Wednesday, December 2, 2020

ஆர்.டி.ஜி.எஸ்., 24 மணி நேர சேவை அமல்: வங்கி விடுமுறை நாட்களில் குழப்பம்

ஆர்.டி.ஜி.எஸ்., 24 மணி நேர சேவை அமல்: வங்கி விடுமுறை நாட்களில் குழப்பம்

Added : டிச 02, 2020 02:22

கோவை:வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்.டி.ஜி.எஸ்., சேவை நேற்று முதல் 24 மணி நேரமும் செயல்பட துவங்கியுள்ளது.

மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியின் கிளையில் இருந்து அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் பணம் அனுப்ப பயன்படும் வங்கி சேவை தான் ஆர்.டி.ஜி.எஸ்., எனப்படுகிறது.'நெப்ட்' சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம், இரண்டு லட்சம் ரூபாய் வரையில் தான் பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், ஆர்.டி.ஜி.எஸ்., சேவையை தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், 'நெப்ட்' உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்களை கடந்த சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. இதன்தொடர்ச்சியாக தற்போது ஆர்.டி.ஜி.எஸ்., சேவை, 24 மணி நேரமும் செயல்படுத்துவது, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை ஆர்.டி.ஜி.எஸ்., நடைமுறை வங்கி வேலை நாட்களில் மட்டுமே செய்யப் பட்டது. காலை, 7.00 மணி முதல் மாலை, 6.00 மணி வரை மட்டுமே இச்சேவை வழங்கப்பட்டு வந்தது.ரிசர்வ் வங்கி, 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ்., செயல்பட அனுமதித்துள்ள நிலையில், வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஜி.எஸ்., சேவை இல்லை என, குறிப்பிடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், வங்கி விடுமுறை நாட்களில் ஆர்.டி.ஜி.எஸ்., சேவை இருக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சேவையை சில நாடுகள் மட்டுமே வழங்கி வரும் நிலையில், தற்போது இப்பட்டியலில் நம் நாடும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024