இரண்டாக பிளந்தது விமானம்!: தீப்பிடிக்காததால் பெரும் விபத்து தவிர்ப்பு
Added : ஆக 07, 2020 23:38
மலப்புரம்; -துபாயில் இருந்து வந்த, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின், 'போயிங் 737' ரக விமானம், கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில், தாங்கொணா மழைக்கிடையே தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
ஓடுபாதையில்இருந்து விலகி, பள்ளத்தில் விழுந்து, இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில், பைலட் உட்பட, 16 பயணியர் பலியாயினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர, சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் விமானம், நேற்றிரவு வந்தது.இதில், 174 பயணியர் உட்பட, 191 பேர் இருந்தனர்.
இந்த விமானம், மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில், நேற்று இரவு, 7:40 மணிக்கு தரைஇறங்கியது; அப்போது, கோழிக்கோடில் பலத்த மழை பெய்தது.இதனால், இந்த விமானம் தரையிறங்கியபோது, ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று, அருகில் இருந்த, 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து, இரண்டாக உடைந்து விபத்துக்கு உள்ளானது. விமானத்தின் உடைந்த பாகங்கள், தீப்பிடித்து எரிந்ததாக, அதை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
எனினும், விமானம் முழுதும் தீப்பிடிக்காததால், அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.இந்த விபத்தில், விமான பைலட், ஒரு குழந்தை உட்பட, 11 பேர் உயிரிழந்துள்ளதாக, முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தின் இடிபாடுகளில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர், பயணியரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், விமான நிலையத்திற்குள் சென்று, காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன. விமான விபத்து குறித்து, மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2010ல், கர்நாடகாவின் மங்களூருவில், இதேபோல், பயணியர் விமானம், ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில், 158 பேர் உயிரிழந்தனர். விமான விபத்து குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயனை, தொலைபேசியில் தொடர்புகொண்டு, பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட, தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள, போலீஸ் மற்றும், தீயணைப்புப் படையினருக்கு, முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்
.விமானத்தில் பயணித்தோரின் தகவல்களை பெற, 0483-2719493, 0495-2376901 என்ற தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.'டேபிள்டாப்' ஓடுபாதை!விபத்து நிகழ்ந்த கரிப்பூர் விமான நிலையத்தின் ஓடுபாதை, 'டேபிள்டாப்' எனப்படும், மலை மீது அமைந்துள்ள ஓடுபாதையாகும். அதன் இரு முனைகளிலும், செங்குத்தான பள்ளங்கள் அமைந்துள்ளன. இங்கு மிகவும் கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே, பைலட்டால், ஓடுபாதையில் சரியாக விமானத்தை தரையிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment