ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை!
நன்றி குங்குமம் தோழி
மோட்டுவளைச் சிந்தனை - விக்னேஸ்வரி சுரேஷ்
நடந்துகொண்டே மெசேஜ் அனுப்புவது, அலுவலக மீட்டிங் நடக்கையில் நைசாக டேபிளுக்கு அடியில் மின்னஞ்சல் அனுப்புவது, கரண்டியை ஒரு கைக்கும், அலைபேசியை மற்றொரு கைக்கும் தருவது என அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பெரும்பாலானவை ‘மல்ட்டிடாஸ்கிங்’தான். அதாவது, ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது. குழந்தையாக இருக்கும் போதே இதை தொடங்கி வைத்துவிடுகிறோம். ‘கார்ட்டூன் போட்டு விட்டா போதும், ஈஸியா சாப்பாட்டை ஊட்டி விட்றலாம்’ என்பதில் தொடங்கி, பெரியவர்களும் உணவை சீரியல் அல்லது மேட்ச் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வரை எல்லாமே மல்ட்டிடாஸ்கிங்தானே!
ஒரே வேளையில் குக்கர், தொலைபேசி, கழிவறையிலிருக்கும் குழந்தை, காலிங் பெல் என பல (ஒன்றிரண்டு குறையும்) என்னை அழைக்கும் காலை வேளைகள் உண்டு. இவற்றையெல்லாம் ஏதோ அஷ்டாவதானி போல சமாளித்துப் பார்த்ததில் ‘சகல வேலைகளையும் சொதப்புவது எப்படி?’ என்று கட்டுரை எழுதும் அளவுக்கு விஷயம் வைத்திருக்கிறேன். வாசலில் தலையை சொரிந்து கொண்டு நிற்கும் கூர்காவிடம், ‘திரும்ப எப்போ வருவீங்க? உங்கள பார்க்கணும் போல இருக்கு’ என்றும், போனில் காத்திருக்கும் மாமியாரிடம் ‘போன வாரம்தான வந்தீங்க?
அதுக்குள்ள என்ன?’என்றும் கேட்கும் அளவுக்கு நிலைமை சிக்கலாகிப் போனது. அதன் பின் ஒரு சுபயோக சுபதினத்தில், மின்விசிறிக்கு அடியில் கிடைத்த ஞானம் என்னவென்றால், ‘மல்ட்டி டாஸ்கிங் மண்ணாங்கட்டியெல்லாம் எனக்குச் சரி வராது’ என்பதுதான். அதிக பட்சம் இரண்டு வேலைகளையே ஒரு நேரத்தில் ஒழுங்காக செய்ய வருகிறது!
‘ஒரு நேரத்தில் ஒரு வேளை’ என்பதை வாழ்வின் வழக்கமாகக் கொண்டு வர கொஞ்சம் மெனக்கெடலும், கொஞ்சம் திட்டமிடலும் போதுமானதாக இருக்கிறது.
உதாரணமாக காலையில் 7 மணிக்கு பிறகுதான் நிறைய வேலைகள் குவிகிறதென்றால், அதற்கு முன் செய்துவிடக்கூடியதாக சமையல் இருந்தது. ஆரம்பத்தில் 5 மணிக்கு எழுவதென்பது கருடபுராண தண்டனை போலிருந்ததை மறுக்க முடியாதுதான். போர்வை துணையை விட்டு பிரிய மனசேயில்லை. ஆனால், எம்.எஸ். அம்மாவையோ இளைய
ராஜாவையோ சேர்த்துக்கொண்டபின், வேறு யாருமற்ற 5 மணி இனிமையாகிவிட்டது. முடிவில், குழந்தைகளை அதட்டாமல் கிளப்ப முடிகிறது. நேரம் தெரியாமல் வாசலில் நின்று மொக்கை போடுபவருக்கு கூட புன்னகையை தர முடிகிறது.
எல்லாவற்றையும் விட, கணவருக்கான நைட்டி, பரட்டை தலை தரிசனத்தைத்தவிர்க்க முடிகிறது!
பல ஆராய்ச்சிகள் இந்த தலைப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் முடிவில், ‘மல்ட்டிடாஸ்கிங்’ என்பது உங்கள் நேரத்தை சேமிக்கவில்லை... மாறாக அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதுடன், உங்கள் உடல்நலத்தையும் பாதிக்கிறது என்று வெளியிட்டிருக்கிறார்கள்.ஏனெனில், நம் மனது ஒரு வேலையில் மட்டும் ஒருங்கிணைந்து இருக்கையில், அந்த வேலையை கவனமாக இசைவுடன் செய்கிறோம். அதில் பிழை ஏற்படுவதோ, மீண்டும் மீண்டும் செய்வதற்கான வாய்ப்போ குறைகிறது.
கணினியில் செய்யக்கூடிய வேலைகளையே எடுத்துக்கொள்ளலாம். அவற்றில் எதையெல்லாம் ஒன்றிணைக்க முடியுமோ, அவற்றை ஒன்றாக முடிக்கலாம். ஒரே நேரத்தில் பல வேலைகள் என்பதை தவிர்க்க முடியாத சூழலில், ஒரே மாதிரியான வேலைகளை தொகுத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் Batching என்பார்கள். இதில் நம் செயல் திறனும் அதிகரிப்பதை காணலாம்.அதே போல ‘ஸ்ட்ரெஸ்’ எனப்படும் வேலைசார் மனஅழுத்தமும் இவ்வாறு மல்ட்டிடாஸ்கிங் செய்பவர்களாலேயே உணரப்படுகிறது. நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் போது, இதயத் துடிப்பு அதிகரிப்பதால் எப்போதும் பதற்றமாக உணர்கிறோம் (அதாவது, மற்றவர் கண்களுக்கு ‘சிடுசிடு’).
உணவுக்கான நேரத்தை பல வேலைகளுக்கு பகுத்து வழங்கும் போது, நாம் அளவுக்கு அதிகமாக உண்ணும் வாய்ப்புண்டு. என்ன சாப்பிட்டோம் என்பதையே உணராமல் தட்டு நிறைய சாப்பிடுவதை விட, ஒரு கவளமானாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவதில்தான் ஆரோக்கியத்தின் ரகசியம் இருக்கிறது. சில மாணவர்கள் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் படிப்புக்காக செலவிட மாட்டார்கள். ஆனால், அந்த நேரம் படிப்புக்காக மட்டும்தான். வேறு சிலரோ சாப்பிடும் போதும், தொலைக்காட்சி பார்க்கும் போதும் கூட கையில் புத்தகத்துடனே காட்சியளிப்பார்கள்.
இருவகையினரும் ஒரே அளவு மதிப்பெண் பெற்றாலும், முன்னவர்களிடம் எப்போதும் ஓர் உற்சாகத்தை பார்க்கலாம். இதையே நம் எல்லா வேலைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஜென் துறவிகள், தேனீர் அருந்தும் முறையில் வாழ்க்கை தத்துவத்தை போதிப்பார்கள். ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடிப்பது ஒரு ஜென் முறை. அதில் அவர்கள் சொல்ல வருவது, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பிரக்ஞையுடன் வாழ்வதை பற்றியே. தினம் தினம் செல்போனில் பேசிக்கொண்டே நீங்கள் கடக்கும் சாலையில் அழகிய பூக்கள் மலர்ந்திருக்கக்கூடும்.
நேசத்தோடு எதிர்படுபவரின் கண்களை பார்த்து புன்னகைக்கும் நொடியில் வாழ்நாளுக்கான ஒரு நட்பு அமையலாம். கவனமாக பதில் சொல்ல முயன்றால், உங்கள் குழந்தை நாளை அறிவியலையே கூட தன் வாழ்க்கை என தீர்மானிக்கலாம். கூடுதலாக உறவுகள் மேம்படும் என்பதை சொல்லவே தேவையில்லை. அலுவலகமோ, வீடோ, உறவினரோ, மனிதர்களோடு செலவிடும் நேரத்தில் அவர்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டால், அவர்கள் பேச்சால் வெளிப்படுத்தாத பல விஷயங்களையும் சேர்த்தே கண்டுகொள்வீர்கள்.
மனைவியின் புது ஹேர்ஸ்டைலை அன்றே பாராட்டும் கணவர்கள் மிக எளிதாக நல்ல பெயரை தட்டிப்போகிறார்கள். சினிமாவில் வேண்டுமானால், நடிகர் பாடிக்கொண்டே ஆடட்டும். பத்தி பத்தியாக பேசிக்கொண்டே சண்டையிடட்டும். அந்த சினிமாவை வீட்டை விட திரை அரங்கில் பார்ப்பது பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறதென்றால், காரணம், அங்கே குவியும் நம் கவனம். வேறு தொந்தரவுகள் அற்ற சூழல்.
பறவைகளோ, மீன்களோ, வேறு எந்த இயற்கையோடு இசைந்து வாழும் உயிரினமோ மல்ட்டிடாஸ்கிங் செய்வதில்லை. மரங்கொத்தியின் முயற்சியை, கொக்கின் கவனத்தை, பசுவின் நிதானத்தைத்தான் நாமும் செயல்களுக்கு தர வேண்டும். அதுவே இயற்கை. அந்த வாழ்க்கைமுறை நம்மை ஒருபோதும் கைவிடாது.
(சிந்திப்போம்!)