Saturday, March 28, 2020

அலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள் தமிழகத்தில் 'கொரோனா' பரவும் அபாயம்

Added : மார் 27, 2020 23:31

சென்னை :மத்திய, மாநில அரசுகள், பலமுறை அறிவுறுத்தியும், பலரும் வீட்டில் இல்லாமல் அலட்சியப் போக்குடன் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவர்களால், தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ், சமூக தொற்றாக பரவும் அபாயம் உருவாகி உள்ளது.கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. உலகளவில் பிப்., 26ல் 81 ஆயிரத்து, 820 ஆக இருந்த கொரோனா தொற்று, மார்ச் 26ல், 5.34 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நோயால் ஏற்பட்ட இறப்பு, இத்தாலியில், 8,000த்தையும், ஸ்பெயினில், 4,000த்தையும் தாண்டிவிட்டது.

பொருளாதாரத்தில், மருத்துவத்தில் முன்னேறிய நாடுகள் கூட, திடீரென அதிகரித்த நோய் தொற்றால் தவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், இந்நோய் குறித்த அலட்சியப் போக்கே. பாதிப்பு அதிகரித்த பின், அவசர அவசரமாக ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன.அதேபோல், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் அலட்சியப் போக்கு நீடித்தால், அதன் விளைவுகள், பல மடங்கு அதிகமாக இருக்கும்.இதை உணர்ந்தே, பிரதமர் மோடி, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கட்டாயமாக பின்பற்றவும் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தடையுத்தரவு அமலானாலும், மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லை. இந்நோய் தொற்று குறித்த அபாயத்தை உணராமல், போலீசாருக்கு, 'டிமிக்கி' கொடுத்து, ஊர் சுற்றுவதில், சிலர் இன்பம் காண்கின்றனர்.மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அதன் விற்பனை தடை செய்யப்படவில்லை. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்தி, சாலையில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.குறிப்பாக, உழவர் சந்தைகளில், காய்கறி வாங்க, போட்டி போட்டு கும்பலாக நிற்கின்றனர். அதிலும் பலர், அன்றைய தேவைக்கு மட்டும் காய்கறி வாங்கிச் செல்கின்றனர். மீண்டும் அடுத்தடுத்த நாட்களில், உழவர் சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் வலம் வருகின்றனர்.

இப்படி தினமும் ஒரு மணி நேரம் வரை, ஊர் சுற்ற, பொருட்கள் வாங்குவதாக காரணம் சொல்கின்றனர். ஆபத்து காலத்தில், ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கலாம் என்றோ, அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்ற எண்ணமோ பலரிடம் இல்லை.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார், பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை வைத்துள்ளனர். ஆனால், பலரும் மருந்து சீட்டு, மருத்துவமனை கார்டுகளை வைத்து, இருசக்கர வாகனங்கள், கார்களில் தாராளமாக செல்கின்றனர்.போலீசார் தடுத்து நிறுத்தி கேட்டால், மருந்துக் கடை, மருத்துவமனை, வங்கிகள் மற்றும் மளிகை கடைகளுக்கு செல்வதாக பதில் அளிக்கின்றனர். இதனால், தெருவில் உலா வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறுகின்றனர். இதனால், சமூக தொற்று ஏற்பட்டு பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.இத்தாலியில் ஒரே ஒரு பெண் மூலம் 30 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகினர் என்கிறது புள்ளி விபரம்.
ஒவ்வொருவரின் அலட்சியப் போக்கும், பல நோயாளிகளை, வயதானவர்களை, கர்ப்பிணிகளை, குழந்தைகளை பாதிக்கும் என்பதை உணர்வதில்லை.நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் வீழ்ச்சி ஏற்படும் என்ற நிலையிலும், மத்திய அரசு எடுத்துள்ள ஊரடங்கு உத்தரவு முடிவு, எந்த அளவுக்கு முக்கியமானது என்பது, பலருக்கும் புரியவில்லை. 'எனவே, ஊர் சுற்றுவோரை கடுமையாக தண்டித்து, நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும்' என, மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஜப்பானை பின்பற்றுவோம்

கொரோனா பரவ தொடங்கிய போது, நோய் தொற்று எண்ணிக்கையில், இரண்டாம் இடத்திலிருந்த ஜப்பான், பின் சுதாரித்து, அரசு எடுத்த நடவடிக்கை, மக்களின் சுய ஒழுக்கம், அங்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியுள்ளது. சில நாட்களாக, அங்கு புது தொற்று வரவில்லை.தற்போது வரை, 1,387 பேர் மட்டும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற நிலை இந்தியாவில் வரவேண்டும் என்றால், பொதுமக்கள் ஒத்துழைப்பு, சுயக் கட்டுப்பாடு அவசியம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.01.2025