கொரோனாவை விட கொடூரமான வதந்திகள்; சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படுமா?
Updated : மார் 27, 2020 05:22 | Added : மார் 27, 2020 05:19 |
சென்னை: 'கொரோனா' குறித்து, தவறான வதந்திகள் பரப்பப்படுவதால், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உலகை உலுக்கும், 'கொரோனா' உயிர்க்கொல்லி நோயை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. தமிழகத்தில், கொரோனாவால், மதுரையில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆனால் நேற்று, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சென்னையில் தலா ஒருவர் பலியானதாக, பேஸ்புக்கில் தவறான தகவல் பரவியது. இத்தகவல் பரவியதும், தமிழக சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார், தகவல் பரப்பியவர்களை கண்காணித்து எச்சரித்ததால், உடனடியாக பேஸ்புக்கில் இருந்து, அப்பதிவுகள் நீக்கப்பட்டன.
இதேபோல், மாநிலம் முழுவதும், பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்புபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசின் சமூக ஊடகப் பிரிவுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், போலீசாரின் பணிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது. 'எனவே, கொரோனா கட்டுக்குள் வரும் வரை, நாடு முழுவதும், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்க, உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'தவறான தகவல் பரப்புவதால், மக்கள் இடையே தேவையற்ற குழப்பம், பீதி ஏற்படுகிறது. சைபர் கிரைம் போலீசார், கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலும், கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை தடை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment