நலம் தரும் நான்கெழுத்து 27: கண்டிப்பு - கத்தி மேல் நடக்கும் கலை
Published : 24 Mar 2018 11:12 IST
டாக்டர் ஜி. ராமானுஜம்
THE HINDU TAMIL
வயதாவதால் நாம் விளையாடுவதை நிறுத்துகிறோம் என்பது உண்மையல்ல. விளையாடுவதை நிறுத்துவதால்தான் நாம் வயதானவர்கள் ஆகிறோம்
– பெர்னார்ட் ஷா
குழந்தைகளைப் போல் கள்ளம் கபடம் அற்றவர்கள் யாரும் இல்லை. அவர்கள் தங்களது இயல்பான நடவடிக்கைகளைச் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ள மாட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர் வந்தால் ‘அப்பா! ஓசி காபி குடிக்க வருவார் என்பாயே, அந்த அங்கிள் வந்திருக்கிறார்!’ எனச் சத்தமாகச் சொல்வார்கள்.
பொது இடங்களில் தங்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் இருப்பவற்றைச் சென்று தொட்டுப் பார்ப்பது, நினைத்த பொருட்கள் உடனேயே கிடைக்க வேண்டும் என நினைப்பது, கோபம், அழுகை போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தாமல் அப்படியே வெளிப்படுத்துவது போன்றவை குழந்தைகளின் இயல்பு. இதைப் புரிந்துகொண்டாலே காரணம் இல்லாமல் குழந்தைகளைக் கண்டிக்க மாட்டோம்.
பல நேரத்தில் குழந்தைகளைக் கண்டிப்பது என்பது நாம் விரும்பியவாறு அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்பதால்தான். எல்.கே.ஜி. படிக்கும் குழந்தை, படிப்பு பற்றிய அக்கறையின்றி நோட்டில் கிறுக்குகிறதே எனக் கண்டிப்பதும், ஒன்றாம் வகுப்புக் குழந்தை, நாம் கிட்டத்தட்ட பிச்சையெடுத்து ஃபீஸ் கட்டிய பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன் எனச் சொல்வதற்கு அடிப்பதும் அதனால்தான்.
அப்படியானால் குழந்தைகளைக் கண்டிக்கவே கூடாதா? அவர்கள் போக்கிலேயே சீரழிய விடுவதா என்றால், கட்டாயம் கண்டிக்கத்தான் வேண்டும். கடிவாளம் இல்லாத குதிரைபோல்தான் கண்டித்து வளர்க்கப்படாத குழந்தைகளும். ஆனால், கண்டிப்பது என்பது பலரும் நினைப்பதுபோல் கண்மூடித்தனமாக அடித்தோ திட்டியோ தண்டிப்பது அல்ல.
நாமே முன்மாதிரி
குழந்தைகள் இயல்பாகவே தங்களுக்குப் பிடித்த செயல்களை மட்டுமே செய்வார்கள். ஆகவே, நீங்கள் எதிர்பார்க்கும் செயலைச் செய்ய வேண்டுமானால் அதை அவர்களுக்குப் பிடித்ததாக மாற்ற வேண்டும். இட்லி சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, அதையே கொஞ்சம் சாண்ட்விட்ச் போல் அலங்காரம் செய்து ‘இட்லிவிட்ச்’ என ரஷ்ய உணவுபோல் பெயரிட்டுச் சாப்பிட கொடுத்தால் மறுக்குமா? அது போன்றே படிக்க மறுக்கும் குழந்தைக்குக் கதைகள், விடுகதைகள், விளையாட்டு, செயல்முறைகள் எனப் படிப்பைச் சுவாரசியமாகத் தர வேண்டியது கல்வி நிறுவனங்கள், பெற்றோரின் கடமை.
அதேபோல் நமக்குப் பிடிக்காத செயல் ஒன்றை அவர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமானால், அதைவிட சுவாரசியமான ஒரு செயலைச் செய்யச் சொல்ல வேண்டும். செல்போன் பார்க்கக் கூடாது என நினைத்தால் குழந்தையை அருகிலிருக்கும் பூங்காவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் நம்மைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம் . இடது கையில் செல்போனை வைத்துப் பார்த்துக்கொண்டே அவர்களை ‘மொபைலா பார்க்கறே, கெட்ட பழக்கம்!’ என்றால் அது போங்கு ஆட்டம்.
இளமையிலேயே நல்ல பழக்கம்
‘தவறை வெறு. தவறு செய்யும் மனிதனை வெறுக்காதே’ என்பார்கள். அதுபோல் ஒரு செயலைக் கண்டிக்கும்போது அச்செயல் மட்டும்தான் நமக்குப் பிடிக்கவில்லை, அந்தக் குழந்தையையே ஒட்டுமொத்தமாக வெறுக்கவில்லை என்பதை அந்தக் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும். ‘இதை மட்டும் செய்யாமல் இருந்தால், நீ எவ்வளவு நல்ல பையன் தெரியுமா?’ என்பதற்கும் ‘நீ எதற்குமே லாயக்கில்லாதவன்’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
அதுபோல் குழந்தைகளுக்கு ஒழுக்கங்களையும் நல்ல பழக்கங்களையும் எவ்வளவு சீக்கிரம் அறிமுகப்படுத்துகிறோமோ, அவ்வளவு நல்லது. ஐந்தில் வளைக்காமல் ஐம்பத்து எட்டில் ரிட்டயர் ஆகும்போது, வளைக்க நினைத்தால் ஒடிந்துவிடும்.
இயல்புடன் இருக்கவிடுங்கள்
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை உணர்ந்து பொதுமைப்படுத்திப் பிறருடன் ஒப்பிடாமல் இருப்பதும் முக்கியம். சமீபத்தில் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் த்ரூதோ நம் நாட்டுக்கு வந்திருந்தபோது, அவருடைய மகன் பொது இடங்களில் இஷ்டப்படி விளையாடி அலப்பறை செய்துகொண்டிருந்தான். அதைவிட அழகு, அதை அவனுடைய பெற்றோர் தடுக்காமல் ரசித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகளை இயல்பாக விடுவதற்கும் நமது வழிக்குக் கொண்டுவருவதற்கும் இடையே உள்ள சமநிலையை அடைய முடிந்தால் அதுவே நலம்தரும்.
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
No comments:
Post a Comment