Wednesday, December 2, 2020

பி.டி.எஸ்., படிக்க ஆர்வமில்லை

பி.டி.எஸ்., படிக்க ஆர்வமில்லை

Updated : டிச 02, 2020 00:21 | Added : டிச 02, 2020 00:18

சென்னை:மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில், 429 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின. பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், பி.டி.எஸ்., படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு விளையாட்டரங்கில், 2020 - 21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொது பிரிவினருக்கான, 3-வது நாள் கவுன்சிலிங்கிற்கு, 452 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அதில், பெற்றோருடன், 443 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 406 மாணவர்கள் இடங்களை பெற்றனர். அதே போல், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 23 இடங்கள் என, நேற்று மட்டும், 429 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

பொது பிரிவினருக்கான, மூன்றாவது நாள் கவுன்சிலிங்கில், நேற்று வரை, பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவ படிப்புகளில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.தற்போது, பொதுப் பிரிவினருக்கான சேர்க்கையில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,653 எம்.பி.பி.எஸ்., - 151 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 1,037 எம்.பி.பி.எஸ்., - 985 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

இருப்பிட சான்று: 4 பேருக்கு சிக்கல்

சென்னையில் நடைபெறும் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், பிறப்பிட சான்றிதழ் பிரச்னையால், நான்கு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களில், கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவர், அகில இந்திய ஒதுக்கீட்டில், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரியிடம் இடம் பெற்றார்.

அதனால், மாநில ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கவில்லை.நேற்று நடந்த கவுன்சிலிங் பங்கேற்றவர்களில், நான்கு மாணவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படவில்லை. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024