்களையும் கொரோனா தாக்கும் அபாயம் உள்ளது. 

இதை உணராமல் தனக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என்ற மெத்தனத்தில் பலரும் வீதியில் நடமாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் இவர்களை தினமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.உள்ளாட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் தான் 75 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு சுகாதார ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சிகளில் 20 பேர் தான் உள்ளனர். இதர துறை அதிகாரிகளையும் இப்பணியில் இணைத்து, வார்டுகளை பிரித்து வழங்கினால் மட்டுமே கண்காணிப்பது சாத்தியம். பாதுகாப்பிற்காக போலீசாரையும் இணைக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024