கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா?
Published : 23 Mar 2018 09:39 IST
அர்வா மஹ்தாவி THE HINDU TAMIL
இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும் - நீங்கள் ஒரு அடிமுட்டாள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தொடக்கத்தில் சொன்ன கருத்துதான் இது. 2004-ல் ஃபேஸ்புக்கை உருவாக்கத் தொடங்கியபோது (அப்போது அவருக்கு வயது 19) தன் நண்பர்களுக்குத் தொடர்ந்து குறுந்தகவல்களை அனுப்பிய மார்க், தான் உருவாக்கிவரும் சமூக வலைதளத்தில் 4,000 பேர் இணைந்திருந்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது சொன்னார்: “மக்கள் தங்கள் சுயவிவரங்களை என்னிடம் வழங்கியிருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. என்னை நம்புகிறார்கள், அடிமுட்டாள்கள்!”
இந்தப் பதினான்கு ஆண்டுகளில், மார்க் ஸக்கர்பெர்க்கை நம்பிய ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 4,000-லிருந்து 200 கோடியாகியிருக்கிறது. மார்க்கும் வளர்ந் திருக்கிறார். 2010-ல் நியூயார்க்கர் இதழுக்கு அளித்த பேட்டியில், “பெரும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு சேவையைக் கட்டமைக்கிறோம், அதன் மீது பலர் நம்பிக்கை கொள்கிறார் கள் என்றால், நாம் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும், அல்லவா? நான் முதிர்ச்சியடைந்திருக்கிறேன், நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். ஆனால், தன்னை நம்பி மக்கள் வழங்கிய சுயவிவரங்களை மதிப்பது, பாதுகாப்பது தொடர்பாக மார்க் நிஜமாகவே கற்றுக்கொண்டிருக்கிறாரா? இல்லை என்றே சமீபத்திய நிகழ்வுகள் சொல்கின்றன.
தரவுகள் அறுவடை
கோடீஸ்வரர் ராபர்ட் மெர்சர் அளித்த நிதியில் இயங்கிவரும் ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ நிறுவனம், எப்படி 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளில் உள்ள தரவுகளைப் பெற்று, தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது என்று ‘அப்சர்வர்’ இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இல்லாத அளவுக்குத் தரவுகள் ‘அறுவடை’ செய்யப்பட்டிருப்பதாக ‘அப்சர்வர்’ இதழ் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்திருக்கும் இந்த விஷயம் பற்றித் தெரிந்திருந்தும், தனது பயனாளர்களிடம் இதுகுறித்துத் தெரிவிக்கவில்லை ஃபேஸ்புக்.
அதுமட்டுமல்ல, தொடக்கத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இதற்குப் பொறுப்பேற்காமல் தங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்று ட்விட்டரில் வாதம் செய்துகொண்டிருந்தார்கள். “தரவுகள் கசியவிடப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது” என்றார் ஃபேஸ்புக் துணைத் தலைவர் ஆண்ட்ரூ போஸ்வர்த். “மக்கள் தங்கள் தரவுகளை மூன்றாம் தரப்புச் செயலிகளிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினார்கள். இதுதொடர்பான ஒப்பந்தங்களை அந்தச் செயலி கள் பின்பற்றவில்லை என்றால், அது விதிமீறல். இவ்விஷயத்தில், எந்தக் கணினியும் ஊடுருவப்படவில்லை, கடவுச்சொல், தகவல்கள் திருடப்படவில்லை, ‘ஹேக்’ செய்யப்படவில்லை” என்றார் அவர். கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் செயல் ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியைவிட, ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த எதிர்வினைதான் பெரும் அதிர்ச்சி தருகிறது. இவ்விஷயத்தில், தொடர்ந்து மெளனம் சாதித்த மார்க் ஸக்கர்பெர்க், இப்போதுதான் வாய்திறந் திருக்கிறார். பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவனப் பங்கு கள் 7% சரிந்தன. அப்போதும் மார்க் ஸக்கர்பெர்க் அமைதி யாக இருந்தார். தற்போது, “இப்படி நடந்துவிட்டது உண்மையிலேயே வருத்தம் தருகிறது” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை, ஒருவழியாக ஃபேஸ்புக்கி லிருந்து வெளியேறுவது என்று கடைசியாக முடிவெடுக்க ‘கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா’ விவகாரம் ஒரு காரணமாகிவிட் டது. நீண்ட நாட்களாகவே ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று முயற்சிசெய்துகொண்டிருந்தேன். விளம்பரத் துறையில் பணிபுரிந்துவருபவள் எனும் முறையிலும், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்டவற்றிலிருந்து பயனாளர்களின் தரவுகளை வைத்து மேற்கொள்ளப்படும் வணிகம் எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தவள் எனும் முறையிலும் இந்த முடிவை எடுத்திருந்தேன்.
உண்மையில், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கும் சேவைக்கு முற்றிலும் மாறாக சந்தை யாளர்களிடம் நடந்துகொள்ளும். ஆனால், இதுதொடர்பாக ஊடகங்கள் கேள்வியெழுப்பினால், இதுபோன்ற விஷயங்களில் தங்களுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இருப்பதில்லை என்று அடக்கமாகச் சொல்லிக்கொள்ளும். 2016 அமெரிக்கத் தேர்தலில் சமூக வலைதளங்களின் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தபோதும் அப்படித்தான் நடந்தது. இணையத்தில் அவமதிப்புகளும் தவறான செய்திகளும் பரவியபோது, அதைக் கையாள்வதில் தங்களுக்குப் பெரிய அளவில் அதிகாரமில்லை என்றே சமூக வலை தளங்கள் கூறின. ஆனால், விளம்பரம் செய்யப் போதுமான பணம் இருக்கிறது; உங்கள் தயாரிப்புகளை வாங்கச் செய்யும் அளவுக்கு நுகர்வோரைத் தூண்டும் வகையில் ஃபேஸ்புக் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் கதை வேறு மாதிரியாக இருக்கும். அப்போதுதான், ஃபேஸ்புக் என்பது எதையும் செய்யக்கூடிய ஒரு நிறுவனம் என்பது உங்களுக்குப் புரியும். தன்னை ஒரு சமூக வலைதளம் என்று ஃபேஸ்புக் மக்களிடம் காட்டிக்கொண்டாலும், விளம்பர நிறுவனங்கள் என்று வரும்போது தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிடும்: தான் ஒரு கண்காணிப்பு அமைப்பு என்று!
பதிவிறக்கம் செய்யலாம்
ஃபேஸ்புக் தனது பயனாளர்கள் தொடர்பான தகவல்களை எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறது என்று தெரிந்தவுடனேயே ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதிலிருந்து ஒதுங்கத் தொடங்கிவிட்டேன். மெஸெஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அதன் செயலிகளைப் பயன்படுத்து வதையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்திக்கொண்ட நான், ஃபேஸ்புக்கில் எனது கணக்கை முழுவதுமாக அழித்துவிடுவது என்று சமீபத்தில்தான் முடிவெடுத்தேன். அப்படிச் செய்வதற்கு முன்னர், ஃபேஸ்புக்கில் நான் பதிவேற்றிய எல்லாத் தரவுகளின் தொகுப்பையும் பதிவிறக் கம் செய்துவிட்டேன். ஆம், ஃபேஸ்புக் ‘செட்டிங்ஸ்’ பகுதியில் இதற்கான வசதி உண்டு. இது எளிதானது.
கவனிக்கவும்! நீங்களும் என்னைப் போல் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதல்ல என் நோக்கம். தெற்கு கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் சஃபியா நோபள் சொல்வதுபோல், ஃபேஸ்புக் என்பது பலருக்கும் இணையத்துக்கான ஒரு பாலமாக இருப்பது. பிறருடன் தொடர்புகொள்வது, சமூகக் குழுக்களை உருவாக்குவது, பங்கேற்பது என்று பல்வேறு விஷயங்களைச் செய்வதற்கு உதவிசெய்யும் ஒரே இணைய அமைப்பு ஃபேஸ்புக். இவ்விஷயத்தில் ஃபேஸ்புக்குக்கு நல்ல மாற்று ஒன்று இல்லை. உங்கள் நண்பர்களின் பிறந்த நாள் நினைவுபடுத்துவதுடன், வெவ்வேறு இடங்களில் உள்ள உங்கள் உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் ஃபேஸ்புக்கைப் போல் இன்னொரு அமைப்பு இல்லை. எனினும், பயனாளர்களின் சுயவிவரங்கள், பதிவுகள் மூன்றாம் நபர்களுக்குத் தாரைவார்க்கப்படும் சூழலில், ஃபேஸ்புக்கிலிருந்து விலகி நிற்பது சிறந்தது என்பேன்.
மதிப்பீடுகளும் விளம்பரங்களும்
கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் என்பது பெரிய அளவிலான பிரச்சினையின் சிறு துளிதான். உங்களது ‘ஆன்லைன்’ மற்றும் ‘ஆஃப்லைன்’ தகவல்கள் எப்படிக் கண்காணிக்கப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, சில செயலிகள் உங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை வைத்தே உங்களைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்ளும். நீங்கள் விளையாட்டு ரசிகரா, ஒயினை விரும்பி அருந்துபவரா என்று தெரிந்துகொள்ளும். அதனால் என்ன, நான் ஒயின் அருந்துகிறேன் என்று தெரிந்துகொண்டு எனக்குத் தேவைப்படும் தகவல்களை அது என்னிடம் விற்கிறது, அவ்வளவுதானே என்று நீங்கள் கேட்கலாம்.
ஏதோ ஒரு சில விஷயம் என்றால், அது ஒரு பிரச்சினை யாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லாத் தரவுகளும் மொத்தமாக எடுக்கப்படுகின்றது என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் தொடர்பான விசாரணையில் தெரியவரும் விஷயம் இது: ஃபேஸ்புக்கில் நீங்கள் போடும் சில ‘லைக்’குகளை வைத்தே உங்கள் பாலியல் தேர்வையும், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட விரும்புகிறீர்கள் எனும் தகவலையும் தெரிந்துகொள்ள முடியும்.
ஃபேஸ்புக் வழியாக உங்கள் செல்போனில் பல செயலி கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும். அந்தச் செயலிகள் ஃபேஸ்புக்கில் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருக்கும். இதைத் தெரிந்துகொள்ள ‘செட்டிங்ஸ்’ பகுதிக்குச் சென்று ‘ஆப்ஸ்’ எனும் பகுதியை ‘க்ளிக்’ செய்து பாருங்கள். நான் இப்படிச் செய்து பார்த்தபோது 68 செயலி களுக்கு எனது ஃபேஸ்புக் தரவுகளை எடுத்துக்கொள்ள அனுமதித்திருந்தது தெரியவந்தது - என்னை அறியாமலேயே! சில செயலிகளை நீக்கிவிட்டாலும் அவற்றால் எனது ஃபேஸ்புக் தகவல்களைப் பெற முடியும் என்று தெரியவந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
சரி, இந்தப் பிரச்சினைகளை எப்படித் தவிர்ப்பது? இணையத்தில் அந்தரங்க உரிமைகளைப் பாதுகாப்பது தொடர் பான பணியில் ஈடுபடும் ‘ஓப்பன் ரைட்ஸ் க்ரூப்’ நிறுவனத் தைச் சேர்ந்த ஜிம் கில்லாக் சொல்கிறார்: “பதிவிடுவதைக் குறைப்பது, பகிர்ந்துகொள்வதைக் குறைப்பது, மிக முக்கிய மாக ஃபேஸ்புக் பக்கங்களுக்கு (பேஜஸ்) ‘லைக்’ இடுவதைக் குறைப்பது (இதைப் பயன்படுத்தி உங்களைப் பற்றிய சித்திரத்தை ஃபேஸ்புக் உருவாக்கிக்கொள்ளும்) போன்றவை பலன் தரும். அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாத்துக்கொள்ள ‘பிரைவஸி ப்ளக் - இன்ஸ்’ போன்றவற்றைப் பயன் படுத்தலாம். நெறியாளர்களும் இதைக் கண்காணிக்க வேண்டும்.”
இணையத்தில் தங்கள் செயல்பாடுகள் குறித்த பிரக்ஞை யும் அவசியம் என்று சொல்கிறார், ‘ப்ரைவஸி இண்டர்நேஷ னல்’ எனும் அறக்கட்டளையின் தலைவர் ஃபிரடரிக் கால்தியூனர். தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை வழங்கும் அறக்கட்டளை இது. “பயனாளர்களே தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் முழு நேர நிபுணர்களாகச் செயல்பட வேண்டும் என்றில்லாமல், பயனாளர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் பொறுப்பை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஃபிரடரிக் கால்தியூனர்.
நெறியாளர்கள் மெள்ளச் செயல்படத் தொடங்கியிருக் கிறார்கள். மே 25-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘பொதுத் தகவல் பாதுகாப்பு கண்காணிப்பு (ஜிடிபிஆர்)’ நடை முறைக்கு வரவிருக்கிறது. இது, தரவுகளை நிறுவனங்களிடமிருந்து தனிநபர்கள் வசம் கொண்டுசெல்வதற்கான மிக முக்கியமான நடவடிக்கை. “ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் நிறுவனமாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பொருட்களையோ சேவை களையோ விற்கிறது என்றால், அந்நிறுவனமும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். தரவுகள் பாதுகாப்பில் விரிவான நடைமுறைகள் இல்லாத அமெரிக்கா போன்ற நாடுகளில் இது முக்கியமானது” என்கிறார் ஃபிரடரிக் கால்தியூனர்.
சிக்கலான தருணம்
‘சோஷியல் க்ரெடிட்’ எனும் பெயரில் பொதுமக்கள் தொடர்பான அரசின் தரவுகளை வைத்து ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறது சீனா. அதன் அடிப்படையில் மக்கள் பெறும் மதிப்பெண்கள் குறைவாக இருந்தால், அவர்கள் ரயிலிலும் விமானத்திலும் பயணம் செய்யத் தடை விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்திருக்கிறது. இதுபோன்ற மதிப்பீடுகளை வைத்து நமது வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பது சீனா மட்டுமல்ல. நாம் அனைவரும் கண் காணிப்பு முதலாளித்துவத்தின் சமூக அரசியல் விளைவு களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைத்தான் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் உணர்த்துகிறது.
நெறியாளர்களோ, கட்டுப்பாட்டு அமைப்புகளோ நம்மைக் காப்பாற்றும் என்று நாம் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. மாற்றங்கள் நிகழும் என்று வழக்கம்போல் ‘லைக்’ இடுவதிலும் பகிர்ந்துகொள்வதிலும் நேரத்தைக் கழிக்க முடியாது. நம்மை ஆட்கொண்டிருக்கும் கார்ப்பரேட் கண் காணிப்பு மேலும் மோசமடையலாம் எனும் சிக்கலான தருணத்தில் நாம் இருக்கிறோம் என்று கருதுகிறேன். எனவே, சமூக வலைதளங்களிலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகியிருங்கள். ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடுவதன் மூலம் நாம் கண்காணிக்கப்படுவதற்கு முடிவு கட்டிவிட முடியாதுதான். ஆனால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை நாம் இனியும் நம்பப்போவதில்லை எனும் உறுதியான செய்தியை இதன்மூலம் அவர்களுக்குத் தெரிவிக்க முடியும்!
© தி கார்டியன்
தமிழில்: வெ.சந்திரமோகன்