Sunday, March 25, 2018

அபூர்வ மருத்துவர்கள்: ‘மெர்சல்’ டாக்டர்!

Published : 24 Mar 2018 11:13 IST

கட்டுரை, படங்கள்: நீல் கமல்

THE HINDU TAMIL


என்றும் புன்னகை தவழும் முகம். அன்பு மிகுந்த வரவேற்பு. இயன்றவர்களுக்கு மருத்துவர். இயலாதவர்களுக்கு ‘இலவச மருத்துவர்’. இதனாலேயே ‘ஏழைகளின் நண்பன்’ என்று அழைக்கப்படுபவர். இந்தப் புகழுக்குச் சொந்தக்காரர் டாக்டர் திருவேங்கடம். ‘இலவசம்’ என்ற சொல் உயிரற்று வரும் வேளையில், தனது சேவையின் மூலம் அதற்குப் புதிய வைத்தியம் பார்க்கிறார்.

சென்னை எருக்கஞ்சேரி, வியாசர்டிபாடியில் உள்ளது அவரது மருத்துவமனை. 70-களிலிருந்தே இலவச மருத்துவ சேவையைத் தொடங்கியவர், காலத்தின் நிர்பந்தம் காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் குறைந்த கட்டணத்துக்கு மருத்துவம் பார்க்கிறார். அந்தக் கட்டணம்… 2 ரூபாய்தான்! அதுவும் நோயாளிகள் விருப்பப்பட்டு கொடுத்தால்..!

சாத்தியமாகும் சிகிச்சை

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, சில காலம் சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினார். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மூலம் பெட்ரோலியத் துறை சார்ந்த பல்வேறு தொழிலாளர்களுக்குத் தனது மருத்துவச் சேவையை அளித்து வரும் இந்த ‘2 ரூபாய்’ மனிதநேயருக்கு, கடந்த 14-ம் தேதி 2017-ம் ஆண்டுக்கான ‘சிறந்த மனிதர்’ விருதை வழங்கிக் கவுரவித்துள்ளது வி.ஐ.டி. கல்வி நிறுவனம்.



காலை 9.30 முதல் பகல் 12.00 மணிவரை வியாசர்பாடியிலும், இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை எருக்கஞ்சேரியிலும் தனது மருத்துவ சேவையை அளித்து வருபவரிடம், மருத்துவம் வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் இலவச மருத்துவ சிகிச்சை சாத்தியமா என்று கேட்டால், “நிச்சயம் சாத்தியம்தான்.

நாம் பயன்படுத்தும் மருந்துகளில் 90 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டு மருந்து உற்பத்தியை நாம் மேம்படுத்த வேண்டும். மேலும் ஈ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகளை 10 ரூபாய் முதல் 50 ரூபாய்க்குள் அளிக்க வேண்டும். இவையே இலவச மருத்துவத்தை விரிவுபடுத்துவதற்கான முதல் படி!” என்கிறார்.

நீடூழி வாழ.. நட!

மருத்துவம் சரி… நோயே வராமல் தடுக்க இவர் கூறும் வழி..? “நிறைய நடை. சுறுசுறுப்பான நடை. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள நேரமில்லை என்பவர்கள், நள்ளிரவில் கூட நடக்கலாம்” என்கிறார்.

‘5 ரூபாய் டாக்டராக’ விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ஹிட்! ஆனால் நிஜத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவச் சேவை அளிக்கும் இவரே, உண்மையான ‘மெர்சல்’ அரசன்!

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024