கடைக்கு செல்ல சான்றிதழ்: கேரள அரசு புதிய யுக்தி
6.8.2021
திருவனந்தபுரம்:'தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு கடை, வங்கிகளுக்கு செல்ல வேண்டும்' என, பொதுமக்களுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கேரளாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசும், சுகாதாரத் துறையும் திணறி வருகின்றன. இந்நிலையில் திருவோண பண்டிகைக்காக கடைகளை திறக்க அனுமதி வழங்கினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கடைகள், மார்க்கெட், வங்கி, திறந்தவெளி சுற்றுலா மையம், வியாபார நிறுவனங்களுக்கு செல்பவர்கள் குறைந்த பட்சம் இரண்டு வாரத்துக்கு முன், முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லையெனில் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை 'நெகடிவ்' சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இதன் வாயிலாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என, கேரள அரசு கருதுகிறது.
அரசின் இந்த முடிவுக்கு காங்., தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அவர்கள் கூறுகையில், 'கேரளாவில் 42 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு மக்களை பெரிய அளவில் பாதிக்கும்' என்கின்றனர்.மாநில அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
No comments:
Post a Comment