18.07.2021
வயதானவர்கள் போட்டியிடும் நீட் தேர்வு; வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு டாக்டர் சங்கம் கோரிக்கை
https://www.hindutamil.in/news/tamilnadu/694166-need-to-set-a-maximum-age-limit-for-writing-the-exam-doctor-association-request-for-social-equality-to-the-federal-government-4.html
“நீட் தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பை தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நிர்ணயிக்கவில்லை. இதன் காரணமாக வசதி படைத்த, பட்டப் படிப்பு படித்த, வயதானவர்கள், வேறு பணியில் உள்ளவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் கூட நீட் தேர்வை எழுதி மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள். ஆகவே, நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பை 21 ஆக நிர்ணயிக்க வேண்டும்” என சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று வெளியிட்ட அறிக்கை:
''இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் நாள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசிகளைப் போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இத்தேர்வை நடத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நீட் தேர்வு மையங்களை உருவாக்கிட வேண்டும். தேர்வு மையங்களின் நுழைவாயிலில் மாணவ, மாணவிகளின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில், கெடுபிடியான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதைத் தடுத்திட வேண்டும். அத்துடன் , மத்திய அரசு கீழ்க்கண்ட முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
* பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் நீட் விண்ணப்பக் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
* மாவட்டத் தலைநகரங்களிலும் நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, தேசிய தேர்வு முகமை, தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பயிற்சி மையங்களை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.
* நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் பொழுதே, தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான தர வரிசைப் பட்டியல்கள், (National & State level RANK LISTS) முழுமையாக, வெளியிடப்படுவதே இல்லை. இந்த வெளிப்படைத் தன்மையில்லாத போக்கு கண்டிக்கத்தக்கது. இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது.
எனவே,நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் பொழுதே, தேசிய அளவில் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர், நீட் தேர்வு பதிவு எண், வாங்கிய மதிப்பெண், தர வரிசை எண், ஆதார் எண், வகுப்பு (Community), இருப்பிடச் சான்றிதழில் உள்ளபடி மாணவரின் மாநிலத்தின் பெயர், போன்ற விவரங்களுடன், தர வரிசைப் பட்டியலை முழுமையாக வெளியிட வேண்டும்.
இதேபோல் மாநில அளவில், ஒவ்வொரு மாநிலத்துக்குமான தர வரிசைப் பட்டியலையும், முறையாக வெளியிடவேண்டும்.
* தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை கடைசி வரை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே நடத்திட வேண்டும். அதுவே தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை இறுதி வரை உறுதிப்படுத்திடும்.
ஆனால், தற்போது உள்ளது போல், தனியார் கல்லூரிகளும், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களும் கடைசிக் கட்டத்தில், மாப் அப் ( mop up ) கவுன்சிலிங் மூலம் நேரடியாகத் தாங்களாகவே மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள, அனுமதிக்கக் கூடாது. தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் லாபத்திற்காக நீட் கட் ஆஃப் பர்சென்டைலை கடைசி நேரத்தில் குறைத்திடக் கூடாது.
* நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கான கல்விக் கட்டணங்களை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.
* ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். கல்விக் கடன்களை வட்டி இல்லாமல் தேசிய மயமாகப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கிட வேண்டும். கல்விக் கடன்களுக்கான (Bank surety) வங்கி பிணையத் தொகைக்கு மத்திய, மாநில அரசுகள் (கேரள அரசு போல்) பொறுப்பேற்க வேண்டும்.
* நீட் தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பை தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நிர்ணயிக்க வில்லை. இதன் காரணமாக வசதி படைத்த, பட்டப் படிப்பு படித்த, வயதானவர்கள், வேறு பணியில் உள்ளவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் கூட நீட் தேர்வை எழுதி மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் படிப்பு இடங்கள் போதிய அளவில் இல்லாத ஒரு நாட்டில், ஒரு இளம் மாணவருக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தால் அவர் நீண்டகாலம் சமூகத்திற்கு சேவை செய்வார். வயதானர்கள், ஓய்வு பெற்றவர் மருத்துவராகும் பொழுது அவர் சமூகத்திற்கு சேவை செய்யும் காலம் குறைகிறது.
அது சமூக நலனுக்கு எதிரானது. எனவே,தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான உச்சபட்ச வயதை பொதுப் பிரிவினருக்கு 21 ஆக நிர்ணயிக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 25 ஆக நிர்ணயிக்க வேண்டும்.
* நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் மாநிலங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து விலக்கு வழங்கிட வேண்டும்.
* நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் தவறுகள், குளறுபடிகள் நடக்காமலும், முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை நடைபெறாமலும் தடுத்திட வேண்டும்.
* அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசுகள் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உடனடியாக 27 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்”.
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment