Sunday, August 1, 2021

திறந்தநிலை பல்கலையில் முதுநிலை பட்டம்; அதிகாரிக்கு பதவி உயர்வு மறுத்தது சரியே


திறந்தநிலை பல்கலையில் முதுநிலை பட்டம்; அதிகாரிக்கு பதவி உயர்வு மறுத்தது சரியே

Added : ஆக 01, 2021 00:11

சென்னை-'பட்டப்படிப்பு படிக்காமல், திறந்தநிலை பல்கலையில், நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு மறுத்தது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலுார் மாவட்டம் சோளிங்கரில், இரண்டாம் நிலை சார் - பதிவாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றுகிறார். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று, 2009ம் ஆண்டில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.முதல் நிலை சார் - பதிவாளர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. திறந்தநிலை பல்கலையில் நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றதால் இடம் பெறவில்லை. பதவி உயர்வுக்கு பரிசீலிக்க கோரியதும் நிராகரிக்கப்பட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, பதிவுத்துறை ஐ.ஜி., வணிக வரித்துறை செயலர் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:பட்டப்படிப்பு படிக்காமல், திறந்தநிலை பல்கலையில் நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்களை, பணி நியமனத்துக்கு, பதவி உயர்வுக்கு பரிசீலிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, பதவி உயர்வு பட்டியலில், செந்தில்குமாரை சேர்க்காதது சரிதான்.தகுதி மற்றும் சீனியாரிட்டியால் மட்டுமே, பதவி உயர்வு பெறுவதற்கான உரிமை வந்து விடாது. கல்வி தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு முடிக்காமல், திறந்தநிலை பல்கலையில் நேரடியாக முதுநிலை பட்டத்தை செந்தில்குமார் பெற்றுள்ளார்.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இது செல்லாது. அதிகாரிகள் சரியாக நிராகரித்துள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024